ஏ.டி.எம்.மில் பணம் திருடும் வைரஸ்!
விநோத ரஸ மஞ்சரி
‘ட்யுப்கின்’... இந்த ஒற்றை வார்த்தையைக் கேட்டால் இந்திய வங்கிகள் அனைத்தும் உச்சா போகும் அளவுக்கு ஓவர் பயத்தில் இருக்கின்றன. ‘யாரு இவரு? அவ்ளோ பெரிய தீவிரவாதியா?’ என்றால் இல்லை.
 ஜஸ்ட் ஒரு பென் டிரைவில் காப்பி பண்ணி எடுக்கக்கூடிய கம்ப்யூட்டர் வைரஸ்தான் இது. பழங்காலத்து ஏ.டி.எம் மெஷின்களில் இந்த வைரஸை ஏற்றினால், உடனடியாக அது ‘பழுது பார்க்கும் மோடு’க்கு மாறி, உள்ளே இருக்கும் பணத்தை எல்லாம் வெளியே தள்ளிவிடுமாம்!
From Russia... with love என்கிறார்கள் இந்த வைரஸைப் பற்றி. வழக்கம் போல ஒரு 19 வயதுப் பையன்தான் இதை உருவாக்கியது. சாதாரணமாக எந்த ஆன்டி வைரஸ்களாலும் கண்டுபிடிக்க முடியாதபடி, ‘பவர் ஷெல்’ எனும் புதிய தொழில்நுட்பத்தை இந்த வைரஸ் பயன்படுத்துகிறதாம்.
இந்த வருடத்தின் துவக்கத்திலிருந்தே ரஷ்ய வங்கிகள் இந்த வைரஸைத் தடுக்க படாத பாடு பட்டன. மெல்ல, ஐரோப்பா எங்கும் பரவி இப்போது இந்தியாவுக்கு வந்து சேர்ந்திருக்கிறது இந்த வில்லன் வைரஸ்.
ஒரு வைரஸ் பரவ ஏன் இவ்வளவு நாள்? மற்ற வைரஸ்களைப் போல இது இணையம் மூலம் சட்டென்று பரவுவதில்லை. ஏ.டி.எம்மை கொள்ளை அடிக்க நினைக்கிறவர்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட ஸ்பெஷல் ப்ரோகிராம் இது.
பொதுவாக ஏ.டி.எம் மெஷின்களில் அதனை கணினியோடு இணைப்பதற்காக ஒரு யு.எஸ்.பி போர்ட் இருக்கும். அதில் இந்த வைரஸ் அடங்கிய பென் டிரைவை சொருகிவிட்டாலே போதும்... மெஸ்மெரிசம் செய்யப்பட்ட ஆள் போல அந்த மெஷின், தன் உள்ளே இருக்கும் பணத்தை எல்லாம் உமிழ்ந்துவிடும்.
இந்த வைரஸும் பென் டிரைவுமாக உலகம் முழுக்க கொள்ளையடிக்கப் பரவிய கும்பலை ‘அனுனாக்’ எனப் பெயரிட்டு அழைக்கிறது சைபர் போலீஸ். இந்தியாவுக்குள் அனுனாக் அட்டகாசம் இதுவரை நுழைந்ததில்லை. கடந்த வாரம்தான் இந்த வைரஸும் கையுமாக சிலர் குஜராத்தில் சிக்கியிருக்கிறார்கள். சூரத் நகரில் உள்ள ஒரு ஏ.டி.எம்மை கொள்ளையடிக்க முயன்ற அவர்களிடம் விசாரணை நடக்கிறது.
மற்ற உலக நாடுகளைப் போல் இல்லாமல் இந்தியாவில் வங்கிகள் தங்களைப் புதுப்பித்துக்கொள்வதில்லை. அரதப்பழசான ஏ.டி.எம் இயந்திரங்களையே இன்றும் வைத்து ஓட்டிக் கொண்டிருக்கின்றன. நவீன பாதுகாப்பு வசதிகள் இல்லாத அவை இந்தத் தாக்குதலால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ளது ஏ.டி.எம் மெஷின்களைத் தயாரிக்கும் என்.சி.ஆர் நிறுவனம். எங்களை மட்டும் தீபாவளிக்கு மொபைலை மாத்து, மொபைலை மாத்துங்கறீங்க... நீங்களும் மெஷினை மாத்துங்கப்பா!
- ரெமோ
|