டியர் டாக்டர்




‘இனி தலையெழுத்தை மாற்றலாம்’ என்ற தலைமாற்று சிகிச்சை குறித்த அட்டைப்படக் கட்டுரையை படித்து அசந்துபோனேன். மருத்துவத்துறையின் வளர்ச்சி எந்த உயரத்தை எட்டியிருக்கிறது என்பதன் உச்ச உதாரணம் இது. விஞ்ஞானத்தின் விந்தைகளை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை!
- இரா. வளையாபதி, தோட்டக்குறிச்சி.

மருத்துவர் நோயாளிக்கு உதவுவது இருக்கட்டும்; நோயாளிகளும் மருத்துவருக்கு உதவ வேண்டும் என்று மாத்தி யோசித்த கட்டுரை மிக எளிதாகவும், புரியும்படியாகவும் இருந்தது. ‘சித்த மருத்துவமே முதல் மருத்துவ முறையாகும்’ என்ற தகவல் சித்த மருத்துவத்தின் மீது முழு நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டது. குங்குமம் டாக்டருக்கு ஒரு சல்யூட்.
- சு.இலக்குமணசுவாமி, திருநகர்

வெற்றிலையில் இத்தனை மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கிறதா என்று ஆச்சரியப்பட வைத்தது மூலிகை மந்திரம்.
வெறுமனே சத்துக்கள் உள்ளது என்று மேலோட்டமாக சொல்லாமல் அறிவியல் பூர்வமாக சித்த மருத்துவர் சக்தி சுப்பிரமணியன் விளக்கியது சிறப்பு.
- வெ.லட்சுமி நாராயணன், வடலூர்.

அதே 15 ரூபாய் விலையில் இலவச இணைப்பு காலண்டர் தந்து அசத்தி விட்டார் குங்குமம் டாக்டர். வாசகர்கள் சார்பாக நன்றி!
- மயிலை கோபி, சென்னை-83.

‘ஒன்றல்ல இரண்டு’ என கர்ப்பப்பை பற்றி அறியாத பல கருத்துக்களை சொல்லிய டாக்டர் ஜெயராணி, மகளிர்(க்கு) மட்டும் கிடைத்திட்ட பொக்கிஷம். ‘கூந்தல்’ பற்றிய பல விஷயங்கள் நீளமாகத் தொடர்ந்தாலும், மறக்க முடியாத மணம் தந்துவிட்டுத்தான் சென்றிருக்கிறது.
- சுகந்தி நாராயணன், வியாசர்பாடி.