இரண்டு வீட்டிலும் பெண் பார்த்து விட்டு வீடு திரும்பினார்கள் அவர்கள். முதலில் பார்த்த பெண்ணைத்தான் குடும்பத்தினர் எல்லோருக்கும் பிடித்திருந்தது.தினேஷுக்குப் பொருத்தமாக இருப்பாள். நல்ல அழகு, வசதி! இருந்தும் கட்டிக்கொள்ளப் போகிறவனின் விருப்பம்தான் முக்கியம் என தினேஷின் முடிவைக் கேட்டார் அப்பா.‘‘எனக்கு ரெண்டாவதா பார்த்த பெண்ணைத்தான்பா பிடிச்சிருக்கு!’’ என திடுக்கிட வைத்தான் தினேஷ். எல்லோருக்கும் திகைப்பு.
‘‘எங்கே பொண்ணு பார்க்கப் போனாலும், எல்லோரும் பஜ்ஜி, போண்டான்னு எண்ணெய்ப் பலகாரங்கள் கொடுத்து உபசரிப்பாங்க. ஆனா, இவங்க பழங்கள், மோர்னு ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, வித்தியாசமா வரவேற்றாங்க. அதனால ரெண்டாவது வீட்டுக்கே சம்மதம் சொல்லிடுங்கப்பா!’’ என்றான் அவன்.அதே நேரம்...இரண்டாவது பெண் வீட்டில், பெண்ணின் அப்பா கோபத்துடன் கத்திக்கொண்டிருந்தார்.
‘‘உங்களுக்கு எல்லாம் கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா? பூனைங்க வந்து பஜ்ஜி, போண்டாவை எல்லாம் உருட்டி விட்டுட்டு பாலை குடிச்சிருக்குங்க. முக்கியமான நேரத்துல இவ்வளவு அலட்சியமா இருந்திருக்கீங்க..! நல்லவேளை, ஃபிரிட்ஜில பழமும் தயிரும் இருந்ததால சமாளிச்சிட்டோம். சரியா கவனிக்கலைன்னு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க நம்மள தப்பா நினைக்கப் போறாங்க பாரு’’ என்றார் அவர் பயந்தபடி!
வி.அங்கப்பன்