உலகுக்கு நம் பெருமை சொல்லும் ஆவணப்படம்
வந்தேறிகளின் தேசமாக பல நாடுகள் இருக்கின்றன. தொடர்ச்சியாக மனித குலம் வாழ்ந்துகொண்டிருக்கும் பிரதேசங்கள் இந்த பூமியில் மிகக் குறைவு. அவற்றில் தமிழகமும் ஒன்று. கற்காலத்திலிருந்து மனிதன் நம் மண்ணில் வாழ்ந்துகொண்டிருக்கிறான். ஒரு லட்சம் ஆண்டுகளுக்கும் மேலாக மனிதர்கள் வாழும் மண் இது என்பதை அடித்துச் சொல்கிறது குடியம் குகை!’’
- தன் மனப் பரவசங்களை நமக்கும் கடத்துகிறார் ரமேஷ் யந்திரா. சென்னையில் செட்டிலான ஐ.டி மனிதர். ஆர்வம் உந்தித் தள்ளியதால் இப்போது ஆவணப்பட இயக்குனர். ‘Gudiyam Caves: Stone age rock shelter of South India' எனும் இவரின் ஆவணப்படம், வரும் மே மாதம் நடக்கவிருக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது!
‘‘சென்னையில இருந்து 65 கி.மீ தூரத்துல பூண்டி நீர்த்தேக்கம் பக்கத்துல இருக்கு குடியம் கிராமம். அங்கருந்து ஒரு வாக் போனாலே போதும்... அந்த அதிசயக் குகைகளைப் பார்க்கலாம். சுமார் 140 மீட்டர் உயரமான ஒரு மலையின் அடிவாரத்துல அமைஞ்சிருக்குற ரெண்டு குகைகள்தான் வரலாற்றுல ‘குடியம் குகைகள்’னு அழைக்கப்படுது.
முதல் குகை சுமார் 230 அடி நீளம் 65 அடி அகலம் உள்ளது. குறைஞ்ச பட்சம் 500 பேராவது இந்தக் குகையில படுத்துத் தூங்கி வசிக்கலாம். ரெண்டாவது குகை சின்னது. நூறு பேர் அதில் வாழ முடியும். ரெண்டுமே பாறைப் படிவுகளால இயற்கையாவே உருவான குகைகள். இப்படி இயற்கையா ஒரு வாழிடம் உருவாக கோடிக்கணக்கான ஆண்டுகள் ஆகும்னு சொல்றாங்க. கற்கால மனிதர்கள் பயன்படுத்தின ஆயுதங்கள் இங்கே கிடைச்சிருக்கு.
இப்படியொரு இடம் சென்னைக்குப் பக்கத்துலயே இருக்குன்னு கேள்விப்பட்டதும் எனக்குக் கோவம்தான் வந்தது. நான் சென்னை ஓவியக்கல்லூரியில படிச்சவன். காலேஜ் சார்பா இந்தியா முழுக்க வரலாற்றில் முக்கியமான பகுதிகளை சுத்திப் பார்த்திருக்கோம். ஆனா, பக்கத்துலயே இருக்கிற இந்த மாதிரி பொக்கிஷத்தை நமக்கு யாரும் சொல்லலையேன்னு வந்த கோவம் அது. நாமாவது இந்த குகையைப் பத்தி உலகத்துக்குச் சொல்லணும்னு முடிவெடுத்தேன்’’ என்கிற ரமேஷுக்கு, இந்தக் குகை அதிகம் ஆராய்ச்சிக்குள்ளாகாதது ஏன் என்பதில் இப்போதும் வியப்பு!
‘‘புகழ்பெற்ற பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர் ராபர்ட் ப்ரூஸ், முதன்முதலா இந்தக் குகைகளை ஆராய்ந்து எழுதியிருக்கார். அதுக்கப்புறம் இந்திய - தமிழக ஆய்வாளர்கள் நிறைய பேர் இந்தக் குகைகளைப் பத்தி தொல்பொருள் ஆய்வுகள், புவியியல் ஆய்வுகள் செஞ்சு விளக்கமா எழுதியிருக்காங்க. ஆனா, 1965க்குப் பிறகு இந்தக் குகைகளைப் பற்றிய ஆராய்ச்சிகள் எதுவுமே நடக்கல. யாரும் வராததால இந்த ஏரியாவே புதர் மண்டிப்போச்சு.
இப்போ இந்த குகை இருக்கிற இடத்தை புலிக்குன்றம் ரிசர்வ் ஃபாரஸ்ட்னு சொல்றாங்க. ஒரு அகழ்வாராய்ச்சி சைட்டாவோ, சுற்றுலாத் தலமாவோ இல்லை. கற்கால மியூசியமாஇருக்க வேண்டிய இடம், ஏன் இப்படி காடாச்சு? யாருக்குமே தெரியல!’’ என்கிற இவர், தானே முன்வந்து இங்கு சில ஆராய்ச்சிகள் செய்து அதை ஆவணப்படத்தில் இணைத்திருக்கிறார்.‘‘இந்தப் படத்துக்கு கேமரா பண்ணினது என் ஃப்ரெண்ட் வசந்த். திரைப்படக் கல்லூரியில படிச்சவர்.
எக்கச்சக்க நேரத்தையும் பணத்தையும் ரெண்டு பேருமே இதுக்காக செலவு பண்ண வேண்டியிருந்துச்சு. நாங்க அலசின வரைக்கும் இங்க வாழ்ந்த மக்கள், தனித்தனியா உணவு சேகரிக்கும் குழுவா வாழ்ந்திருக்காங்க. வேட்டைக்காக கல் ஆயுதங்களை உருவாக்கியிருக்காங்க.
மத்தபடி, விலங்குகள் மாதிரியான வாழ்க்கைதான். வெறும் தொல்பொருள் ஆய்வு மட்டுமில்லாம குகைகளையும் பாறைகளையும் புவியியல் கோணத்துலயும் அலசி யிருக்கு இந்த ஆவணப்படம். அந்தந்த துறை அறிஞர்கள், நிபுணர்கள் கருத்தோட ஆதாரபூர்வமாதான் பேசுறோம். அதனாலதான் கேன்ஸ் விழாக் குழுவுல ஏத்துக்கிட்டிருக்காங்க. அங்க திரையிடப்படுற 6 இந்தியக் குறும்படங்கள்ல இதுவும் ஒண்ணு.
கேன்ஸ் விழாவுக்குப் பிறகு இதை இந்தியாவில் திரையிட சில மாற்றங்கள் பண்ண வேண்டி யிருக்கு. சொல்லப்போனா இதை நம்ம மக்களுக்குத்தான் போட்டுக் காட்டணும். அவங்கதான் உணரணும். எவ்வளவோ மதிப்பான இடம்...
ஆனா, அங்க பாட்டில் இறைஞ்சு கிடக்குறதும், கற்பூரம் ஏத்தி கோயிலாக்க முயற்சிக்கிறதும் நம்ம அறியாமையைத்தான் காட்டுது. அதை மாத்துறதுதான் இந்தப் படத்தோட நோக்கம்!’’ - உணர்ச்சியும் உறுதியுமாக முடிக்கிறார் ரமேஷ் யந்திரா!முதல் வேலையா, ‘சென்னைக்கு மிக அருகில்’னு இதை யாரும் தவணையில் வித்துடாம தடுக்கணும்!
டி.ரஞ்சித்