பேப்பர் கவர் தயாரிப்பில் மாதம் ரூ. 87,000 சம்பாதிக்கலாம்! நீங்களும் தொழில் முனைவோர் ஆகலாம்!



சுயதொழில்

சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால் பிளாஸ்டிக்கிற்கு (நெகிழி) அடுத்தாண்டு முதல் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது  அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்த அறிவிப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக சூழல் ஆர்வலர்களால் பார்க்கப்படுகிறது. தொடர்ச்சியான சுற்றுச்சூழல்  விழிப்புணர்வு, மறுசுழற்சியில் நவீன தொழில்நுட்பம் என நெகிழி ஒழிப்பில் அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளும்பட்சத்தில் 20 ஆண்டுக்கால  பழக்கத்தை அடுத்த சில மாதங்களில் நிச்சயமாக மாற்றம் கொண்டுவர முடியும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் சூழல் ஆர்வலர்கள்.

பிளாஸ்டிக் பொருட்களின் மீதான விழிப்புணர்வு விஷயத்தில் முதலில் தவிர்க்கப்பட வேண்டியதாக உள்ளது கேரி பேக் என்று சொல்லப்படும்  பிளாஸ்டிக் கவர்கள்தான். அப்படி கேரி பேக்குகள் தவிர்க்கப்படும் சூழலில் பேப்பர் கவர் தயாரிப்புகள்தான் அந்த இடத்தைப் பிடித்துவருகிறது. இந்த  பேப்பர் கவர் மூலம் தாம்பூலப்பை கூட செய்யமுடியும். தற்போது பெரும்பாலான ஆயத்த ஆடைகள் தயாரிப்புத் துறை, மருத்துவத் துறை மெடிக்கல்  சென்டர்களில் ஸ்கேன் ரிப்போர்ட் கவர், பேக்கரி மற்றும் மளிகைக்கடை போன்றவை இந்த பேப்பர் கவர் மெட்டீரியல்கள் பயன்பாட்டைத்  தொடங்கிவிட்டன.

வழக்கமாக ஒரேமாதிரியான தயாரிப்பாக இல்லாமல், புதிய புதிய டிசைன்களில் முயற்சித்தால் விற்பனையிலும் வருமானத்திலும் வெற்றி நிச்சயம்.
‘‘கேரி பேகுகள் ஒழிக்கப்படும்பட்சத்தில் துணி பைகள் சற்று விலை அதிகம் என்பதால் நிறுவனங்கள் மத்தியில் பேப்பர் கவருக்கு நல்ல வரவேற்பு  உள்ளது. தேவைக்கேற்ற தடிமனில் இதனை தயாரிக்க முடியும்.  அரசின் மானியம் பெற்று இத்தொழில் தொடங்கலாம். இதில் கூடுதல் சிறப்பு  என்னவென்றால், இதைத் தயாரிக்கும் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் மிகக் குறைவு என்பதால் வருமானத்துக்கு பஞ்சமிருக்காது.

கோயம்புத்தூரில் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக எஸ்.கே. மெஷின் என்ற பெயரில் ஆட்டோமேட்டிக், செமி ஆட்டோமேட்டிக் பேப்பர் கவர் மேக்கிங்  மெஷின் தயாரித்து விற்பனை செய்வதோடு அதுகுறித்த செயல்முறை விளக்கம் மற்றும் பயிற்சியும் அளித்து வருகிறோம்’’ என்று கூறும் சிவகுமார்  இத்தொழில் தொடங்குவதற்கு வழங்கிய திட்டமதிப்பீடு, வரவு செலவு விவரங்களைப் பார்ப்போம்...

சிறப்பம்சங்கள்


* பிளாஸ்டிக் பைகள் அரசினால் தடை செய்யப்பட்டிருப்பதால் இந்த பேப்பர் கவர்களின் தேவை அதிகம்.
* எளிதில் மக்கும் தன்மையுடைய பேப்பர் கவர்களை குறைந்த விலையில் தயாரிக்க முடியும்.
* இதன் மூலப்பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கிறது.
* இதனை கேரி பையாகவும் பயன்படுத்தலாம். பல்வேறு தடிமனில் இதனை தயாரிக்கலாம்.
* இதன் தேவை அதிகம். நல்ல லாபம் தரக்கூடிய தொழில்.
* இந்தத் தொழிலை அரசு மானியத்துடன் கடன் பெற்று தொடங்கலாம்.

திட்ட மதிப்பீடு : ரூ.7.61 லட்சம் முதலீடு

(தேவையான இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்கள்)
இடம் - வாடகை
இயந்திரங்கள் - ரூ.6 லட்சம்
பேப்பர் ரோல் - 5 டன்
(ஒரு டன் விலை ரூ.30,000 x 5 டன் = ரூ.1,50,000)
இதர பொருட்கள்
(பசை ஒரு கிலோ ரூ.15 x 150 = ரூ.2,250
வாட்டர் பேஸ் இங்க் ஒரு கிலோ ரூ.150 x 60 = ரூ.9,000)
மொத்தம் - ரூ.7,61,250

தயாரிப்பு முறை

பேப்பர் கவர் தயாரிக்கும் மெஷினில் பேப்பர் ரோலை பொருத்த வேண்டும். இந்த பேப்பர் ரோல் பல்வேறு அளவுகளில் கிடைக்கும். நமக்கு தேவையான  அளவை நாம் பொருத்திக்கொள்ளலாம். மெஷினில் நம் கடை மற்றும் நிறுவனத்தின் பெயர் பிரின்ட் செய்வதற்கான பிரின்டிங் வசதியும் இணைந்தே  இருக்கும். இதில் நாம் நம் கடை அல்லது நிறுவனத்தின் பெயர், விலாசம் ஆகியவற்றை பதிவு செய்து வைத்துவிடலாம். மெஷினை இயக்கியதும்  பேப்பர் ரோலில் நிறுவனத்தின் பெயர் வரிசையாக பதிவாகும்.

அடுத்து பேப்பர் மடிக்கப்பட்டு பக்க ஒட்டுதல் செய்யப்படும். பிறகு நாம் தேர்வு செய்துள்ள அளவில் பேப்பர் கிட்டிங் இயந்திரத்தில் கிட்டிங் செய்யப்பட்டு  அடிப்பகுதி ஒட்டுதல் மேற்கொள்ளப்படும். அடுத்த இயந்திரத்தின் வழியாக பேப்பர் கவர் செய்யப்பட்டு வந்துவிடும். இதனை 250 வீதம் ஒரு கட்டாக  பேக்கிங் செய்ய வேண்டும். இந்த மெஷின் அனைத்தும் ஒரேமுகமாகப் பொருத்தப்பட்டிருக்கும், அதனால் தயாரிப்பு முறை என்பது எளிது.

தேவையான பணியாளர்கள் மற்றும் மாத ஊதியம்


ஆபரேட்டர்  (1) ரூ.15,000
பணியாளர் (1) ரூ.6,000
மொத்தம் (2) ரூ.21,000

உற்பத்தித் திறன் மற்றும் விற்பனை வரவு

ஒரு நாள் வேலை நேரத்தில் 300 கிலோ பேப்பரில் 36 x 50 செ.மீ. அளவில் 13,500 பேப்பர் கவர்கள் உற்பத்தி செய்யமுடியும். இவற்றை 250 கவர்கள்  சேர்த்து ஒரு கட்டாக பேக்கிங் செய்யவேண்டும். மொத்த விற்பனையில் ஒரு பேப்பர் கவர் 1.25 பைசா என வைத்து விற்பனை செய்தால், ஒரு  நாளைக்கு விற்பனை மூலம் (1.25 பைசா x 13,500) ரூ.16,875 கிடைக்க வாய்ப்புள்ளது. (பேப்பர் பேக் அளவுகளைப் பொறுத்து இதில் விற்பனை  வரவு கூடவும், குறையவும் வாய்ப்புண்டு). ஒரு மாதத்திற்கு 25 வேலைநாட்கள் என எடுத்துக்கொண்டால் 25 x ரூ.16,875 = 4,21,875 கிடைக்க  வாய்ப்புள்ளது. உற்பத்தி மூலம் ஒரு மாதத்திற்கான வரவு ரூ.4,21,875. சந்தைப்படுத்துவதைப் பொறுத்து இதில் வருமானம் கூடவும், குறையவும்  வாய்ப்புள்ளது.

விற்பனை வாய்ப்பு

மெடிக்கல் ஷாப், மளிகைக்கடை, ஃபேன்ஸி ஸ்டோர் என முன்பு பிளாஸ்டிக் கவர் கொடுக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் இனி பேப்பர் கவர்தான்  வாங்குவார்கள். அவர்களுக்கு நேரடியாக சப்ளை செய்யலாம். உற்பத்தியில் தரம், குறைந்த லாபம், நேரடி அணுகுமுறை இருந்தால் நிறைய ஆர்டர்  கிடைக்கும்.

நிர்வாகச் செலவுகள்

வாடகை - ரூ. 15,000
மின்சாரம்(1 மாதத்துக்கு) - ரூ.  6,000
இயந்திரப் பராமரிப்பு - ரூ.   1000
இதர செலவுகள் - ரூ.  6,000
மொத்தம்     - ரூ. 28,000

நடைமுறை மூலதனச் செலவுகள் (ரூ.)


மூலப்பொருட்கள் - ரூ.1,50,000
சம்பளம் - ரூ. 21,000
நிர்வாகச் செலவுகள் - ரூ. 28,000
மொத்தச் செலவு - ரூ.3,34,000

லாப விவரம்

மொத்த வரவு - ரூ.4,21,875
மொத்த செலவு - ரூ.3,34,000
நிகர லாபம் - ரூ.87,875

மத்திய அரசின் PMEGP திட்டம் மற்றும் தமிழ்நாடு நீட்ஸ் திட்டத்தின் கீழ் 25% மானியத்துடனும் இத்தொழிலைத் தொடங்கலாம். நமது பங்கு 5  சதவிகிதம், மானியம் 25 சதவிகிதம், வங்கிக் கடன் 70 சதவிகிதம் கிடைக்கும். சுற்றுச்சூழல் குறித்து இன்று நம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு  வருகிறது. அதனால், பேப்பர் கவர் தயாரிப்பு தொழிலுக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. தற்போது இந்தத் தொழிலை தொடங்கினால் நல்ல  வருமானம் வருவதற்கு அதிகமான வாய்ப்புள்ளது. இந்தத் தொழிலுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதால் புதிய தொழில்முனைவோர்கள் இந்தத் தொழிலில்  துணிந்து இறங்கலாம்.
 

- தோ.திருத்துவராஜ்