அழைப்பு



துபாயிலிருந்து விடுமுறையில் வந்திருந்த தம்பி ரவியை சந்திக்கச் சென்றாள் மாதவி. கடும் கோபத்தோடு!''ஏன்டா, என் பையன் துபாய்க்குப் புதுசா வந்திருக்கான். நீ அவன் ரூமுக்குச் சும்மா போய்ப் பார்த்துட்டு மட்டும் வந்துட்டியாமே?

ஒரு சம்பிரதாயத்துக்குக் கூட உங்க வீட்டுக்குக் கூப்பிடலையாம். போன்ல ரொம்ப வருத்தப்படறான். ஏன்டா அப்படிப் பண்ணினே? அவன் ரூம் மேட்ஸ் எல்லாம் கூட கேலி பண்ணிச் சிரிக்கறாங்களாம். நீ அங்க பெரிய அந்தஸ்துல இருக்கறதாலே கௌரவம் தடுத்துடுச்சா.

இல்ல, உன் வீட்டுக்கு வந்தா அங்கேயே தங்கிட ஆசைப்படுவான்னு பயந்துட்டியா?’’‘‘சேச்சே, அதெல்லாம் இல்லக்கா! புதுசா வர்றவங்களுக்கு ஆரம்பத்துல சுமாரான பேச்சிலர் ரூம்தான் கொடுப்பாங்க. நான் பல வருஷமா குடும்பத்தோட துபாய்லயே இருக்கறதாலே என் வீட்டுல சோபா செட், டி.வி, கம்ப்யூட்டர், அது இதுன்னு நிறைய இருக்கும்.

இவ்வளவு படாடோபங்களைப் பார்த்து, எந்த வசதியும் இல்லாத தன்னோட பேச்சிலர் ரூமை கம்பேர் பண்ணி வேதனைப்படுவான். சிலருக்கு ஹோம் சிக்னஸ் வந்திடும். பலபேர் வேலை செய்யவே மனமில்லாம ஊருக்குக்கூட திரும்பியிருக்காங்க. அவனுக்கு அப்படி ஆகக்கூடாது. அதனாலதான் அப்படிப் பண்ணினேன்’’ என்று சொன்னதும் மாதவியின் மதிப்பில் உயர்ந்து நின்றான் ரவி.               

ஷேக் சிந்தா மதார்