உணவு விழிப்புணர்வுத் தொடர்
உணவு பற்றிய நம்முடைய புரிதலின்மையை உலகம் முழுவதும் கடை விரித்திருக்கும் உணவு நிறுவனங்கள் நன்றாகவே பயன்படுத்திக் கொள்கின்றன. சில உணவுகளை, சில உணவுப் பொருட்களை ‘ஆபத்தானவை’ என்ற பயத்தை நமக்குள் ஏற்படுத்தி, அவற்றுக்குப் பதிலாக புதிய வியாபாரத்தைத் துவங்குவது இந்த நிறுவனங்களின் உத்திகளில் ஒன்று.
இன்று நாம் சமைப்பதற்கு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவது மிக அரிதாகி விட்டது. ‘‘தேங்காயா? அது உடலில் கொலஸ்டிராலைச் சேர்க்கும். இதய நோயையும், ஹார்ட் அட்டாக்கையும் கொண்டு வந்து விடும்’’ என்று நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் அளவிற்கு நாம் பழகி விட்டோம். தேங்காய் எண்ணெய் பற்றி நாம் புரிந்து கொண்டாலே உணவு நிறுவனங்கள் நம்மிடம் எப்படி வியாபாரம் செய்கின்றன என்று புரிந்து கொள்ளலாம். சமையலுக்கு சூரியகாந்தி எண்ணெய், சோயா எண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றைவிட தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடுகு எண்ணெய் போன்ற எண்ணெய்கள் மிகவும் சிறந்தவை.
உலகில் பெரும்பாலான நாடுகளில் மரபாகப் பயன்படுத்தப்பட்டு வந்த தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடுகு எண்ணெய் போன்றவற்றை அமெரிக்காவின் சோயா எண்ணெய்ப் பிரசாரம் பின்னுக்குத் தள்ளியது. சோயா எண்ணெய் வியாபாரத்தை அதிகரிப்பதற்காக அமெரிக்கா அதற்கு மானியம் வழங்கி, உலகம் முழுவதும் கொலஸ்டிரால் பயத்தை ஏற்படுத்தி ரீஃபைண்ட் ஆயிலை அறிமுகம் செய்தது. இப்போது நம் நாட்டில் இருக்கும் பெரிய நிறுவனங்கள் அமெரிக்கப் பிரசாரத்தைத் தொடர்ந்து செய்தபடி, தங்கள் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்கிறார்கள்.
‘கொழுப்பு நீக்கப்படாத, நேரடியாக செக்கில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயைப் பயன்படுத்துவதால் நம் உடலில் கொலஸ்டிரால் கூடி, அடைப்பு ஏற்பட்டு இதய நோய்கள் வந்து விடும்’ என்ற அச்சம் இக்காலத் தில் நமக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. நம்மையெல்லாம் ரீஃபைண்ட் ஆயிலைப் பயன்படுத்தச் சொன்ன அமெரிக்கா, உலகம் முழுவதிலும் இருந்து தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது.
ஏன் தெரியுமா? தேங்காய் எண்ணெயில் இருந்து மோனோலாரின் என்ற இயற்கையான சத்துப் பொருளைப் பிரித்தெடுத்துப் பயன்படுத்துகிறார்கள். இதில் விசேஷம் என்னவென்றால், நம்முடைய தேங்காய் எண்ணெயிலிருந்து பிரித்தெடுக்கப்படும் இந்த மோனோலாரின் என்ற பொருளிற்கு அமெரிக்கா காப்புரிமை பெற்றிருக்கிறது.அதென்ன மோனோலாரின்?
நம்முடைய உடலின் அடிப்படை எதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ள விசேஷ சத்துப் பொருள்தான் லாரிக் அமிலம். இதன் இன்னொரு பெயர், மோனோலாரின். இந்த லாரிக் அமிலம் இடம் பெற்றுள்ள இரண்டே பொருட்கள்தான் உலகில் கிடைக்கின்றன. ஒன்று, தாய்ப்பால். இன்னொன்று, தேங்காய் எண்ணெய். தாய்ப்பாலின் முக்கியத்துவம் நமக்குத் தெரியும். ஒரு குழந்தை தன் வாழ்நாள் முழுவதும் எதிர்ப்புச் சக்தியோடும், ஆரோக்கியத்தோடும் இருக்க வேண்டுமானால் தாய்ப்பால் அவசியம். அதிலுள்ள விசேஷ சத்துப்பொருள் தேங்காயிலும் இருக்கிறது.
தேங்காய் எண்ணெயை மட்டுமல்ல... இயற்கையான தாவர எண்ணெய்களில் எதைப் பயன்படுத்துவதாலும் நம் உடலில் கொழுப்பு ஏற்பட வாய்ப்பே இல்லை. தாவர எண்ணெய்களில் இருக்கும் இயற்கையான கொழுப்பு, நம் ரத்த நாளங்களில் ஏற்படும் குறைபாடுகளை நீக்கும் தன்மையுள்ளது. இது சமீபத்திய அறிவியல் கண்டுபிடிப்புகள் கூறும் செய்தி. தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் கொலஸ்டிரால் அல்லது இதய நோய் ஏற்படுமா என்பதைத் தெரிந்து கொள்ள கேரளா நல்ல உதாரணம்.
கேரள மக்கள் தங்கள் எல்லா வகை உணவுகளிலும் தேங்காய் எண்ணெயைத்தான் பயன்படுத்துகிறார்கள். கொலஸ்டிரால் வருவதாக இருந்தால், உலகிலேயே முதலில் அவர்களுக்குத்தான் வந்திருக்க வேண்டும். ஆனால், இந்தியாவில் இதயநோயால் அல்லது கொலஸ்டிராலால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் இருக்கும் மாநிலங்களின் பட்டியலில் கேரளாவின் பெயர் இல்லை. தேங்காய் எண்ணெய் மற்றும் இயற்கையான தாவர எண்ணெய்களைப் பயன்படுத்தினால் கொலஸ்டிரால் வராது என்று நாம் பேசிக் கொண்டிருக்கும் இதே நேரத்தில் இன்னொரு குண்டைத் தூக்கிப் போடுகிறார் டாக்டர் பி.எம்.ஹெக்டே.
டாக்டர் ஹெக்டே ஆங்கில மருத்துவத்தின் இதய நோய்ப் பிரிவு சிறப்பு மருத்துவர். சிறந்த மருத்துவ சேவைக்காக பத்மபூஷண் விருது பெற்றவர். மருத்துவப் பேராசிரியர். மணிபால் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய மருத்துவ விழிப்புணர்வுக் கல்வியை மருத்துவர்களிடத்திலும், பொதுமக்களிடத்திலும் ஏற்
படுத்தி வருபவர்.
‘‘கொலஸ்டிராலுக்கும் இதய நோய்க்கும் சம்பந்தமே இல்லை. பன்னாட்டு மருந்துக் கம்பெனிகள் கூறும் பொய்களை கிளிப்பிள்ளைகளைப் போல திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் இந்திய மருத்துவர்கள்’’ என அதிரடியாகச் சொல்கிறார் ஹெக்டே. ‘‘கொலஸ்டிரால் குறைவு என்பது இதய நோய்க் குறைவு இல்லை. மாறாக, கொலஸ்டிரால் குறைவது புற்றுநோயை ஏற்படுத்தும் ஆபத்தை அதிகரிக்கவே செய்யும். மாரடைப்பிற்குக் காரணம் கொழுப்பு அடைப்பு (Arthro Sclerosis) அல்ல. சிறு உறை கட்டியே (Clot). இந்த உறை கட்டி ஏன் உண்டாகிறது என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை!’’
நாம் ரீஃபைண்ட் ஆயிலைப் பயன்படுத்துவதற்கான அடிப்படைக் காரணம், கொலஸ்டிரால் மற்றும் இதயநோய் பற்றிய பயம்தானே? இந்த இரண்டுமே இயற்கையான எண்ணெய்களைப் பயன்படுத்தினால் ஏற்படாது.
இயற்கையான தாவர எண்ணெய்களை அளவோடு பயன்படுத்துவது நமது ஆரோக்கியத்தை நிலைப்படுத்தும்; எதிர்ப்புச் சக்தியை பலப்படுத்தும். நம்முடைய தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்த முடியாமல் நோயின் பெயரால் அச்சத்தை ஏற்படுத்தி, ரீஃபைண்ட் ஆயிலை மார்க்கெட் செய்யும் தந்திரத்திற்கு இடம் கொடுத்தது எது தெரியுமா? நம்முடைய உணவு பற்றிய தெளிவின்மையும், புதிய உணவுப் பொருட்கள் மீதான ஆர்வமும்தான்.
நம்முடைய அன்றாடப் பயன்பாட்டு உணவுகளில் என்னென்ன பிரச்னைகள் உள்ளன? வாருங்கள் நம் கிச்சனுக்குப் போகலாம்... ஒரு குழந்தை தன் வாழ்நாள் முழுவதும் எதிர்ப்புச் சக்தியோடும், ஆரோக்கியத்தோடும் இருக்க வேண்டுமானால் தாய்ப்பால் அவசியம். அதிலுள்ள விசேஷ சத்துப்பொருள் தேங்காயிலும் இருக்கிறது.
(தொடர்ந்து பேசுவோம்...)
படங்கள்: புதூர் சரவணன்
மாடல்கள்: ரவீணா, மினி
அக்கு ஹீலர் அ.உமர் பாரூக்