ஓய்வு முடிவிலும் ஸ்கோர் செய்த வீரு!



சுல்தான் ஆஃப் முல்தான், நவாப் ஆப் நஜாப்கர், சுருக்கமாக வீரு! ‘வெண்கலக் கடையில் யானை புகுந்த மாதிரி’ டெஸ்ட் போட்டிகளில் சலசலப்பையும் கலகலப்பையும் ஏற்படுத்திய சேவக், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருக்கிறார்.

 கடினமான இந்த முடிவுக்கு தனது 37வது பிறந்தநாளை தேர்வு செய்த துணிச்சலிலும் அநாயசமாக சிக்சர் அடித்திருக்கிறார். ஆடுகளத்தை அதகளமாக்கி, எதிரணி பவுலர்களை ரணகளமாக்கிய அந்த அற்புதமான மட்டை பிரயோகத்தை இனி பார்க்க முடியாது.

‘ஃபேப் பைவ்’ என புகழ்பெற்ற சச்சின், கங்குலி, டிராவிட், லஷ்மண், சேவக்… கூட்டணியின் கடைசி அத்தியாயமும் முடிவுக்கு வந்திருக்கிறது. துபாயில் இருந்து கசிந்த ஓய்வு தகவலை மறுத்திருக்கிறார் என்ற செய்தியைப் படித்துக்கொண்டிருக்கும்போதே… ட்விட்டரில் உறுதி செய்து ரசிகர்களை உலுக்கிவிட்டார்.

‘ஃபுட் ஒர்க் சுத்தமாக இல்லை... சர்வதேசப் போட்டியில் நிச்சயமாக தாக்குப்பிடிக்க முடியாது’ என்ற கிரிக்கெட் நிபுணர்களின் கணிப்பை எல்லாம் தவிடுபொடியாக்கி, மகத்தான சாதனையாளராக சேவக் உயர்ந்தது இன்னும் கூட விளங்க முடியா விநோதமாகவே உள்ளது. ‘பந்தை பார்… மட்டையைச் சுழற்று...’ இதுதான் சேவக்கின் எளிமையான பேட்டிங் பார்முலா. அவரது கண்ணுக்கும் கைக்குமான புரிதல் யாருக்கும் புரியாத புதிர்!

‘‘விவியன் ரிச்சர்ட்ஸ் ஆட்டத்தை பார்த்ததில்லை. ஆனால், அது எப்படி இருக்கும் என்பதை சேவக் மூலமாக உணர்ந்திருக்கிறேன்’’ என்கிறார் டோனி. ‘‘அந்த அற்புதமான ஆட்டத்தை எதிர்முனையிலிருந்து பார்த்து ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது எனது பாக்கியம்’’ என சிலிர்க்கிறார் சச்சின்.

டெஸ்ட் என்றாலே லொட்டு லொட்டு என்று மட்டை போட்டு ரசிகர்களைக் கொட்டாவி விட வைக்கும் இலக்கணத்தை மாற்றி, இப்படியும் அடிக்க முடியுமா என வாய் பிளக்க வைத்தவர் சேவக். 82.23 என்ற ஸ்டிரைக் ரேட் மட்டுமே போதும் அவரது விளாசலின் வீரியத்தை விளக்க. இந்திய அணிக்காக 104 டெஸ்ட்டில் 8586 ரன், 251 ஒருநாள் போட்டியில் 8273 ரன், 19 டி20ல் 394 ரன் விளாசியதுடன் பல போட்டிகளில் பந்துவீச்சிலும் அசத்தி ஆல்ரவுண்டராக ஜொலித்தவர் சேவக். டெஸ்ட்டில் முச்சதம் அடித்த முதல் இந்திய வீரர் மட்டுமல்ல, அந்தச் சாதனையை இரண்டு முறை நிகழ்த்தியவர்... இந்த ரன் மெஷின் பற்றி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

2004 மார்ச் 28… பாகிஸ்தானுக்கு எதிராக முல்தான் மைதானத்தில் நடந்த டெஸ்ட்டில், சோயிப் அக்தரையும் சக்லைன் முஷ்டாக்கையும் துவம்சம் செய்து 309 ரன் குவித்து இந்தியாவுக்கு இன்னிங்ஸ் வெற்றியைப் பரிசளித்தார். அடுத்து 2008 மார்ச் 26… நம்ம சேப்பாக்கம் ஸ்டேடியம்! இந்த முறை உதை வாங்கியது ஸ்டெயின், நிடினி, மார்கெல், காலிஸ் & கோ… சேவக் மெஷின் கன் சடசடக்க… 42 பவுண்டரி, 5 சிக்சருடன் 319 ரன். அதிவேக டெஸ்ட் முச்சதம் (278 பந்து) என்ற முத்தான சாதனை முத்திரையும் ஆழமாகப் பதிந்தது.

டி20 மற்றும் ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்தவர், சச்சினைத் தொடர்ந்து ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த 2வது வீரர் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவர் சதம் அடித்த 15 ஒருநாள் போட்டிகளில் இந்தியா 14ல் வென்றுள்ளது!

சேவக் கண்ணாடி அணிய ஆரம்பித்த பிறகு கண், கை தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட தடுமாற்றம், பலமே பலவீனமாகி ஃபார்ம் இழக்க முக்கிய காரணமானது. சீனியர்களை ஓரங்கட்டுவது என்ற டோனியின் அஜெண்டா, தேர்வுக் குழுவினரின் ஆதரவை இழந்தது என எல்லாமாக சேர்ந்து அணிக்குத் திரும்ப முடியாமல் செய்துவிட்டது.

டி20, ஒருநாள் போட்டியில் ஓய்வு அறிவித்து டெஸ்ட்டில் மட்டும் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் சில ஆண்டுகள் தாக்குப் பிடித்திருக்கலாம் என்றாலும், ஃபேர்வெல் போட்டிக்கு ஆசைப்படாமல் சரியான சமயத்தில் உறுதியான முடிவை எடுத்த வகையில் மீண்டும் ஸ்கோர் செய்துவிட்டார் சேவக்.  கண்ணாடி அணிய ஆரம்பித்த பிறகு கண், கை தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட தடுமாற்றம், பலமே பலவீனமாகி ஃபார்ம் இழக்க முக்கிய காரணமானது.

- ஷங்கர் பார்த்தசாரதி