நலம் தரும் கொள்ளு ரசம்



கிச்சன் டாக்டர்

‘குளிர்காலத்தில் ஆஸ்துமாவின் அவதியைத் தடுப்பதற்கும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதற்கும், உடலை வலுவாக்குவதற்கும் கொள்ளு ரசம் எளிமையான வழி’ என்கிறார் சித்த மருத்துவர் கிறிஸ்டியன்.

‘‘உடலின் குற்றங்கள் என்று சொல்லப்படும் வாதம், பித்தம் மற்றும் கபம் எனும் மூன்றில் கபத்தினை அழித்து உடலுக்குப் பாதுகாப்பை அளிக்கிறது கொள்ளு. கொள்ளுவுக்கு வெப்பத்தினை ஏற்படுத்தும் தன்மை உண்டு. அதாவது, உடலில் நடக்கும் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டி செயல்படுத்தும் ஆற்றலுடையது. இதனால், இந்த குளிர்காலத்துக்கு ஏற்ற சிறந்த உணவு என்று கொள்ளுவை சொல்லலாம்.

கொள்ளுவை கஞ்சியாகவும், துவையலாகவும், தொக்கு போலவும் செய்து பயன்படுத்துகிறார்கள். இவற்றில் ரசமாகவும் வைத்து அவ்வப்போது உணவோடு சேர்த்துக்கொண்டு வந்தால், சுவையான உணவாகவும் ஆகிவிடும்; உடலுக்கு நலம் தரும் மருந்தாகவும் ஆகிவிடும். இந்த ரசம் மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில் அவதிப்படும் ஆஸ்துமா மற்றும் கபம் சம்பந்தமான நோய் உள்ளவர்களுக்கு அதிக நிவாரணம் அளிக்கும்.

கொள்ளு ரசம் எப்படி வைப்பது?
தேவையான பொருட்கள்:
கொள்ளு பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்(வறுத்தது)
தக்காளி - 1
சீரகம் - ஒரு ஸ்பூன்
மிளகு - அரை ஸ்பூன்
தனியா - கால் ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 2
பூண்டு - 2 பற்கள்
உப்பு - தேவையான அளவு
கடுகு, எண்ணெய் - தாளிக்க

செய்முறை :எண்ணெய் சேர்க்காமல் வெறும் வாணலியில் கொள்ளுவை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு கொள்ளு பருப்புடன் சீரகம், மிளகு, வெங்காயம், பூண்டு மற்றும் தனியாவையும் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளுங்கள். தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு தாளித்து அத்துடன் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். நன்கு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள விழுது மற்றும் உப்பு சேர்த்து, தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கினால் கொள்ளு ரசம் ரெடி. இந்த கொள்ளு ரசத்தை சாதத்துக்கும் பயன்படுத்தலாம் அல்லது மிதமான சூட்டில் சூப் போலவும் குடிக்கலாம்.

ஆஸ்துமா நோயாளிகளுக்கு கொள்ளு ரசம் மிகவும் நல்லது. கணையத்தில் சுரக்கும் இன்சுலின் ஹார்மோனின் செயல்திறனை கொள்ளு அதிகரிப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கும் கொள்ளு ரசம் சிறந்த உணவு. குடலில் இருக்கும் செரிமான என்சைம்களான Glucosidase மற்றும் Amylase-ன் செயல்பாட்டைக் குறைப்பதன் மூலம் கார்போஹைட்ரேட் கிரகிக்கும் சக்தியைக் கொள்ளு குறைப்பதுதான் இதன் ரகசியம்.

அதேபோல, சாபோனின்கள்(Saponins) என்ற வேதிப்பொருட்கள் கொள்ளுவில் உள்ளதால் கொழுப்பின் அளவு உடலில் குறைவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ‘கொளுத்தவனுக்கு கொள்ளு’ என்ற பழமொழியில் இதை கேள்விப்பட்டிருப்போம்.

அதிகமான உடல் எடையைக் குறைப்பதற்கு மட்டுமல்லாமல், இளைத்து தளர்ந்த உடலை வலுவடைய செய்வதற்கும் பயன்படுவது கொள்ளுவின் தனிச்சிறப்பு. கொள்ளு கஞ்சியைத் தொடர்ந்து உண்டு வந்தால், அதே எள்ளை கையில் பிசைந்து எண்ணெய் பிழியும் அளவுக்கு பலம் உண்டாகும் என்று சித்த மருத்துவம் இதற்கு விளக்கம் கொடுக்கிறது.

இதேபோல உடல் பருமனால் மூட்டுகளில் தேய்மானம் மற்றும் இதயத்தின் ரத்த ஓட்ட பாதிப்புகள் போன்றவை கொள்ளுவை சேர்த்துக் கொள்வதால் தவிர்க்க முடியும். மருந்துகள் மற்றும் உடலினைத் தாக்கும் நஞ்சுகளும் இவ்வண்ணமே கொள்ளுவால் முறிக்கப்படுகிறது!’’

- தோ.திருத்துவராஜ்
 படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்.