பேத்தியைப் பெற்றெடுத்த பாட்டி!



ஒரு நெகிழ்ச்சி நிஜம்

பிரசவத்தின் உச்சவலியால் துவண்டு கிடக்கிறார் அந்தப் பெண்மணி. விழிகளில் தேங்கி நிற்கும் தேடல் உணர்ந்து, பசுமை குலையாத அந்தக் குழந்தையைத் தூக்கி அவரின் முகத்திற்கு நேராகக் காட்டுகிறார் மருத்துவர். ‘‘அம்மா... நீங்க பெத்தெடுத்த உங்க பேத்தியைப் பாருங்க!’’ வலியைக் கடந்து நெகிழ்ச்சியும் பரவசமும் அந்தத் தாயின் முகத்தில் பூக்கிறது. கண்கள் அரும்ப, தான் ஈன்றெடுத்த தன் பேத்தியின் கரங்களைப் பற்றுகிறார் அந்தத் தாய்.

நம் சென்னையில்தான் இப்படியொரு அதிசயம். கருப்பை சிக்கலால் குழந்தையைச் சுமக்கமுடியாமல் தவித்த தன் மகளுக்காக, தன் கருப்பையில் அவர்களின் சிசுவைச் சுமந்து வெற்றிகரமாகப் பிரசவித்திருக்கிறார் ஒரு பெண்மணி. அவரின் வயது 61. சமூகத்தின் அவப் பார்வைகளைப் புறம் தள்ளி, தம் மகளின் துயர் துடைப்பதற்காக, மீண்டும் தன் கருப்பைக்கு உயிர்கொடுத்து, பிரசவத்தின் மரண வேதனையை எதிர்கொண்டிருக்கிறார் அந்தத் தாய். 

‘‘என்னோட மருத்துவ அனுபவத்தில இது மறக்க முடியாத நெகிழ்ச்சியான நிகழ்வு. ஒரு பெண் கருவைச் சுமக்கணும்னா உடல் அளவுக்கு மன வலிமையும் முக்கியம். மெனோபாஸ் வந்து, உடல் தளர்ந்த 61 வயசுல, தன் மகளோட துயரத்தைப் போக்குறதுக்காக ஒரு பெண்மணி இப்படிக் கருவைச் சுமக்க முன்வர்றது பெரிய விஷயம்’’ என்கிறார், இந்த உணர்வுபூர்வமான பிரசவத்தைக் கையாண்ட சென்னை ஆகாஷ் குழந்தையின்மைக்கான சிகிச்சை மையத்தின் நிறுவனர் டாக்டர் காமராஜ். 

‘‘லட்சுமி அந்தத் தாய்க்கு மூணாவது பொண்ணு. மத்த ரெண்டு பெண்களுக்கும் குழந்தைகள் உண்டு. லட்சுமி தி.நகர்ல வசிக்கிறாங்க. கணவன், மனைவி ரெண்டு பேருக்குமே ஐ.டி. செக்டார்ல வேலை... திருமணமான ஒரு வருஷத்துலயே லட்சுமி கர்ப்பம் தரிச்சிருக்காங்க. ஆனா 7வது மாதம் ‘அப்ரப்ஷன்’னு ஒரு பிரச்னை வந்திருக்கு.

கர்ப்பப்பையில குழந்தையோட உடம்புல இருந்து நஞ்சு தனியே பிரிஞ்சிடுச்சு. அதனால ரத்தப்போக்கு ஏற்பட்டு குழந்தை இறந்திடுச்சு... தாயோட உயிருக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்பிருந்ததால கர்ப்பப்பையையே முழுமையா எடுத்திட்டாங்க. சின்ன வயசுல கர்ப்பப்பையை எடுக்க நேர்ந்ததால, அந்தப் பெண் துயரத்துல மனசுடைஞ்சு போயிட்டாங்க.

வாடகைத்தாய் மூலமா குழந்தை பெத்துக்கிற எண்ணத்துல எங்களைச் சந்திச்சாங்க. வரும்போது அந்தப் பெண்ணின் அப்பா, அம்மாவும் உடன் வந்தாங்க. ‘வாடகைத்தாய் மூலம் குழந்தை பெத்துக்கிறது இன்னைக்கு சாதாரணமாயிடுச்சு. ஆனா, குறைஞ்சது 10 லட்ச ரூபாய் செலவாகும். வாடகைத்தாயை கர்ப்ப காலம் முழுவதும் நாமதான் பராமரிக்கணும்.

நிறைய நடைமுறைச் சிக்கல்கள் இருக்கு... அதுவும் எல்லா நேரமும் அது சாத்தியம்னும் சொல்ல முடியாது. இதுவே உங்க உறவுக்காரங்க யாராவது வாடகைத்தாயா இருக்க சம்மதிச்சா செலவு ரொம்பவே குறையும். அதேநேரம், மருத்துவரீதியாவும் மரபுரீதியாவும் நல்லது. அப்படி யாராவது இருந்தா பாருங்க...’ன்னு அவங்களுக்கு கவுன்சிலிங் கொடுத்தோம்.

அப்போ பக்கத்தில உக்கார்ந்திருந்த லட்சுமியோட அம்மா, ‘நான் கருவைச் சுமக்க முடியுமா’னு கேட்டாங்க. உண்மையிலேயே ஆச்சரியமா இருந்துச்சு. ஏற்கனவே மூன்று பெண்களைப் பெற்ற தாய் அவங்க... அப்போ 60 வயசு... மாதவிடாய் நின்னாச்சு... இந்தச் சூழல்ல, சமூகப் பார்வைகளுக்கு முக்கியத்துவம் தராம அவங்க இப்படி யோசிக்கிறதே பெரிய விஷயம். அவங்க உடம்பு இதை ஏத்துக்கிட்டா, தாராளமா அவங்களே கருவைச் சுமக்கலாம்னு பரிந்துரைச்சோம். 

ஆனா அதுல பல சவால்கள் இருந்துச்சு. 60 வயசுக்கு மேல உடல் உறுப்புகள்ல தளர்ச்சி இருக்கும். கர்ப்பம் சுமக்கிற நேரத்துல ஹார்மோன் மாற்றங்கள் இருக்கும். அதை உடம்பும், மனசும் ஏத்துக்கணும். அதனால ஏற்படுற உளவியல் சிக்கல்கள்... அப்புறம் கர்ப்ப காலத்துல மட்டும் வரக்கூடிய நீரிழிவு மாதிரி சில பிரச்னைகள்... எல்லாத்தையும் அவங்களுக்குப் புரிய வச்சோம். தன் மகளோட சந்தோஷத்துக்காக எதையும் தாங்கிக்க அவங்க தயாரா இருந்தாங்க.   

அவங்க உடல்நிலையைப் பரிசோதிச்சோம். ஆரோக்கியத்தில பிரச்னையில்லை. ஹார்மோன் சிகிச்சை மூலமா மீண்டும் மாதவிடாய் வர வைச்சோம். லட்சுமியோட கருமுட்டையையும், அவங்க கணவரோட உயிரணுவையும் இணைச்சு, ‘இக்சி’ங்கிற மருத்துவ முறைப்படி கருவா வளர்த்து, லட்சுமியின் அம்மாவோட கருப்பையில வச்சோம். கொஞ்ச நாள் கண்காணிப்புக்குப் பிறகு வீட்டுக்குப் போயிட்டாங்க... ஒன்பதாவது மாதம், சிசேரியன் மூலம் குழந்தை பிறந்துச்சு. குழந்தையும், ‘பாட்டியும்’ நலம்...’’ என்று சிரிக்கிறார் காமராஜ்.  

இந்தியாவில் 100ல் 15 தம்பதிகளுக்கு குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இதில் 2 தம்பதிகளுக்கு கர்ப்பப்பையில் பிரச்னை ஏற்படுகிறது. அவர்களுக்கு வாடகைத்தாய்கள் அவசியமாக இருக்கிறார்கள். வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதில் உணர்வு ரீதியாக பல பிரச்னைகள்... ஆனால் ‘‘இப்படியான ரத்த உறவுகளே வாடகைத்தாய்களாக முன்வந்தால் அதில் இருக்கும் பெரும்பான்மை சுமைகள் குறைந்துவிடும்’’ என்கிறார்கள் மருத்துவர்கள்.

பாட்டியே பேத்தியைச் சுமப்பது உலகில் ஓரிரு இடங்களில்தான் நடந்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு, இதய பலவீனம் காரணமாக கருவைச் சுமக்க சக்தி யற்ற எம்மா ஹாட்டர்லே என்ற லண்டன் பெண்ணின் கருவை 53 வயதான அவரின் அம்மா அன்னி சுமந்து பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். பிரிட்டனில் வசிக்கும் ஒரு குஜராத் பெண், இங்கு வந்து 55 வயதான தன் தாயின் கருப்பையில் தன் குழந்தையை வளர்த்தெடுத்து பிரசவித்துச் சென்றார்.

அடுத்து இதோ இந்தத் தாய்... அதிக வயதில் தம் மகளின் கருவைச் சுமந்து பிரசவித்த உலகின் முதல் பாட்டியாக இவரே இருக்கக்கூடும் என்கிறார்கள்.  பாட்டிகள் தம் மகளின் குழந்தைகளை தோளில் சுமப்பார்கள். இந்தப் பாட்டி வயிற்றிலும் சுமந்திருக்கிறார். தாய்மை மகத்துவமானது!இப்படியான ரத்த உறவுகளே வாடகைத்தாய்களாக முன்வந்தால் அதில் இருக்கும் பெரும்பான்மை சுமைகள் குறைந்துவிடும்!

வெ.நீலகண்டன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்