அரேஞ்சுடு விவாகரத்து!
ஒரு மணப்பெண் கண்ணுக்கு மை தீட்டி, மனம் கொள்ளா மகிழ்ச்சியும் வெட்கச் சிரிப்புமாக ரெடியாகிறாள். ஆனால், கல்யாணத்துக்கு அல்ல... விவாகரத்துக்கு! அரேஞ்சுடு மேரேஜ் போல இது அரேஞ்சுடு விவாகரத்து!
பெண் பார்க்க வருவது போன்றே மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டுக்கு மகிழ்ச்சி பொங்க வருகிறார்கள். ‘‘வாங்க... வாங்க...’’ என வாய் நிறைய வரவேற்கிறார்கள் பெண் வீட்டார்.
‘‘ம்ம்... அப்புறம்? விஷயத்துக்கு வரலாமே!’’ - பெண்ணின் அப்பா சொல்ல, ‘‘சின்னஞ்சிறுசுங்க கொஞ்சம் தனியா பேசிக்கட்டும்!’’ என்கிறார் பெண்ணின் அப்பா.அடுத்த நொடி... தனி அறையில் பையனும் பெண்ணும். மகிழ்ச்சியும் பரவசமும் வெட்கமும் இருவர் முகத்திலும் தாண்டவமாடுகின்றன.
‘‘என்னால நம்பவே முடியல... ஆறு மாசம் நாம வாழ்ந்திருக்கோம். இப்பதான் பிரியும்போது... பேசுறதுக்காக பெட்ரூமுக்கு வந்திருக்கோம்!’’ - பேச்சைத் துவங்குகிறான் மாப்பிள்ளை.
‘‘ஆமா, என்ன இருந்தாலும் நான் ஆர்தடாக்ஸ் இந்தியப் பொண்ணு இல்லையா?’’ என்கிறாள் பெண் வெட்கத்துடன்.‘‘சந்தோஷம் தாங்க முடியல. நாம ஒருத்தரை ஒருத்தர் இனி வாழ்க்கை முழுக்க சந்திக்க வேண்டிய அவசியமே இல்ல. அப்பாடா!’’இதற்கிடையில் வெளியே பெரியவர்கள் அளவளாவிக் கொண்டிருக்கிறார்கள். ‘‘உங்க பொண்ணு சமைப்பாள்னு சொன்னீங்க. ஆனா, மேகி செய்யக் கூட அவளுக்குத் தெரியல!’’ - இது பையனின் அம்மா.
‘‘ஆமாங்க. எங்க பொண்ணுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்குறதுலயே பிஸியா இருந்துட்டோம். புருஷன் பொண்டாட்டில அட்லீஸ்ட் ஒருத்தராவது அறிவாளியா இருக்க வேண்டாமா?’’ - இது பெண்ணின் அம்மா.இப்போது உள்ளே...மாப்பிள்ளை செல்போனில் ஒரு போட்டோவைக் காட்டி, ‘‘புதுசு!’’ என்கிறான் பெருமிதமாக.‘‘ஓ, புது கேர்ள் ஃப்ரெண்டா? எவ்வளவு நாளாச்சு?’’ - அனுசரணையாக விசாரிக்கிறாள் அவள்.
‘‘நீ வீட்டை விட்டுப் போனேல்ல... அதுக்கு ரெண்டு வாரத்துக்கு அப்புறம் மீட் பண்ணினேன்!’’‘‘ரெண்டு வாரமா?’’ - ‘வேஸ்டுடா நீ’ என்பது போலப் பார்க்கிறாள்.‘‘ஆனா, இவளை எனக்குப் பிடிச்சிருக்கு. உன்னை மாதிரி இல்ல! சரி, உன்னோட ‘அவன்’ போட்டோவைக் காட்டு!’’ - கணவன் ஆர்வமாய் கேட்க, வெட்கத்துடன் தனது செல்போனைக் காட்டுகிறாள்.
‘‘இவன் புத்தம் புது பாய் ஃப்ரெண்ட். ஒரு வாரம்தான் ஆச்சு. இவன் நிச்சயமா உன்னை மாதிரி இல்ல. ரொம்ப ஹேண்ட்சம், ரொம்ப அறிவாளி... அதோட அவன் சுத்தமா இருப்பான்!’’ - சொல்லிவிட்டு அவனை டாப் டு பாட்டம் ஒரு கேவலமான லுக் விடுகிறாள் பெண். இதே நேரம் வெளியே...
‘‘மருமக... ஒரு ராட்சஸி!’’ - ஆரம்பிக்கிறார் பையனின் அப்பா.கோபப்படுவார் என்று பார்த்தால் வெடித்துச் சிரித்து, ‘‘அவ அப்படியே அவங்க அம்மா மாதிரி!’’ என்கிறார் பெண்ணின் அப்பா.‘‘அப்புறம், உங்க பையனைப் பத்தி நாங்க விசாரிச்சிட்டோம்... காலேஜ்ல அவனோட காதலி பத்தி கூட எங்களுக்குத் தெரியும்!’’ - சிரித்துக்கொண்டே சொல்கிறார்கள் பெண்ணின் அப்பா அம்மா.
‘‘ஆமாங்க, அட்லீஸ்ட் அவ ஒழுங்கா டிரஸ் பண்ணியிருந்தா! உங்க பொண்ணை நாங்க பார்க்க வந்தப்பவே ஸ்கர்ட் தொடை வரை இருந்துச்சே... How shameless!’’ - இது மாமியாரின் பதிலடி.அந்நேரம் உள்ளே...‘‘நம்ம கல்யாண போட்டோவைப் பாரு... நாம சிரிக்கவே இல்ல!’’ - மாப்பிள்ளை.‘‘அந்த நைட்... அதுவும் கணக்குல வராது!’’
‘‘என்னது?’’ - தனது ஆண்மைத்திறம் கேள்விக்குள்ளாக்கப்பட்டதில் கடுப்பாகிறான் மாப்பிள்ளை.‘‘கிளம்புப்பா மகனே... இது விவாகரத்து நேரம்!’’ என வெளியே இருந்து அழைப்பு வருகிறது.கல்யாணச் சடங்கு போலவே மாப்பிள்ளை, பெண்ணை அமர வைக்கிறார்கள். ஒருவர் மாப்பிள்ளைக்கு வரவேற்பு பொட்டு வைக்க, ஒருவர் அதை அழிக்கிறார். வாயில் வெள்ளரிக்காயை ஊட்ட, அதை அந்தப் பக்கம் துப்பச் சொல்கிறார்கள். இருவரிடமும் இளநீரைக் கொடுத்து அதை வெறுப்புடன் தூக்கிக் கடாச வைக்கிறார்கள். இருவரையும் மங்கலத் துணியால் போர்த்தி அதை நடுவில் வெட்டி எறிகிறார்கள்.
இருவரும் கல்யாணத்தில் மாற்றிக் கொண்ட மோதிரத்தை அவரவரிடமே திருப்பிக் கொடுக்க, அனைவரும் அட்சதை தூவுகிறார்கள். எஸ்.என்.ஜி காமெடி எனும் யூ டியூப் சேனல் செய்திருக்கும் அட்டகாச வீடியோதான் Arranged Divorce! இந்தக் காலத்தில் திருமணங்கள் எத்தனை சர்வ சாதாரணமாக முறிக்கப்பட்டு விடுகின்றன என்பதை ஆதங்கம் பொங்க - ஆனால் சீரியஸாகச் சொல்லாமல் சிரிக்கச் சிரிக்க சொல்லியிருக்கிறது இந்த மும்பை டீம்.
- நவநீதன்
|