ருத்ரமாதேவி



பதின்மூன்றாம் நூற்றாண்டின் கதை. காகதீய தேசத்தின் ராஜ தம்பதியினருக்கு வாரிசாக பெண் குழந்தையே பிறக்க, அதை ஆணாக அறிவித்து அப்போதைக்கு சமாளிக்கிறார்கள். ‘ருத்ரமாதேவி’ ருத்ரதேவன் ஆக, சிரமமின்றி ஆட்சி தொடர்கிறது.

ஆனால் விரைவிலேயே ‘ருத்ரமா தேவி’ அசல் முகத்திலேயே வெளிப்பட வேண்டிய தருணமும் வந்து சேர்கிறது. அப்படிப்பட்ட தருணத்தின் பின்னால் நடந்தது என்ன என்பதை பிரமாண்டமாகச் சொல்வதே ‘ருத்ரமாதேவி’!

ஆக்‌ஷன், காமெடி, அதிரடி வகைப் படங்களையே பார்த்த பிறகு ஒரு ராஜா ராணி கதையைக் கேட்கிற, ரசிக்க முடிகிற சூழ்நிலையில் வந்திருக்கிறது இந்தப் படம்.மகாராஜாவின் சிம்மாசனத்தைப் பிடிக்கத் திட்டமிடுகிறார்கள் பங்காளிகள். மகாமந்திரி பிரகாஷ்ராஜ், அவர்களின் சதித் திட்டங்களிலிருந்து அரசரையும், இளவரசரையும் காப்பாற்றுகிறார். ஜனங்களை நம்பவைக்க இளவரசருக்கு(!) திருமணம் கூட நடக்கிறது.

ராஜ ரகசியம் வெளிப்படாமல் தவிர்க்க, மகாமந்திரியே ‘‘பிறந்தது பெண் குழந்தைதான்’’ என அறிவிக்கிறார். இறுதியில் எதிரி நாட்டு அரசன் படையெடுப்பை ‘ருத்ரமாதேவி’ எப்படி எதிர்கொண்டார்... தன்னையும், நாட்டு மக்களையும் எதிரிகளிடமிருந்து எப்படிக் காப்பாற்றினார் என்பதே க்ளைமேக்ஸ்.

ருத்ரதேவனாகவும் ருத்ரமாதேவியாகவும் இரண்டு தோற்றங்களில் அனுஷ்கா. படம் மொத்தத்தையும் தன் இரு தோள்களின் மீது வைத்துத் தாங்குகிறார். வாளைச் சுழற்றும் லாகவத்தையும், அதன் பின்னணியில் அவருடைய உழைப்பையும் பார்க்கையில் ருத்ரமாதேவி இப்படித்தான் இருந்திருப்பாரோ என்ற பிரமை ஏற்படுவது உண்மையே. மதம் பிடித்த யானையை அடக்க அனுஷ்கா கம்பீரமாக நடந்து வரும் காட்சி கண்களை நிறைக்கிறது. ராணியாக அவர் உட்கார்ந்திருக்கும் தினுசும், பேச்சும் கம்பீர வகை. படத்தின் கதை மார்க்கோபோலாவால் சொல்லப்படுவது இன்னமும் சுவாரஸ்ய பிரிவு.

கண்ணியம் தவறாத காதலராக ராணாவும், புரட்சியாளராக அல்லு அர்ஜுனும் ஏற்றுக்கொண்ட பாத்திரத்தில் மிளிர்கிறார்கள். ராணியின் நம்பிக்கைக்கு உரிய தோழனாக ராணாவின் இடமும், நேர்த்தியும் படத்தின் பிரமாண்டத்திற்கு அழகு சேர்க்கிறது.

அல்லுவின் பாட்டாளி வர்க்க வசனங்கள் கை தட்டலுக்கானவை. வரலாற்றுப் படத்திற்கான அழகில் வசனத்தை பா.விஜய் தீட்டியிருப்பது கண்கூடு. அல்லுவைக் காதலிக்கும் பெண், கேத்தரின் தெரசா, ருத்ரமாதேவியை மணமுடிக்கும் நித்யா மேனன் இருவரும் நிறைவான நடிப்பில் பலம் சேர்க்கிறார்கள்.

இத்தகைய வீரதீர, சாகசம் நிறைந்த பீரியட் காவியத்தின் இசைக்கோர்ப்புக்கு இளையராஜா சரியான தேர்வு. பின்னணியில் அள்ளுபவர், பாடல்களுக்கு வடிவம் தருகிறார். பிரமாண்டமான ஒளிப்பதிவுக்கு அஜய் வின்சென்டின் ஒளிப்பதிவு கட்டியம் கூறுகிறது. அனுஷ்கா, நித்யா மேனன், கேத்தரின் மூவரின் நடனக்காட்சி ஒன்று கண்களை விட்டு அகல மறுக்கிறது.

தோட்டா தரணியின் அரங்க அமைப்பு பிரமாண்டத்தின் உச்சம். இயக்குநர் குணசேகரின் உழைப்புக்கும், பொறுமைக்கும் பெரிய வரவேற்பு. ஆனால், பிற்பகுதியின் வேகம், முன் பகுதியிலும் இருக்குமாறு பார்த்துக்கொண்டிருக்கலாம். போர்க்களக் காட்சிகளில் இன்னும் ஷார்ப் செய்திருக்கலாம்.கண்ணுக்கு விருந்து... பழைய காவியங்களின் மீட்டெடுப்பு... ராஜா-ராணி காலத்திற்கு செல்வது போன்ற உணர்வு!

- குங்குமம் விமர்சனக் குழு