பவ்யாவை பளாரென்று ரகு அறைந்த சத்தம் கேட்டு, பக்கத்து அறையிலிருந்த ராஜேஸ்வரி அம்மாள் பதறி ஓடி வந்தாள்.கோப முகத்தோடு ரகு கத்திக் கொண்டிருக்க, பவ்யாவின் கன்னம் கன்றிப் போயிருந்தது.
அதிர்ந்து அழுதுகொண்டிருந்தாள்.‘’டேய் ரகு... உனக்கு பைத்தியமா? பொண்டாட்டியை போட்டு இப்படி அடிக்கறே!’’‘‘மாமியார்னு இல்லாம அவளை ஒரு அம்மா மாதிரி பாசமா நடத்து றீங்க... உங்களைப் பத்தி தப்புத்தப்பா எதிர் வீட்டு ஹேமாகிட்ட சொல்லி இருக்காம்மா. அடிக்காம கொஞ்ச சொல்றீங்களா..?’’
‘‘நான்தான் அப்படி சொல்லச் சொன்னேன்டா!’’‘‘நீங்களே சொன்னீங்களா? புரியலையே..!’’‘‘ஹேமாவோட மாமியார் ரொம்ப கொடுமைப்படுத்துறதா அவ பவ்யாகிட்ட புலம்பியிருக்கா. அதனால, ‘என் மாமியாரும் இப்படித்தான். எல்லா மாமியாரும் இப்படித்தான். அதனால மனச தளர விடாதே. தைரியமா இரு. காலம் கனியும்போது எல்லாம் சரியாகிடும்’னு அவகிட்ட நான்தான் சொல்லச் சொன்னேன். இப்ப ஹேமா நம்பிக்கையோட வாழறா.
நம்ம வீட்டு நிலைமை நல்லா இருக்குன்னா அது நம்மோட இருக்கணும். சில சமயம் ‘எங்களுக்கு பிரச்னையே இல்ல’ன்னு வெளியில சொல்றதே அடுத்த குடும்பத்தில் பிரச்னையைக் கொண்டு வந்துடும்!’’ - மருமகளை அணைத்தபடி புன்னகைத்தாள் ராஜேஸ்வரி.
என்.ஷாகிதா