பருப்பு இல்லாமல் சமைக்க முடியாதா?
வரலாறு காணாத விலையை எட்டியிருக்கிறது ‘பருப்பு’! மெல்ல மெல்ல சத்தமில்லாமல் எகிறி வந்த துவரம் பருப்பு, கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கூட 150 ரூபாய்தான். இப்போது 250 ரூபாய்! பாசிப் பருப்பும், உளுத்தம்பருப்பும் பாடி கார்ட்ஸ் போல அதன் கூடவே உச்சாணிக்குப் பயணிக்கின்றன. தீபாவளி நெருங்குவதால் இன்னும் கூட இந்த விலை உயரலாம்.
இப்போது, மத்திய அரசு ஐந்தாயிரம் டன் துவரம் பருப்பு இறக்குமதி செய்திருக்கிறது. இதில், ஐந்நூறு டன் தமிழகத்திற்கு! இதனால், விலை குறையுமா? என்றால், ‘‘தட்டுப்பாடு வராமல் தடுக்கலாமே தவிர, விலை குறையும் என்று சொல்ல முடியாது’’ என்கிறார்கள் வியாபாரிகள். திடீரென ஏன் இப்படியொரு விலையேற்றம் + தட்டுப்பாடு?
‘‘நமக்கு எப்பவுமே துவரம் பருப்பு கர்நாடகா, ஆந்திரா தவிர, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், குஜராத், உத்தரப் பிரதேசம்னு பெரும்பாலும் வட இந்தியப் பகுதிகள்ல இருந்துதான் வருது. இந்த முறை அங்க மழை பொய்த்துப் போச்சு. இதனால, பர்மா, தான்சானியா நாடுகள்ல இருந்து இறக்குமதி பண்ண வேண்டிய சூழல். இது முதல் காரணம்!’’ என்கிறார் கன்ஸ்யூமர் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்த சோமசுந்தரம்.
‘‘அடுத்ததா, மத்திய, மாநில அரசுகளின் திட்டமின்மையை சொல்லணும். தமிழக அரசுகிட்ட பருப்பு வாங்கவே ‘பர்ச்சேஸ் கமிட்டி’னு ஒரு குழு இருக்கு. ரேஷனுக்கும் சத்துணவுக்கும் எவ்வளவு பருப்பு தேவைனு திட்டமிட்டு வாங்குற கமிட்டி இது. இவங்க சரியா திட்டமிடாம விட்டுட்டாங்க. அப்புறம், ஆன்லைன் வர்த்தகமும், இடைத்தரகர்கள் பதுக்கலும் இன்னொரு முக்கிய காரணம்.
இப்போ கூட அதிகாரிகள் ரெய்டு நடத்தி பல டன் பருப்பு மூட்டைகளை கைப்பற்றினதா செய்தி பார்த்தோம். ஏன் இப்படிப் பதுக்குறாங்கன்னா, சில மாநிலங்கள்ல இருப்புல இருக்குற பருப்புக்கு 80 சதவீதம் வங்கி லோன் வாங்க முடியும். அஞ்சு லட்சம் ரூபாய்க்கு பருப்பு கொள்முதல் பண்ற ஒரு இடைத்தரகர், அதை சேமிப்புக் கிடங்குல வச்சு நாலு லட்சம் கடன் வாங்கிடலாம்.
எப்போ டிமாண்ட் அதிகமாகுதோ, அப்போ வெளியில எடுத்து கூடுதல் விலைக்கு வித்துடுவாங்க. இது துவரம் பருப்பு விளையிற எல்லா மாநிலங்களிலும் நடக்குது. இதெல்லாத்தையும் சரி பண்ணாம பருப்பு விலையைக் குறைக்க முடியாது!’’ என்கிறார் சோமசுந்தரம் உறுதியாக!சரி... எப்போதுதான் விலை குறையும்?
‘‘பொதுவா, துவரம் பருப்பு உற்பத்தி சீசன் நவம்பர் முதல் ஜூன் வரைதான். அதனால, நிலைமை இப்படியே இருக்காது. இப்போ, அங்க ஓரளவு மழை பெய்ஞ்சிருக்கு. டிசம்பர் மாசம் அறுவடை நடந்துடும். சீக்கிரமே, முன்னாடியிருந்த விலையை மக்கள் சந்திக்கலாம்!’’ என நம்பிக்கை தருகிறார் பருப்பு உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் சந்திரசேகரன்.
அதுவரை என்ன செய்வது? ‘பருப்பு இல்லாத சமையல் செய்யலாமே’ என ஆசுவாசப்படுத்துகிறார் சமையல் கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத். ‘‘பருப்பு உற்பத்தியில ஆந்திரா ஒரு முக்கியமான மாநிலம். ஆனா, ஆந்திரா ஸ்பெஷலே பருப்பு இல்லாத குழம்பு வகைகள்தான்! நாமும் அதை செஞ்சு சாப்பாட்டுல சுவையைக் கூட்டலாம்!’’ என்கிறவர், சில ரெசிபிகளை அடுக்குகிறார்...
* இட்லி, தோசைக்கு துவரம் பருப்பு இல்லாத தக்காளி சாம்பார்... ரெண்டு வெங்காயம், மூணு தக்காளியை நல்லா அரைச்சு வச்சிக்கோங்க. இன்னொரு வெங்காயத்தை வெட்டி தனியா வச்சிடுங்க. கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், சீரகம் சேர்த்து தாளிச்சிட்டு, அதோட வெட்டி வச்சிருந்த வெங்காயத்தை வதக்கணும்.
பிறகு, அரைச்ச வெங்காயத்தையும், தக்காளியையும் சேர்த்து பச்சை வாடை போகிற வரை வதக்கணும். அப்புறம், தண்ணீர் ஊத்தி வேக விடுங்க. அதில், சாம்பார் பொடி, உப்பு போட்டுட்டு கடைசியா, வறுத்த வெந்தயப் பொடி கொஞ்சம் சேர்த்து இறக்கிட வேண்டியதுதான். ‘திக்’கா வேணும்னா, கொஞ்சம் அரிசி மாவு சேர்த்துக்கலாம். சுவையான சாம்பார் ரெடி! * பருப்பு இல்லாத காய்கறி சாம்பார்... கத்தரிக்காய் குழம்பு...
‘‘இதுக்கு, சின்ன வெங்காயம், கத்தரிக்காய், சாம்பார் பொடி, உப்பு, வெல்லம், புளிக் கரைசல் போதும். முதல்ல, சின்ன வெங்காயத்தை பொடியா கட் பண்ணிடுங்க. அடுத்து, முழு கத்தரிக்காயை மேல் பகுதியில நாலா பிளந்து வச்சிக்கோங்க. புளிக் கரைசல்ல கத்தரிக்காய், வெங்காயத்தைப் போட்டு வேக வைங்க. வெந்து வந்ததும், கொஞ்சம் சாம்பார் பொடி, உப்பு, வெல்லம் சேர்த்து மறுபடியும் வேக விடுங்க. கடைசியா, கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு ேபாட்டு தாளிச்சி ஊத்தினா டேஸ்ட்டான கத்தரிக்காய் குழம்பு தயார்!
இதுல, கத்தரிக்காய்க்கு பதிலா வெண்டைக்காய், வள்ளிக்கிழங்கு, சேப்பங்கிழங்குனு வேறு பல காய்கறி வகைகளைப் போட்டும் பண்ணலாம்’’ என்கிறவர், ‘‘இட்லிக்கு தொட்டுக்க சாம்பாருக்கு பதிலா, வெந்தயக் குழம்பு, கேரட், கத்தரிக்காய் சட்னினு விதவிதமா செய்யலாம். மதியத்துக்கு கம்பங்களி, கம்பங்கூழ்னு மாத்தி யோசிக்கலாம்!’’ என்கிறார் அக்கறையாக!
ஆனால், ‘‘பருப்பு உடலுக்கு ரொம்ப அவசியம். அதுக்கு ஈடு இணை எந்த உணவுப் பொருளிலும் இல்ைல!’’ எனக் கண்டிப்பு காட்டுகிறார் டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன்! ‘‘நாங்க, ஒரு நாளைக்கு முப்பது கிராம் பருப்பு எடுத்துக்கச் சொல்றோம். இப்போ, விலை அதிகம்ங்கிறதால 15 கிராமாவது எடுத்துக்கிறது நல்லது. சைவப் பிரியர்களுக்கு பருப்புதான் புரதச் சத்தே! அசைவ விரும்பிகளும் வாரத்துல அஞ்சு நாட்கள் சைவமா இருக்கிறாங்க. அதனால, அவங்களும் பருப்பை போதிய அளவு எடுத்துக்கணும்.
இதுக்கு மாற்றா சோயா சாப்பிடலாம்தான். ஆனா, அதுவும் விலை அதிகம். குறைவா எடுத்துக்க நேர்ந்தா, முளை கட்டிய பயிறு வகைகள், கீரைகள் சேர்த்துக்கிட்டு அதை ஈடுகட்டலாம். ஆனா, பருப்பை சுத்தமா நிறுத்திடக் கூடாது’’ என்கிறார் அவர் முடிவாக!
- பேராச்சி கண்ணன்
|