உருளுது... புரளுது!



தூக்கம்

டபுள் காட் பெட்டில் சிங்கிளாக படுத்தாலும் உருண்டு புரண்டு கீழே விழுந்து காயங்களை வாங்கிக் கொள்பவரா நீங்கள்? ஒவ்வொரு முறை உறங்கப் போகும் முன்பும் ‘புரளக் கூடாது’ என மனதுக்குக் கட்டளையிட்டு விட்டுதான் தூங்குவீர்கள். என்னதான் கட்டுப்பாடாக இருந்தாலும் புரள்வது நிற்காது. சிலர் இதனைப் பொருட்படுத்தவே மாட்டார்கள். பலருக்கு இது ஏன் என்ற கேள்வி இருக்கும். பதில் அளிக்கிறார் தூக்கவியல் மருத்துவ நிபுணர் ராமகிருஷ்ணன்.

“தூக்கத்தைப் பொறுத்தவரை எது நார்மல் என்று சொல்வது கடினம். சிலர் நேரத்திலேயே படுத்து விடுவார்கள். சிலருக்கு விளக்கொளி பட்டாலே எழுந்து விடக்கூடிய றீவீரீலீt sறீமீமீஜீ எனும் தன்மை இருக்கும். இன்னும் சிலர் தலையில் தண்ணீர் ஊற்றி எழுப்பினாலும் கூட எழுந்திருக்க மாட்டார்கள். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தன்மை.

தூக்கத்தில் உருண்டு புரள்வது கூட இந்த வகையறாக்களில் ஒன்றுதான். இதை முழுவதுமாக ‘நார்மல்’ என்றோ, ‘அப்நார்மல்’ என்றோ சொல்லிவிட முடியாது. மருத்துவ பரிசோதனைக்குப் பிறகுதான் உறுதிப்படுத்த முடியும். தூக்கத்தில் உருள்வது சிலருக்கு சாதாரணமான ஒன்றாக இருக்கலாம்... அல்லது அதற்கு வேறு சில காரணங்கள் இருக்கலாம்.

படுக்கையில் சிலருக்கு கால் பரபரத்துக்கொண்டே இருக்கும்... எழுந்து நடக்கலாம் என்று கூட தோன்றும். இப்படி எந்நேரமும் கால்கள் இயங்குவதற்கான தூண்டுதலோடு இருப்பதற்கு Periodic limb movement disorder என்று பெயர்.

இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு தூங்கும்போதும் கால்கள் இயங்குவதால் உருள்வார்கள். தூங்கும்போது சுவாசக்குழாய் சுருங்கி, ஆக்சிஜன் அளவு குறைந்து (sleep apnea) குறட்டை விடுபவர்களுக்கும் கை, கால்கள் இயங்கும். கர்ப்பிணிகள், ரத்தசோகை, நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு, உடல் வலி இருப்பவர்கள் பெரும்பாலும் உருள்வார்கள்.

இதுபோன்ற எந்தப் பிரச்னையும் இல்லாதவர்களும் உருள்வார்கள். தூக்கத்தில் உருள்பவர்கள் நீங்களாக ஒரு முடிவெடுத்துக் கொள்ளாமல் மருத்துவரை அணுகும்போது உங்களுடைய தூக்கம் ‘ஸ்டடி’ செய்யப்பட்டு ஆக்சிஜன் அளவு சோதிக்கப்படும். அதற்குப் பிறகுதான் அதன் அசாதாரண தன்மை பற்றி முடிவு செய்யப்பட்டு சிகிச்சை வழங்கப்படும்.

பொதுவாக உருளாத, புரளாத நல்ல தூக்கத்துக்கான வழி ரொம்பவே சிம்பிள்தான்... உடற்பயிற்சி செய்தல், மாலை 4 மணிக்கு மேல் டீ, காபி குடிக்காதிருத்தல், தூங்கும் முன் வெந்நீரில் குளித்தல், பருமனை கட்டுப்படுத்துதல் போன்றவற்றை கடைப்பிடித்தாலே போதும்!’’ என்கிறார் ராமகிருஷ்ணன்.

கர்ப்பிணிகள், ரத்தசோகை, நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு, உடல் வலி இருப்பவர்களே பெரும்பாலும் தூக்கத்தில் உருள்வார்கள்...

- கி.ச.திலீபன்