‘10 எண்றதுக்குள்ள’.



காதல், கொள்ளை, நேசம், குரோதம், பழிவாங்கல் என கலவையான மனித உணர்வுகளை நெடுஞ்சாலையின் பயணம் வழியாக நமக்கு உணர்த்திச் செல்வதே ‘10 எண்றதுக்குள்ள’.பணம் தந்தால் கடத்தல் வேலைகளை மிக ஆர்வத்தோடு செய்யும் விக்ரமும், அவருக்கே தெரியாமல் அவரது காரில் ஏறிக்கொள்ளும் சமந்தாவும் சேர்ந்தே ஒரு காரில் பயணமாகிறார்கள்.

சமந்தாவைக் கடத்துவதற்கே பெரும் விலை வைக்கப்பட்டிருக்கிறது என அறியாமல் செல்லும் விக்ரம், நாலைந்து நாள் பயணம் தரும் மோதல், காதல், சூழ்ச்சி, ஆக்‌ஷன்... கடைசியில் காதலும், காதலர்களும் என்ன ஆனார்கள் என்பதே பயணத்தின் இறுதிக் கணங்கள்.விர்ர்ரென சுமோக்கள் பறக்கும் தேசிய நெடுஞ்சாலையின் பரபரப்புகள் அப்படியே படமாகி இருக்கிறது. பக்கா ஸ்டைல் கடத்தல் நிபுணராக வருகிறார் விக்ரம். துறுதுறு, சுறுசுறு படபடப்பில் விக்ரம் சூப்பர். ‘ஐ’யில் உடலை ஏற்றி இறக்கி செய்த சோதனைகளையெல்லாம் மறந்துவிட்டு ஸ்லிம் ஃபிட்டில் மின்னுகிறார்.

யார் பணம் கொடுத்தாலும், எந்தப் பக்கம் கை காட்டினாலும் யோசிக்காமல் பாய்ந்து வேலையை கன கச்சிதமாக செய்து முடிக்கிற ஏஜென்ட்டாக படத்தின் ‘பவர் ப்ளே’ ஏரியாவைக் கையில் எடுக்கிறார் விக்ரம். சதா உற்சாகம் தெறிக்கும் முகம், நறுவிசான உடை, உடல்மொழியில் அலட்சியம் என பெயரற்ற கேரக்டருக்கு விக்ரம் செம ஃபிட். படபடக்கும் ஆக்‌ஷன் காட்சிகளில், தடதடவென வண்டிகளில் இடம் மாறி லாகவமாக ஏறுவதும், அடிதடி ஆக்‌ஷனில் சூரத்தனம் காட்டுவதுமாக எதற்கும் தயாராக நிற்கிறார். யதார்த்தமும், சமந்தாவைப் பார்க்கும்போதெல்லாம் கண்களில் காதல் சொட்டுவதுமாக பியூட்டிஃபுல் விக்ரம்.

நடை, உடை, கடைக்கண் பார்வை, காதலில் கொஞ்சி, பாசத்திற்கு ஏங்கி நிற்பதில் சமந்தா இதுவரை காணாத வசீகரம். ஆரம்பக் காட்சிகளில் விக்ரமுடன் துள்ளுவதும் காதலில் நெக்குருகுவதுமாக பொண்ணுக்கு நடிப்பும் வர வர பிரைட்! குறும்புக் காதலன், சின்சியர் ஸ்மக்ளர், தோள் கொடுக்கும் தோழன் என அத்தனை அம்சங்களிலும் இடம் கொடுக்கும் விக்ரமிற்கு சரியான ஜோடி சமந்தா!

தமிழ் சினிமாவில் ஆச்சரியமாக இந்தியாவுக்குள்ளே மேலிருந்து கீழாக பல மாநிலங்களுக்குக் கதை பயணிப்பது, வலியத் திணிப்பதாகத் தெரியாமல் கதைப்போக்கோடு செல்கிறது. சேஸிங் காட்சிகள், வண்டியின்  சீட்டைக் கிழித்தால் எந்தப் பக்கமும் வைரங்களும், கரன்ஸிகளும் வந்து கண்ணைக் கட்டுவது என ஆங்காங்கே உலக சினிமா தட்டுப்பட்டாலும், உள்ளூர் கலரில் கடத்தல் சேஸிங் கதையை டெக்னிக்கலாக விவரித்திருப்பது இயக்குநர் விஜய் மில்டனின் ப்ளஸ்.

உத்தரகாண்டிலிருந்து சென்னை வரைக்கும் அழகை ஒரிஜினாலிட்டி கெடாமல் சுட்டு வந்திருக்கிறது விஜய் மில்டனின் கேமரா. இமான் பாடல்களில் ‘ஆனாலும் இந்த மயக்கம்’ மட்டும் இளமை, புதுமை.

பலதரப்பட்ட வகையில் வில்லன்கள் வந்து செல்வது கண்களுக்கு அயர்ச்சி. பசுபதி காமெடி வில்லனுக்கு படு கச்சிதம். சமந்தாவின் இரட்டை வேஷத்தை எதிர்பார்க்கவே இல்லை.  அதை இன்னும் கச்சிதமாக நிறுவியிருக்கலாம். வகை வகையான பெண்களைக் கடத்துவது எதற்கு எனப் புரிபடவே இல்லை. சமந்தா பறந்து பறந்து கத்தி வீசுவது பொருத்தமாகப்படவில்லை. உத்தரகாண்டின் உள்ளூர் விடுதலைப் போராட்டம் ஒட்டவில்லை.
ஆங்காங்கே ஸ்பீட் பிரேக்கர் தென்பட்டாலும் வேகம் மிஸ் ஆகவில்லை!

- குங்குமம் விமர்சனக் குழு