எல்லோருக்கும் தேவை சைகை மொழி!



‘மொழி’ படம் பார்த்திருக்கிறீர்களா? அல்லது காது கேளாதோர் பள்ளி, கல்லூரி பக்கம் போயிருக்கிறீர்களா? அங்கே படிக்கும் சிறுவர்களும் இளைஞர்களும் பெண்களும் வெறும் சைகை மொழியிலேயே புன்னகையோடு தங்களுக்குள் உரையாடுவார்கள், விளையாடுவார்கள், அரட்டை அடிப்பார்கள்.

பக்கத்திலேயே நின்றாலும் நமக்கு ஒன்றும் புரியாது. ‘‘ஏன் அப்படி புரியாம பார்க்கணும்? தமிழ், இங்கிலீஷ் மாதிரி இதுவும் ஒரு மொழி. இந்த சைகை மொழியை நாம எல்லாருமே கத்துக்கணும்!’’ என்கிறார் பெங்களூரைச் சேர்ந்த அருண் சி.ராவ். சொன்னதோடு மட்டுமல்லாமல், தனது ‘டெஃப் வே ஃபவுண்டேஷன்’ எனும் அமைப்பின் மூலம் சைகை மொழிக்கு எளிய அகராதி ஒன்றையும் கொண்டு வந்திருக்கிறார் இந்த அரிய மனிதர்!

‘‘எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து, அவளுக்குக் காது கேட்கலைங்கற விஷயம் எனக்கு ஆறே மாசத்துல தெரிஞ்சுது. என் மகள்கூட பேசுறது ஆரம்பத்துல எனக்கு ரொம்ப சிக்கலா இருந்தது. ஆனா, போகப் போக அவளோட இயல்பா பேச ஆரம்பிச்சிட்டேன். என் மகளை மாதிரியே இந்தியாவில் மொத்தம் 18 லட்சம் பேருக்கு காது கேளாத பிரச்னை இருக்குன்னு அப்புறம் தெரிஞ்சிக்கிட்டேன். அவங்களுக்கான சிறப்புப் பள்ளிகள்ல சைகை மொழியைக் கற்றுத் தர்றாங்க. கைகளாலும், உடல் அசைவுகளாலும், முகத்தில் வெளிப்படுத்தும் உணர்வு களாலும் பேசப்படற வார்த்தைகளற்ற மொழி இது.

இந்த சைகை மொழி வழியாக அவங்க ஒருத்தருக்கொருத்தர் தங்கு தடையில்லாம பேசிக்குவாங்க. நாம தமிழ் பேசுறதை விட வேகமா அவங்களுக்குள்ள பேசிச் சிரிப்பாங்க. ஆனா, அதுவே நம்மகிட்ட பேசணும்னா தடுமாற்றம் வந்துடும். நமக்கும் அவங்ககிட்ட பேசுறது எப்படின்னு புரியாது. இதனால காது கேளாத, வாய் பேச முடியாதவங்களுக்கும் நமக்கும் பெரிய இடைவெளி ஒண்ணு விழுந்துடுது. அவங்க உலகம் தனியாகிடுது. அதை மாத்தறதுக்கான முயற்சி தான் இந்த அகராதி!’’ என்கிறார் ராவ்.

வெள்ளை நிறத்தை எப்படி சைகையில் காட்டுவது... ‘வரும் திங்கட்கிழமை’ என எப்படிச் சொல்வது... ‘மழை பெய்யுமா?’ என எப்படிக் கேட்பது... ‘குடிக்க காபி வேண்டும்’ என கேட்பது எப்படி... என பல விஷயங்கள் இந்த டிக்ஷனரியில் வண்ணப் படங்களோடு உள்ளன. வண்ணங்கள், நாட்கள், மாதங்கள், எண்கள், நேரம் சொல்லுதல், வானிலை, குடும்ப உறவுமுறை, உணவுகள், பழங்கள்/காய்கறிகள், பொது வெளி இடங்கள், உணர்வுகள் என நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தக் கூடிய அறுநூறு வார்த்தைகளுக்கு இப்படிப் படங்களுடன் விளக்கம் உள்ளது.

‘‘உலகம் முழுக்க நாட்டுக்கு நாடு, கலாசாரத்துக்கு கலாசாரம் இந்த சைகை மொழியில சின்னச் சின்ன மாறுதல் இருக்கும். ஆனா, அடிப்படை உரையாடலுக்கு சில பொதுவான சைகைகளே போதும். காது கேளாதோரோடு பழகுற நண்பர்கள், உறவினர்களுக்கு இது ரொம்ப உதவும். இப்படி ஒரு கைடு கிடைக்காம நான் ரொம்ப கஷ்டப்பட்டேன். என் மகளோட பேசுறதுக்காக நானே தனியா கிளாஸ் போகலாமான்னு கூட யோசிச்சிருக்கேன். அந்தப் பிரச்னை இனி யாருக்கும் வரக் கூடாது.

இந்த அகராதி மூலம் காதுகேளாத பிள்ளைகள் அவங்க குறைகளை மறந்து பொதுஜனங்களோட கலந்து பழக ஆரம்பிச்சா அதுவே சந்தோஷம். காதுகேளாதோரின் பிரச்னையில அது பாதியை குறைச்சிடும்!’’ என்கிறார் ராவ் நம்பிக்கை பொங்க!(அறிவிப்பு பக்கத்தில் நம்ம மாடல் சைகை மொழியில என்ன சொல்ல வர்றாங்க தெரியுமா? வரிசையா அந்தப் படங்கள் சொல்ற விஷயம்... ‘நீங்க எல்லோரும் இதையெல்லாம் தெரிஞ்சிக்கிட்டு எங்ககூட பேசணும்.

இது எங்க விருப்பம்!’) (Sign Language for Beginners, Price: Rs.800/, For copies: signlanguagebook@gmail.com)  என் மகளோட பேசுறதுக்காக நானே தனியா கிளாஸ் போகலாமான்னு கூட யோசிச்சிருக்கேன். அந்தப் பிரச்னை இனி யாருக்கும் வரக் கூடாது!

டி.ரஞ்சித்
மாடல்: நந்தினி
படங்கள்: புதூர் சரவணன்