மாட்டு மாமிசம் உண்பது அவரவர் உடம்பு சம்பந்தப்பட்டது, அவரவர் உணவு சம்பந்தப்பட்டது, அதைவிட உணர்வு சம்பந்தப்பட்டது. பசு வதை என்கிற பெயரில் மாட்டுக் கறி விற்பனையை தடை செய்யறவங்க, மாட்டின் பாலை எடுத்துப் பயன்படுத்துவதையும் தடை செய்யணும். ஏன்னா, அதுவும் ஒரு வகையில் பசு வதைதான் என்கிறார்கள் படித்தவர்களும் புத்திசாலிகளும்.
நாம அதுக்குள்ளே ஆழமா போக விரும்பல. ஏன்னா நம்ம குறிக்கோள், இதுபோல வேறென்ன வகையான விளம்பரங்களை மோடி சர்க்கார் பெறலாம் என்பதற்கு ஐடியா கொடுப்பதோட நிறுத்திக்கிறதுதானே!
* இந்தியா முழுக்க பட்டுச் சேலை, பட்டுச் சட்டை, பட்டு வேட்டி பயன்படுத்துவதை பட்டுப்பூச்சிகளின் வதை என சொல்லி தடை செய்யணும். ஒரு பயலும் கல்யாணத்துக்குக் கூட பட்டுத் துணி உடுத்திடக் கூடாது.
* நாட்டுல ஒரு டி.வி. சேனல்லயும் இந்த ஜூனியர் பாடகர், ஜூனியர் நடிகர்னு ஒரு நிகழ்ச்சி நடக்கக் கூடாது. ஸ்கூலுக்குப் போக வேண்டிய குழந்தைங்களைக் கூட்டியாந்து கும்மியடிக்கிறாங்கன்னு சிறார் வதை எனச் சொல்லி இப்படிப்பட்ட எல்லா நிகழ்ச்சிகளையும் தடை பண்ணி விட்டுடணும்.
* நூறு டிகிரில எண்ணெய காய வச்சு அதுல வடைய சுடுறது என்பது வடை வதைன்னு சொல்லி நாட்டுல போண்டா, பஜ்ஜி, வடை, முறுக்குகளை தடை பண்ணி நாட்டு மக்களை கிறுக்கு புடிக்க வைக்கலாம்.
* எப்ப பாரு கொலை, கொள்ளை, தற்கொலை, கள்ளக்காதல்னு செய்தி தர்றதே தினசரிகளின் பொழப்பா போச்சு. இது மக்களின் மனசை வதை செய்கிறதுன்னு சொல்லி இந்தியா முழுக்க பத்திரிகைகளை தடை செய்யலாம்.
* இது எல்லாத்தையும் விட, மற்ற தேசியக் கட்சிகள் முதல் மாநிலக் கட்சிகள் வரை, எங்களுக்கு போட்டியா இருப்பது எங்கள் ஓட்டு வங்கியை வதை செய்கிறதுன்னு சொல்லி பா.ஜ.க. தவிர எல்லா கட்சிகளையும் தடை செய்துட்டா பிரச்னை ஓவர்!
மனிதனைப் படைத்த கடவுள் பெரியவனா? இல்ல, எண்ணற்ற கடவுள்களைப் படைத்த மனிதன் பெரியவனா? வட மாநிலத்தில முதல் மந்திரியா இருந்த ஒருத்தரு மாடு தின்கிற தீவனத்துல கைய வச்சு மாடுகளுக்கே மொட்டையடிச்சு 900 சொச்ச கோடி சம்பாதிச்சு இருக்காரு. அட, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடத்தறேன்னு சொல்லி உலக நாடுகளையே மொட்டையடிச்சு பல ஆயிரம் கோடி எடுத்தாங்கன்னும் சொல்றாங்க.
போலியா பத்திரம் செஞ்சு நாடு முழுக்க அதை பரவ விட்டு 20000 கோடி வரை மக்களை மொட்டையடிச்சாங்கன்னு சொல்றாங்க. அட, சத்யம் கம்ப்யூட்டர் படிச்ச புத்திசாலிங்களையே மொட்டையடிச்சு 12000 கோடி வரை சுருட்டிச்சு. இப்படிப்பட்டவங்க இருக்கிற நாட்டுல, பாவம் திருப்பதி வெங்கடாசலபதியால கூட மக்கள மொட்டையடிச்சதன் மூலமா 173 கோடிதான் வருமானம் பார்க்க முடிஞ்சிருக்கு. இப்ப சொல்லுங்க... கடவுள் பெரியவனா? இல்லை, மனிதன் பெரியவனா?
பா.ஜ.க எம்.பி சாத்வி ப்ராச்சி போன வாரம் ஒரு அதி அற்புத ஸ்டேட்மென்ட்டை சொல்லியிருக்காங்க. அதாவது, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்து மதத்தைச் சேர்ந்தவர், அவரின் உண்மையான பெயர் வராகமிர் புத்ர சிங்காம். அக்காவோட லாஜிக்படி வேற யாரு யாரெல்லாம் இப்படி இந்து மதத்தைச் சேர்ந்தவங்கன்னு விட்டத்த வெறிச்சி யோசிச்சுப் பார்த்தேன். இதெல்லாம்தான் தோணுச்சு...
அட, நம்ம ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூட இந்துதான், அவரோட உண்மையான பேரு ரகு பாண்டியன்; அதான் பேச்சு வழக்குல ரிக்கி பாண்டிங்னு மாறிடுச்சு. இந்த பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கூட இந்துதான். வாசு விக்ரம்ங்கிற அவரோட பேருதான் காலத்தின் கோலத்துல அப்படி மாறிடுச்சு. ‘இன்செப்ஷன்’, ‘இன்ட்ராஸ்டெல்லர்’னு உலகத்தை மிரட்டும் அளவு படமெடுக்கும் கிறிஸ்டோபர் நோலன் கூட இந்து தான். கிரிதர் நகுலன் என்ற பேருதான் வெள்ளைக்காரன் வாயில விழுந்து கிறிஸ்டோபர் நோலன்னு மாறிடுச்சு.
ஹாலிவுட் படம்னாலே நம்மாளுங்க பல பேருக்கு நினைவுக்கு வர்றது அர்னால்டு ஸ்வார்ஸ்நீகர்தான். அதுவும் ‘ஐ’ பட ஆடியோ ரிலீசுக்கு வந்துட்டுப் போன பிறகு அவரு கிட்டத்தட்ட ஆதார் கார்டு இல்லாத இந்தியன் மாதிரி ஆகிட்டாரு. அவரு கூட இந்துதான்னா பாருங்களேன். அரவிந்த் சுகுமார் என்கிற பேருதான் இப்படி அர்னால்டு ஸ்வார்ஸ்நீகர்னு மாறிக் கிடக்கு. இந்த உலகத்தையே தன் அழகால ஆட்டிப் படைச்ச மர்லின் மன்றோ கூட நம்மாளுதான்.
அவங்க உண்மையான பேரு மாலினி மனோகர். அதைத்தான் படுபாவிங்க இப்படி மர்லின் மன்றோவா மாத்தி வச்சிருக்காங்க. இந்த புவி ஈர்ப்பு விசைய கண்டுபிடிச்சு சொன்ன விஞ்ஞானி ஐசக் நியூட்டன் கூட இந்துதான். அவரோட உண்மையான பேரு அய்யாசாமி நிரஞ்சன். இந்த கம்ப்யூட்டர் புலி, உலகத்தின் நம்பர் ஒன் பணக்காரர் பில் கேட்ஸ் கூட இந்துதான்னா பாருங்களேன். அவரோட உண்மையான பேரு பாபு கணேஷ். அதான் மருவி இப்படி பில் கேட்ஸ்னு ஆயிடுச்சு. இப்பவாவது புரிஞ்சுக்கோங்க மக்களே, அபிராமில இருந்து தான் ஆபிரகாம் முதல் இப்ராஹிம் வரை உலகம் பூரா வந்திருக்கு!
கோயிலுக்குப் போறேன்னு கை காசு செலவு பண்ணி வாடகைக்கு வண்டி எடுத்துக்கிட்டு, நம்ம காசை செலவு பண்ணி டீசலும் அடிச்சுக்கிட்டு, போற வர்றப்ப வழிச் செலவு, வயித்துச் செலவுன்னு செஞ்சுக்கிட்டு, கோயில் வாசல்ல பூ முதல் புஷ்பம் வரை, பழம் முதல் பத்தி வரை, சூடம் முதல் கற்பூரம் வரை, அவன் எதை வித்தாலும் பேரம் பேசி பத்து ரூபா கம்மியா வாங்கிட்டத பீத்திக் கிட்டு, சீக்கிரமா கும்பிடணும்னு சிறப்பு தரிசன டோக்கன் செலவுன்னு நேரத்தை பணம் கொடுத்து வாங்கிக் கிட்டு, பூஜை புனஸ்காரம்னு அய்யருக்கு பைசாவ கொடுத்துக்கிட்டு,
உண்டியல்ல ஆரம்பிச்சு அர்ச்சனை தீபத் தட்டுவரை காச அள்ளி வீசி சாமிக்கே லஞ்சம் கொடுத்துக்கிட்டு, ‘சாமி, என்னைய காப்பாத்து, நான் பணக்காரனாகணும், எனக்கு நிறைய பணம் கொடு’ன்னு வேண்டுறதுதான் நம்ம பயக புத்தி. நம்மாளுங்களப் பொறுத்தவரை கோயிலுக்குப் போறதும் கோயில்ல பண்றதும் செலவு இல்ல, மூலதனம். சும்மா சொல்லக் கூடாது... பக்திய கூட பக்கா பிசினஸா பண்றாங்க. இவனுங்க சாமிகிட்ட வேண்டுன மாதிரி பணக்காரனுங்க ஆனாங்களோ இல்லையோ, ஒவ்வொரு சாமியும் இத்தனை பணவீக்கத்துலயும் வருமா னம் குறையாம வசதியா வாழ்ந்துக்கிட்டு இருக்கு!
ஆல்தோட்ட பூபதி