டெக்னிக்



‘ஏண்டா, நானும் பார்க்கிறேன்... தினம் உன் பொண்டாட்டி செய்யிற சமையல்ல ஒவ்வொண்ணையும் குத்தம், குறை சொல்லிக்கிட்டே இருக்கே? இத்தனை வருஷம் அவ வீட்டுப் பழக்கம்... திடீர்னு சமையல் உட்பட எல்லாம் எப்படி தலைகீழா மாறும்? இத்தனைக்கும் என்கிட்ட கேட்டுத்தான் பண்றா.

ஒவ்வொருத்தர் கைபாகம் ஒவ்வொரு மாதிரி. இப்படியே நீ குறை சொல்லிட்டு இருந்தா, ‘எப்படின்னாலும் இவர் குறைதான் சொல்லப் போறார்’னு அவ சோர்ந்து போயிட மாட்டாளா? கொஞ்சம் அனுசரி! கல்யாணமாகியாச்சு. இன்னமும் ‘அம்மா சமையல்... அம்மா கைமணம்’னு பேசி என்னைக் கெட்டவளாக்கி விடாதே!’’ - மாமியார் பேசியது ஆறுதலாக இருந்தது அவளுக்கு.

அன்றிரவு...‘‘அப்பாடா, எப்படி என் டெக்னிக்?’’ என்றான் கணவன்.‘‘டெக்னிக்கா..?’’‘‘ஆமா, நான் மட்டும் குறை சொல்லலைன்னா எங்க அம்மாவே குறை சொல்லியிருப்பாங்க. உனக்கும் அவங்களுக்கும் சண்டை வந்திருக்கும்.

நான் ஒண்ணுமே சொல்லாம இருந்தாலும், ‘பொண்டாட்டி செஞ்சா மட்டும் ஒண்ணும் சொல்ல மாட்டான்’னு எனக்கு கெட்ட பேர் வரும். இதையெல்லாம் தவிர்க்கத்தான் நானே ஓவரா குறை சொல்லி, கோவக்காரன் மாதிரி காட்டிக்கிட்டு, எங்க அம்மாவையே உனக்கு சப்போர்ட் பண்ண வச்சிட்டேன்!’’ என்ற கணவனை நின்றியோடு பார்த்தாள் அவள்.   
     

எஸ்.ஜானகி