ஒரு நாள் போதுமா?




நான் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் 30 வயது இளைஞன். உடற்பயிற்சி மீது ஆர்வம் இருந்தாலும் என்னால் தொடர்ந்து செய்ய முடியவில்லை. விடுமுறை தினத்தில் மட்டும் செய்தால் போதுமா?
அப்படி செய்வதில் தவறு எதுவும் இருக்கிறதா ?
- ராஜேந்திரன் தனபால், சேலம்

ஐயம் தீர்க்கிறார் உடற்பயிற்சி நிபுணர் முனுசாமி.‘‘இன்றைய அவசர வாழ்க்கையிலும், இடைவிடாத வேலை சுமைகளுக்கிடையிலும் விடுமுறை நாட்களிலாவது உடற்பயிற்சி செய்யலாமே என்ற உங்கள் எண்ணத்தை முதலில் பாராட்டுகிறேன்.

பொதுவாக, உடற்பயிற்சிகளை வாரத்தில் 6 நாட்கள் செய்துவிட்டு ஒருநாள் ஒய்வு எடுத்து கொள்வதுதான் சிறந்தது. காலமாற்றத்தால் இது அப்படியே தலைகீழாகி, ‘ஒருநாள் மட்டும் உடற்பயிற்சி செய்யலாமா’ என்கிற அளவுக்கு நிலைமை மாறிவிட்டது.

நேரமின்மை காரணமாக இதை குற்றமாக சொல்ல முடியாது. ஆனால், வாரம் முழுவதும் எந்த இயக்கமும் இல்லாமல் உடலை ஓய்வாக வைத்துவிட்டு, திடீரென ஒருநாளில் உடலுக்கு அழுத்தம் கொடுக்கும்போது தசைகளில் வலி போன்ற பக்கவிளைவுகள் ஏற்படுவதுடன், நாம் எதிர்பார்க்கிற பலனும் கிடைக்காது.

அதனால், விடுமுறை நாட்களில் உடற்பயிற்சி செய்வதற்கு ஏற்ற வகையில் நாள்தோறும் சின்னச்சின்ன பயிற்சிகள் மூலமாக நம் உடலை தயாராக வைத்திருக்க வேண்டும். சின்னதாக நடைபயிற்சி, படிகளில் ஏறி, இறங்குவது, விளையாட்டுகள் என்று உடலை ஃப்ளெக்ஸிபிளாக வைத்திருந்தால் விடுமுறை நாட்களில் உடற்பயிற்சி செய்யும்போது சிரமப்பட வேண்டியிருக்காது. உடற்பயிற்சியின்மீதான ஆர்வமும் குறையாமல் இருக்கும்.

முடிந்தால், வாரத்தில் 4 நாட்கள் உடற்பயிற்சிகள் செய்துவிட்டு, மீதி 3 நாட்கள் ஓய்வு எடுக்கலாம். இது முழுமையான பலன் தரும். விடுமுறை நாட்களுக்கு ஏற்றவாறு உடற்பயிற்சி செய்வதற்கு நீங்கள் ஒரு உடற்பயிற்சி நிபுணரைக் கலந்தாலோசிப்பது இன்னும் சிறந்தது.’’

- விஜயகுமார்
படம் : ஏ.டி.தமிழ்வாணன்