புகைப்படங்களுக்கு வயதாவதில்லை!



‘‘குழந்தைகளை புகைப்படம் எடுக்கிற மாதிரி குதூகலமான வேலை வேறு எதுவும் இல்லை. முதல்ல நாமும் குழந்தையா மாறணும். குழந்தை நம்மை நம்பணும். குழந்தையை நாம இயக்க முடியாது.

குழந்தைதான் நம்மை இயக்கும். குழந்தையோட ஒவ்வொரு அசைவுலயும் ஆயிரம் கவிதைகள் புதைஞ்சு கிடக்கு... அதன் தன்மையில இணைஞ்சு ரசித்து கரைந்து போற புகைப்படக்காரன் அந்த கவிதைகளை தரிசிக்கவும் காட்சியாக்கவும் முடியும்...’’ 

- லயித்துப் பேசுகிறார் புதுவை இளவேனில். படைப்பாளுமை ததும்பும் நவீன புகைப்படக்காரரான இளவேனில், தற்போது தமிழ்க் குடும்ப மரபுகளை மீட்டெடுக்கும் வகையில் ‘ஃபேமிலி போர்ட்ரெய்ட்’ போட்டோகிராபியில் தீவிர கவனம் செலுத்துகிறார். குழந்தைகள் அவரின் விருப்பத்துக்குரிய பாத்திரங்களாக மாறியிருக்கின்றன. புதுவை, லாஸ்பேட்டையில் குழந்தைகள், குடும்பங்களுக்கென பிரத்யேகமாக ஸ்டூடியோ தொடங்கியிருக்கிறார்.

‘‘மண்ணோட வரலாறும் குடும்ப வரலாறும் ஒண்ணுக்கொண்ணு தொடர்புடையது. எல்லா குடும்பங்களுக்கும் ஒரு வரலாற்றுப் பின்னணி இருக்கு. அந்த வரலாற்றுல ஒரு சந்ததியோட பெருமிதமும், அடுத்த தலைமுறைக்கான பொறுப்பும் இருக்கு. எல்லா பூர்வகுடிகளும் தங்கள் குடும்ப வரலாற்றைப் பாதுகாக்க அக்கறை காட்டுறாங்க. ஜப்பான்ல திரைச்சீலைகள்ல தங்கள் குடும்ப வரலாற்றை வரைஞ்சு பாதுகாப்பாங்க.

குடும்பத்தோட தலைவர், தன்னோட இறுதிக்காலத் துல பெரும்சொத்தா  அதை அடுத்த தலைமுறைக்குக் கொடுத்துட்டுப் போவார். பத்து தலைமுறைக்கு முன்னாடி இந்தக் குடும்பத்தை வழிநடத்தினது யாருன்னு கேட்டா, சின்னக் குழந்தையும் அவரோட பெயரைச் சொல்லும். குடும்பம்ங்கிற கட்டமைப்பு அங்கெல்லாம் அவ்வளவு பலமா இருக்கு.

பாரம்பரியத்துக்கும், பண்பாட்டுக்கும் பேர் போன நாம, நம் அடையாளமா இருந்த குடும்பக்கூறுகளை அழிச்சிட்டோம். அர்த்தமில்லாத ஒரு திசையில புறக்கணிப்புகளையும், காயங்களையும் சுமந்தபடி பயணிச்சுக்கிட்டிருக்கோம். பெரும்பாலான பிள்ளைகள் தாத்தா, பாட்டியோட பரிச்சயமே இல்லாம வளர்றாங்க.

அடுத்தடுத்த தலைமுறைகள் இன்னும் இன்னும் விலகிப் போய்க்கிட்டே இருக்கு. தாத்தாவுக்கு அப்பா பேரு என்னன்னு கேட்டா முழிக்கிறாங்க. பிறந்தோம், வாழ்ந்தோம், மறைந்தோம்ங்கிறதைத் தாண்டி நம் தலைமுறைக்கு இங்கே என்ன பதிவிருக்குன்னு பாத்தா வெறுமையா இருக்கு.

ஒருகாலத்துல குடும்ப போட்டோன்னு ஒண்ணு எல்லார் வீட்லயும் இருக்கும். பெரியவங்க சேர்ல உக்காந்திருக்க, சின்னவங்கள்லாம் நிப்பாங்க. இன்னைக்கு அந்த மாதிரி புகைப்படங்களைப் பார்க்கிறதே அபூர்வமா இருக்கு. காரணம், உறவுகளுக்குள்ள இருந்த இணக்கம் குறைஞ்சுக்கிட்டே வருது.

ஒரு பிள்ளைக்கு ஆகச்சிறந்த பரிசு, அதன் குழந்தைப் பருவத்தை திரும்பவும் நினைவூட்டுறதுதான். அதுக்கு புகைப்படம்தான் வழி. புகைப்படம் வெறும் ஒளித் தொழில்நுட்பம் மட்டுமில்லை. காதல், கனிவு, அன்பு, நட்புன்னு உணர்ச்சிகளின் கலவை. வெளிநாடுகள்ல ‘சைல்ட் போர்ட்ரெய்ட்’னு தனிக்கலையே இருக்கு. ஒவ்வொரு பிறந்தநாள்லயும் குழந்தைகளை விதவிதமா போட்டோ எடுப்பாங்க. 15 வயதில் அந்தப் புகைப்படங்களை பார்க்கிற குழந்தை அடையுற மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

தொழில்நுட்பங்கள் வாழ்க்கையை சுருக்கிப் போட்டுப் போய்க்கிட்டே இருக்கு. ஒரு செல்ஃபிக்குள்ள நம்ம சந்தோஷங்கள் தொலைஞ்சு போயிடுது. குடும்பத்தோட போய் ஒரு ஸ்டூடியோவுல நின்னு உக்காந்து புகைப்படங்கள் எடுக்கிறது நம்ம பாரம்பரியத்தோட நீட்சி. அதுக்குன்னே பல புகழ்பெற்ற ஸ்டூடியோக்கள் இங்கே இயங்கியிருக்கு. அந்த மாதிரி ஒரு போர்ட்ரெய்ட் ஸ்டூடியோவைத் தொடங்குறது என் நெடுநாள் கனவு. இப்போதான் அது சாத்தியமாகியிருக்கு.

ஒரு தொழிலா மட்டுமில்லாம இதுக்குள்ள ஒரு ஆத்ம திருப்தியும் இருக்கு. குழந்தைகளை அவங்க போக்கில விளையாட விட்டு, சின்னச் சின்ன விரலசைவுகளை, கண் சிமிட்டல்களை, குறும்புகளைப் பதிவு செய்யணும். குழந்தைகளுக்கு வயதாகலாம். புகைப்படங்கள் அப்படியேதான் இருக்கும். பார்க்கும்போதெல்லாம் உள்ளுக்குள்ள புதைஞ்சு கிடக்கிற குழந்தைத்தன்மை குபீர்னு வெளியில வரும்.

அன்பை கொட்டிக்கொட்டி வளர்த்த அப்பா, அம்மா, உறவுகள் மேல அன்பு பொங்கும். நம்மையறியாம விழியில ஒரு துளி நீர் சுரக்கும். அதுல கிடைக்கிற நிறைவை அளக்க அளவுகோலே இல்லை...’’ - நெகிழ்ச்சியாகப் பேசுகிறார் இளவேனில். அவரின் புகைப்படங்கள் போலவே வார்த்தைகளில் அத்தனை உயிர்ப்பு!

- வெ.நீலகண்டன்