பெய்யனப் பெய்யும்
கோயிலுக்கெல்லாம் போவதில்லை அவள்;
கொழுநன் தொழுவதெல்லாம்
கழுவேற்ற வேண்டிய சடங்குகளில் ஒன்றென்பாள்
பெண்ணுக்கு அழகென்று வள்ளுவன்
பரிந்துரைத்த பழக்கங்களையெல்லாம்
தீயிலிட வேண்டுமென்பாள் தீவிரமாய்!
ஆயினும்...
காகிதப் பூக்களே கவர்ச்சி என்றும்
கட்டிடங்களின் பிரமாண்டமே வளர்ச்சி என்றும்
கற்பிதங்கள் நிறைந்த
கடும்பாலை வெளியில் வாழ நேர்ந்த
வெயில் கொளுத்திய ஒரு நாளின்
மங்கிய மாலை வேளையில்
வெளியில் கிளம்பிய புருஷனிடம்,
மழை பெய்யுமின்று
மறக்காமல் குடைகொண்டு போங்களென்றாள்;
மணாளன் மறுத்தபோதும் திணித்தனுப்பினாள்!
கக்கத்தில் கனக்கும் குடையுடன்
மனைவியை மனதுள் வைதபடி
வெளியில் சென்று வேலை முடித்து
வீட்டுக்குத் திரும்பும் வழியில்
அதிசயமாய்ப் பிடித்தது அடை மழை!
துளியும் நனையாமல் வீடு திரும்பியதும்
மனைவியிடம் கேட்டான் எப்படி அறிந்தாய்
இன்று மழை பெய்யுமென்று?
நீயும் வள்ளுவன் சொன்ன பத்தினிதான்!
முறைத்தபடி சொன்னாள் அவள்,
மன வலியை
முகத்தில் படிக்க முடிவது போல்
மழைவழி அறிய வானத்தை
வாசிக்கத் தெரிந்தால் போதும்;
பத்தினி என்கிற பாசாங்குகள் தேவையில்லை!
சோ.சுப்புராஜ்