apple watch on the way
‘செவ்வாய்க் கிரகத்துக்கு போன் போட முடியுமாம்’ என்றுதான் புரளி கிளம்பவில்லை... மற்றபடி மேப் இருக்கு, ஆப் இருக்கு, டி.வி இருக்கு, ஃப்ரிட்ஜ் இருக்கு என ரூம் போட்டு ரூமர் கிளப்பி விட்டார்கள் ஆப்பிள் வாட்ச்சைப் பற்றி! எத்தனை காத்திருப்பு... எத்தனை எதிர்பார்ப்பு..! அத்தனைக்கும் பதில் சொல்லும் விதமாக சிங்கம் வெளியே வருகிறது. ஆம்; வரும் ஏப்ரல் 10ம் தேதி முதல் ஆப்பிள் வாட்ச்சுக்கான முன்பதிவு துவங்கப்பட உள்ளது.
எதிர்பார்ப்பின் உச்சத்தில் இருக்கும் இந்த ஸ்மார்ட் வாட்ச், ஏப்ரல் 24ம் தேதி முதல் மக்களின் மணிக்கட்டு மகுடமாகப் போகிறது!‘ஸ்டீவ் ஜாப்ஸே போய்விட்டார்... இனிமேல் இந்த நிறுவனம் என்ன சாதிக்கப் போகிறது’ என்ற அவப்பெயரில் இருந்து ஆப்பிள் இன்னும் மீண்டபாடில்லை. ஜாப்ஸ் மரணித்த பின், ஆப்பிளுக்கு அத்தாரிட்டியான டிம் குக் மீது எதிர்பார்ப்பு பிரஷர் எக்கச்சக்கம். ஆனால் அவரது காலத்தில் வெளியான ஆப்பிளின் அப்டேட் மாடல்கள் அத்தனை மீதும் விமர்சனங்கள் ஏராளம். ஐபோன் 5ல் ஆயிரத்தெட்டு புகார்கள், 5சி ரொம்ப சீப் அயிட்டம், 6ஐ இவ்ளோ பெரிசாக்கியிருக்கக் கூடாது என அணிவகுக்கின்றன குறைகள்.
ஸ்டீவ் ஜாப்ஸ் இருந்தபோது ஐ பாட், ஐ போன், ஐ பேட் என ஆப்பிள் களமிறக்கியதெல்லாம் உலகம் அதுவரை கேள்விப்பட்டிராத டெக்னாலஜி அதிசயங்கள். அப்படி ஒரு ‘புதுசு’ அவர் இறப்புக்குப் பின் வரவில்லை என்ற புலம்பல்கள் ஆப்பிளை நசுக்கி ஜூஸ் குடிக்கப் பார்க்கின்றன. ‘‘அலுவல் தவிர வேறு அறியாத ஜாப்ஸ் எங்கே... ‘நானொரு ஓரினச் சேர்க்கையாளன் என்பதில் பெருமை கொள்கிறேன்’ என அவுட் ஆஃப் தி வே பேசித் திரியும் குக் எங்கே!’’ - இப்படியும் வசை பாடுகிறார்கள் சிலர். இவை அத்தனையையும் துடைத்து எறிய வேண்டிய பொறுப்பு இந்த ஆப்பிள் வாட்ச் மீது. தட் மீன்ஸ், குருவி தலையில் பறங்கிக்காய்!
உண்மையில், ஸ்மார்ட் வாட்ச் என்பது உலகத்துக்குப் புதிதா? ‘தயாராகுது ஆப்பிள் வாட்ச்’ என முதன்முதலில் செய்தி கசிந்ததே... அப்போது இது புது கான்செப்ட்தான். ஆனால், இப்போது சாம்சங், மோட்டரோலா, சோனி, எல்.ஜி., ஏன்... இந்தியக் கத்துக்குட்டியான ஸ்பைஸ் நிறுவனம் கூட ஸ்மார்ட் வாட்ச் தயாரிக்கிறது. உள்ளூர் மார்க்கெட்டில் அவை 3 ஆயிரம் ரூபாய் தொடங்கி லோல்படுகின்றன. இந்த நிலையில்தான் டூ லேட்டாக ட்யூட்டிக்கு வருகிறது ஆப்பிள் வாட்ச்.
ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் வாட்ச் ஸ்போர்ட், ஆப்பிள் வாட்ச் எடிஷன் என இப்போதைக்கு இதில் மூன்று ரகங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 38 எம்.எம்., 42 எம்.எம் என இரண்டு சைஸ்கள். ஆரம்ப விலையே நம்மூர் பணத்துக்கு 22 ஆயிரம் ரூபாய். 18 காரட் தங்கத்தால் இழைக்கப்பட்ட ஸ்பெஷல் எடிஷன்கள் 10 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் வரை விலை இருக்கும். இரண்டரை மணி நேரத்தில் சார்ஜாகும் இந்த வாட்ச், 18 மணி நேரம் செயல்படுமாம். ஐபோன் 5 அல்லது அதற்கு மேற்பட்ட மாடல் வைத்திருப்பவர்களுக்குத்தான் இது பயன்படும்.
ஐபோனுக்கு வரும் அழைப்புகளை இந்த வாட்ச் மூலமே எடுத்துப் பேசலாம்; மெஸேஜ்களைப் படிக்கவும் முடியும். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வீ சாட் போன்றவற்றில் கடலை போடவும் இனி வாட்சே போதும். இது போக, அடையாளம் தெரியாத பாடல்களைக் கிரகித்து, அது எந்த ஆல்பத்தில் உள்ளது எனத் தேடிக் கொடுத்து விடும் திறனும் இதற்கு உண்டு. மருத்துவரீதியாக இந்த வாட்ச் நம்மை வாட்ச் பண்ணிக் கொண்டே இருக்கும். நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தால், ‘கொஞ்ச நேரம் எழுந்து நடந்து உடற்பயிற்சி செய்யுங்கள்’ என அக்கறை கட்டளை போடும்.
மார்பகப் புற்றுநோய், சர்க்கரை நோய் என கட்டியிருப்பவர் தம்மைப் பற்றிய தகவல்களைப் பதிந்துவிட்டால், பரிசோதனை செய்ய வேண்டிய நாள், சிகிச்சை நேரம் என எல்லாவற்றையும் முன்கூட்டியே அலெர்ட் செய்யும். கிரெடிட் கார்டு விவரங்களைப் பதிவு செய்து வைத்துவிட்டால், கவுன்டர்களில் பணம் செலுத்தவும் ஆப்பிள் வாட்ச்சே போதும். சில வகை கார்களை இயக்கவும் குறிப்பிட்ட சில ஹோட்டல்களில் அறைக் கதவுகளைத் திறக்கவும் கூட ஆப்பிள் வாட்ச்சில் ஆப்கள் இருக்கும் என அறிவித்திருக்கிறார் சி.இ.ஓ. டிம் குக்.
‘‘எல்லாம் சரி... ரேட்டை குறைத்து ரோட்டில் இறங்கும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் வாட்ச்களே போணியாகாமல் கிடக்க, ஆப்பிள் மட்டும் வந்து என்ன கிழிக்கப் போகிறது?’’ - இதுதான் இப்போது டெக் டாக்! காரணம், மக்கள் ஸ்மார்ட் போன் அளவுக்கு ஸ்மார்ட் வாட்ச்சை முக்கியமானதாகக் கருதவில்லை. ‘கழுத, போன் வந்தா எடுத்துப் பேசிட்டுப் போறது. இதுக்கு எதுக்கு ஒரு வாட்ச்’ என வி.கே.ராமசாமியாகவே விவேகம் காட்டுகிறார்கள். இதற்காக பெரிய தொகையை செலவிடவும் தயாராக இல்லை.
‘அதெல்லாம் சும்மாப்பா, ஆப்பிள் போட்டியில இறங்கிட்டா மார்க்கெட் தன்னால உருவாகும். அப்படித்தான் இத்தனைக் காலமா உருவாகியிருக்கு!’ என இதைக் குறுக்கே பாய்ந்து மறுக்கிறார்கள் ஆப்பிள் ரசிகர்கள்.அவர்கள் சொல்வாக்கு பலித்து ஆப்பிள் வாட்ச் ஜெயித்து, புதிய சந்தையை உருவாக்கித் தந்தால், இதர ஸ்மார்ட் வாட்ச் நிறுவனங்களுக்கும் லாபம்தான். ஆக, இப்போது ஆப்பிள் வாட்ச் ஜெயித்தாக வேண்டும் எனப் பிரார்த்தித்துக் கொண்டிருப்பது டிம் குக்கும், ஆப்பிள் நிறுவனமும் மட்டுமல்ல...
சாம்சங், மோட்டரோலா உள்ளிட்ட எதிரிகள் முகாமும்தான்!மக்களின் தீர்ப்பு என்னவோ!ஐபோனுக்கு வரும் அழைப்புகளை இந்த வாட்ச் மூலமே எடுத்துப் பேசலாம்; மெஸேஜ்களைப் படிக்கவும் முடியும். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வி சாட் போன்றவற்றில் கடலை போடவும் இனி வாட்ச்சே போதும்.
கோகுலவாச நவநீதன்