ஐந்தும் மூன்றும் ஒன்பது



மர்மத் தொடர் 10

‘நான் பள்ளியில் படித்த காலத்தில் வரலாறும், புவியியலும் தனித்தனி பாடங்களாக இருந்தன. கொடுமை என்னவென்றால், இந்தப் பாடங்களில் யாருக்குமே பெரிய ஈடுபாடு இல்லை. ஆசிரியரே கூட பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. ஒரு மாணவனை விட்டு பாடத்தைப் படிக்கச் சொல்வார். படித்து முடித்த பின், அதற்கான கேள்விகளை போர்டில் எழுதிப் போடுவார். விடையைத் தன் விருப்பத்துக்கு எங்களில் சிலரிடம் கேட்பார்.

ஒருநாள் கலிங்க மன்னன் அசோகன் பற்றிய பாடத்தின்போது, ‘யுத்த களத்தில் கிடந்த பிணங்களைப் பார்த்து, அசோகன் மனம் மாறி பௌத்த மதத்துக்கு மாறினான். அதற்கு ஒரு பௌத்த துறவியும் தூண்டுதலாக விளங்கினார்’ என்றார். அதிலிருந்து ஒரு கிளைக் கேள்வி என்னுள் எழுந்தது.

‘ஒரு அரசனையே மனம் மாற்றி, மதம் மாற்றிடக் காரணமான பௌத்த மதம் இன்று ஏன் இந்தியாவில் இல்லை? இது இன்றும் இருப்பதாகக் காணப்படும் இலங்கையில் யுத்தம் என்று ஒன்று இல்லாத நாளே இல்லையே... ஏன்?’ என்று நான் கேட்டேன். என் கேள்வியை அதிகப்பிரசங்கித்தனமான கேள்வி என்று அந்த ஆசிரியர் கண்டித்தார்.

நானோ அசரவில்லை.‘சார்! வரலாறு என்பது அரசர்களின் வாழ்க்கை சார்ந்தது மட்டுமல்ல... அந்தக் கால மக்களின் வாழ்க்கை முறை, அவர்கள் பின்பற்றிய கலாசாரம் என்று பல விஷயங்கள் சார்ந்தது. அதை நாம் தெரிந்துகொள்வதில்தான் எல்லாம் உள்ளது. அசோகர் மரம் நட்டார், குளம் வெட்டினார், பௌத்த மதத்துக்கு மாறினார் என்பவை தலைப்புச் செய்தி போன்றவை. எனவே, விரிவான தகவல்களைத் தர வேண்டும்’ என்றேன்.

அநேகமாக சரித்திர, பூகோள பாடங்களுக்காக இப்படி ஆர்வமாகப் பேசியவன் பல கோடி தமிழ் மக்களில் நான் ஒருவனாகத்தான் இருப்பேன். இந்த ஆர்வமே என்னைக் கல்லூரியில் இளங்கலையில் சரித்திரத்தை மேஜராக எடுக்க வைத்தது!’- கணபதி சுப்ரமணியனின் ஆய்வுக் கட்டுரையிலிருந்து...முத்தழகு வந்து விழவும் சமையல்கட்டில் இருந்து புகை வர ஆரம்பித்தது. ஏதோ தீ விபத்து என்பது அனந்தகிருஷ்ணனுக்குப் புரிந்துவிட்டது.‘‘என்னாச்சு முத்தழகு...

ஃபயர் ஆக்ஸிடென்ட்டா? உனக்கு ஒண்ணும் ஆகலையே..?’’  என்று பதற்றமடைந்தவர் முன்பாக, புடவை முந்தானையை அவசரமாகச் சரி செய்துகொண்டே எழுந்தாள் முத்தழகு.
‘‘அய்யா... மைக்ரோவேவ் அடுப்புல குருமாவை சூடு பண்ண டெம்பரேச்சர் செட் பண்ணிக்கிட்டிருந்தேன். இடையில டம்முன்னு வெடிச்சுடுச்சு. பயத்துல நானும் ஓடிவந்து விழுந்துட்டேன்’’ என்றாள்.
அனந்தகிருஷ்ணன் அதைக் கேட்டபடி உள் நுழையப் பார்க்க, பத்மாசினி கத்தத் தொடங்கினாள்.

‘‘அய்யோ... நீங்க போய் எதையாவது தொட்டு ஷாக் அடிக்கப் போகுது... தொட்டுடாதீங்க!’’‘‘கொஞ்சம் சும்மா இருக்கியா! நான் என் ஃபேக்டரில எலெக்ட்ரிகல் டிபார்ட்மென்ட்ல ஒர்க் பண்ணவன்...’’ - என்கிற பதில் காதில் விழ, ப்ரியாவும் சமையலறைக்குள் நுழைந்தாள்.மைக்ரோவேவ் செவ்வகப் பெட்டி பீஸ் பீஸாக சிதறியிருக்க, ஸ்விட்ச் பாக்ஸ் எல்லாம் வெடித்து புகை கசிந்தபடி இருந்தது. ரப்பர் வாசம் கலந்த புகையாக மூக்கைச் சிதைத்தது. அதைப் பார்த்த நொடியில் அனந்த கிருஷ்ணன் வேகமாக விலகிச் சென்று மெயின் ஸ்விட்ச்சை அணைத்துவிட்டுத் திரும்பினார்.

அதற்குள் வாட்ச்மேன் தங்கவேலுவும் உள்ளே ஓடி வந்து, ‘‘என்னய்யா வெடிச் சத்தம்? பெரியவர் ரூம்ல குண்டு கிண்டு வெடிச்சிருச்சா?’’ என்று கேட்டான். அதைக் கேட்டபடி கணபதி சுப்ரமணியனும் வள்ளுவரும் கூட வந்துவிட்டனர்.‘‘என்னாச்சு அனந்த்..?’’‘‘பவர் ஷார்ட் சர்க்யூட் ஆகிடுச்சுப்பா...’’‘‘யாருக்கும் காயமில்லையே?’’‘‘அதெல்லாம் ஒண்ணுமில்ல. மைக்ரோவேவ் அடுப்புதான் வெடிச்சிடுச்சு. நம்ம ஏரியாவே வோல்டேஜ் விஷயத்துல மோசம்பா... ஹைதர் காலத்து டிரான்ஸ்ஃபார்மரை மாத்தாமலே இருக்காங்க. ஒரு எம்.எல்.ஏவோ... இல்ல, மந்திரியோ குடியிருந்தா அவங்களுக்காக மாத்தியிருப்பாங்க. நாம சாமான்ய ஜனங்கதானே!’’ - இதுதான் சாக்கு என்று கணபதி சுப்ரமணியனிடம் சுய பச்சாத்தாபம் வேறு.

அந்த இடைவெளியில் வள்ளுவர் சமையல்கட்டைப் பார்த்தார். இப்போது புகை வடிந்து நன்றாகப் பார்க்க முடிந்தது. அவர் ஏதோ சொல்லப் போகிறார் என்று ப்ரியா யூகித்தாள்.
‘‘இன்னிக்கு இப்படி ஆனதுக்காக சந்தோஷப்படுங்க. பெரிய உயிர்ச் சேதம் ஏற்பட்டிருக்கணும். அக்னி மூலைக்கும் கன்னி மூலைக்கும் நடுவுல, எமன் நிக்கற இடத்துல அடுப்பு இருக்கு. இது எப்படின்னா, நம்ம இரண்டு கண்களும் ஒண்ணா சேர்ந்து ரெண்டு புருவத்துக்கு நடுவுல இருக்கற மாதிரி! எது எங்க இருக்கணுமோ அங்க இருந்தாதான் இயக்கம் சுலபமா இருக்கும். மாறினா அதன் பதில் விளைவைச் சந்திக்க வேண்டி யிருக்கும். இன்னிக்கு சந்திச்சுட்டீங்க...’’ - என்ற வள்ளுவரை கணபதி சுப்ரமணியன் கொஞ்சம் கேலியாகப் பார்த்துச் சிரித்த படியே, ‘‘என்ன... வாஸ்துவா?’’ என்று கேட்டார்.

‘‘ஆமாங்க...’’‘‘ரொம்பவே முட்டாள்தனமான ஒரு விஷயம் இது மிஸ்டர் வள்ளுவர். இந்த வீடு கட்டி இருபது வருஷமாச்சு. அதுல இந்த மைக்ரோவேவ் அடுப்பு வந்து ஏழெட்டு வருஷம் இருக்கும். இன்னிக்குத்தான் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கு. இதுக்குக் காரணம் மெயின் ரோட்ல இருக்கற பாழாப் போன டிரான்ஸ்ஃபார்மர்... அப்புறம் கூடிக் குறையற மின்சாரமும்! நீங்க என்னடான்னா நேரா வாஸ்துன்னுட்டீங்க. அதுகூட பரவாயில்லை. ஒரே தாவா எமன் நிக்கற இடம்னு எமன் வரை போயிட்டீங்க. யாருங்க இந்த எமன்?’’ - கணபதி சுப்ரமணியன் சற்று காட்டமாகவே கேட்க, வள்ளுவர் பதில் கூறாமல் சிரித்தார்.‘‘அப்பப்ப இப்படி சிரிச்சா என்ன அர்த்தம்?’’‘‘பின்ன... யார் இந்த எமன்னு கேட்டா நான் என்ன சொல்றது? நான் கிளம்பிப் போகும்போது முடிஞ்சா உங்களுக்கும் காட்டறேன்... ஆனா உங்களால அவனைப் பாக்க முடியாட்டி அதுக்கு நான் பொறுப்பில்ல!’’

‘‘மிஸ்டர் வள்ளுவர்! என் கேள்விக்கு தெளிவா பதில் சொல்லுங்க... பூசி மெழுகப் பார்க்காதீங்க...’’‘‘ஆராய்ச்சியாளரே! எனக்கு இந்தப் பூசி மெழுகற விஷயமே பிடிக்காது. தெளிவில்லாதவன்தான் பூசுவான்... மெழுகு வான்... நான் அப்படியில்லை!’’‘‘என்ன அப்படியில்லை... ஒரு எமன் எப்படி ஒரே சமயத்துல ஆயிரக்கணக்கானவர் உயிரை எடுக்க முடியும்? உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஆயிரக்கணக்கான உயிர்கள் பிறந்துக்கிட்டும் இருக்கு, இறந்துக்கிட்டும் இருக்கு... இதெல்லாம் ஒரே இடத்துல நடக்கறதில்ல... உலகம் பூரா நடக்குது. அவ்வளவு இடத்துக்கும் எமன் ஒருத்தனால எப்படிப் போய் உயிரை எடுக்க முடியும்? கொஞ்சமாவது லாஜிக் இருக்கா உங்க பதில்ல..?’’

‘‘வாஸ்தவம்தான்... எமனை ஒரு தனி மனுஷனா நினைச்சுப் பார்த்தா, லாஜிக் இல்லாத மாதிரி தான் தெரியும். ஆனா, எமனை ஒரு மின்சாரமா கற்பனை பண்ணுங்க. அது மேட்டூர் டேம்ல உற்பத்தியானாலும் ஊர் முழுக்க வீட்டுக்கு வீடு நுழைஞ்சு தேவைக்குத் தகுந்த மாதிரி பயன்படுற தன்மையை உதாரணமா எடுத்துக்குங்க! புரியலேன்னா கோர்ட் அமீனா வீட்டை ஜப்தி பண்ற மாதிரின்னும் சொல்வேன்... கோர்ட்டார் உத்தரவுப்படி அமீனா செயல்படுற மாதிரிதான் எமனும்...’’ - வள்ளுவரின் பதில் அனந்தகிருஷ்ணனுக்கு அந்த நேரத்துக்கு ரசிக்கக் கூடியதாய் இல்லை.
‘‘அப்பா! உங்க விவாதத்தை நீங்க தயவுசெய்து உங்க ரூமுக்குப் போய் கன்டினியூ பண்ணிக்குங்க. நான் எலெக்ட்ரீஷியனுக்கு போன் பண்ணி வரச் சொல்றேன். இப்ப முதல் தேவை கரன்ட்! உயிரை எடுக்கறது யாருங்கற கேள்வி இல்லை...’’ - என்று குரலில் சற்று ரௌத்திரம் காட்டினார்.

‘‘சாரிடா! உன் டென்ஷன் எனக்குப் புரியுது... பை த பை, எலெக்ட்ரீஷியன் வந்து கரெக்ட் பண்ற வரை நம்ப வீட்டுல பவர்கட். அப்படித்தானே?’’‘‘ஆமாம்...’’ என்றபடியே எலெக்ட்ரீஷியனுக்காக அவர் செல்போனில் ‘ணி’ லெட்டரில் தேடலைத் தொடங்கி ‘ஏழுமலை எலெக்ட்ரீஷியன்’ எனும் பெயரில் விரல் நுனியை வைக்க, அந்தப் பக்கமாய் எலெக்ட்ரீஷியனின் செல்போன், ‘உங்களுக்கு இந்த பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுங்களா?’ என்கிற கவுண்டமணி குரலை ஒலித்தது.‘‘ஒரு இந்தியனோட செல்போன்லதான் அவனைத் தவிர எல்லாரும் பேசுவாங்க... பாடுவாங்க..!’’ - என்று அனந்த் முணுமுணுக்க, ரிங்டோனில் கவுண்டமணி காமெடி தொடர்ந்து கொண்டே இருந்தது.

கணபதி சுப்ரமணியனும் வள்ளுவரும் அங்கிருந்து கிளம்பி விட, ப்ரியா அருகில் இருந்தாள். பத்மாசினியும் ஒதுங்கிவிட்டாள்.‘‘பாத்தியா ப்ரியா இந்த எலெக்ட்ரீஷியனை! எடுக்கறானா பாத்தியா போனை?’’‘‘வெயிட் பண்ணு டாடி... சைலன்ட் மோட்ல போனை வச்சுட்டு ஏதாவது வேலை பாத்துட்டிருக்கலாம்!’’‘‘என்ன வேலை..? டாஸ்மாக்ல தண்ணி அடிச்சிட்டு இருப்பான் இடியட்!’’‘‘டென்ஷன் ஆகாதே... வேற எலெக்ட்ரீஷியனுக்கு வேணா போன் பண்ணு!’’

‘‘நோ... நோ... இவனுக்குத்தான் இந்த வீட்டோட லைன் பத்தி தெரியும். புதுசா எவனாவது வந்து அவன் இஷ்டத்துக்கு எதையாவது பண்ணி திரும்ப ஷார்ட் சர்க்யூட் ஆனா?’’
‘‘பொறுமை டாடி... அந்த ஏழுமலைக்கே திரும்பவும் ட்ரை பண்ணு!’’அனந்தகிருஷ்ணன் திரும்ப முயற்சி செய்ய, மறுபடியும் கவுண்டமணியின் அதே கேள்வி. ‘பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுங்களா?’

‘‘பாத்தியா ப்ரியா... எதைத்தான் ரிங்டோனா வைக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லையா? விஞ்ஞான விஷயத்துல நாம எதையும் கண்டுபிடிக்க மாட்டோம். ஆனா, அதை யூஸ் பண்ணிக்கறதுல நம்மை அடிச்சுக்க ஆள் கிடையாது. விட்டா ஒபாமா வாய்ஸ் கூட கேட்கும்...’’‘‘டென்ஷனாகாதே... அந்த ஏழுமலையே கூப்பிடுவான். கொஞ்சம் வெயிட் பண்ணுவோம்...’’
‘‘யார் அவனா? திமிரு பிடிச்சவன்மா அவன். இன்னிக்கு டாக்டர்ஸ், எஞ்சினியர்ஸ் சீப்பாயிட்டாங்க. ஆனா, ஃபிஸிகலா ஒர்க் பண்றவங்க மலை மேல் ஏறிட்டாங்க. இவனோட ஒருநாள் சம்பளம் இப்ப எவ்வளவு தெரியுமா?’’

‘‘எவ்வளவு டாடி?’’‘‘சிக்ஸ் ஃபிப்டிம்மா... அதுபோக வாங்கற எலெக்ட்ரிகல் சாமான் அவ்வளவுலயும் கமிஷன். எப்படியும் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய்க்கு குறையாது. மாசம் முப்பதாயிரம்! ஆனா ஒரு பி.ஈ படிச்ச எஞ்சினியரிங் ட்ரெய்னிக்கு எங்க ஃபேக்டரில ஸ்டார்ட்டிங் சேலரியே நைன் தவுசண்ட்தான்...’’‘‘இந்தியப் பொருளாதாரமே ரொம்ப விநோதம்தான் டாடி... என் ஃப்ரெண்ட் வர்ஷன்கூட சிரிச்சிக்கிட்டே சொல்வான். மதுரைல இருந்து வைகை எக்ஸ்பிரஸ்ல சென்னைக்கு வர நூறு ரூபா சில்லறைதான். ஆனா, எக்மோர்ல இருந்து அடையாறு போக முன்னூறு ரூபாய்க்கும் மேலம்பான்!’’

‘‘நீ ஆட்டோ கொள்ளையை சொல்றியா? அவங்களையும் திருத்த முடியாது. விலைவாசி இவங்களுக்கு மட்டும் ஏறிட்ட மாதிரியே பேசுவாங்க!’’ - அவர்கள் இருவரும் நாட்டு நடப்புகளில், அதன் நசுக்கங்களில் பேச்சாய் இருக்க, வர்ஷனின் மோட்டார் பைக் சப்தம் கேட்டது. அதை நிறுத்திவிட்டு சாவியைத் தூக்கிப் போட்டுப் பிடித்த படி வர்ஷன் வருவதில் தமிழ் சினிமா ஹீரோக்கள் அவ்வளவு பேருமே தெரிந்தார்கள். ப்ரியாவின் கவனமும் கட் ஆனது.‘‘டாட்...’’‘‘என்ன உன் ஃப்ரெண்ட் வந்துட்டானா?’’

‘‘ம்...’’
‘‘கேரி ஆன்...’’ - என்று சற்று பெருமூச்சோடு அவளுக்கு விடை தரவும், வர்ஷன் ஹாலுக்குள் நுழையவும் சரியாக இருந்தது.
‘‘கமான் வர்ஷ்...’’
‘‘என்ன ப்ரியா! பவர் கட்டா?’’

‘‘ஆமாப்பா... வா, நாம தோட்டம் பக்கம் போவோம்...’’
‘‘எங்க அந்த வள்ளுவர்?’’ - வர்ஷன் ஆணியால் ஓலை மேல் எழுதுவது போல அபிநயித்து கேட்க... ‘‘உள்ள இருக்கார்...’’ என்றபடி வெளியே உள்ள வேப்ப மரம் சூழ்ந்த சிறு கார்டன் பகுதி நோக்கி நடந்தாள் ப்ரியா.

இடையில் வர்ஷனின் கைபேசியிடம் சிணுங்கல். காதைக் கொடுத்தான்.‘‘வர்ஷன்... அந்த வள்ளுவரை பார்த்துட்டியா?’’‘‘இல்ல சார்... இப்பதான் வீட்டுக்குள்ள நுழைஞ்சிருக்கேன்!’’‘‘ஜாக்கிரதை... அவர் மிஸ்டர் கணபதி சுப்ரமணியன்கிட்ட ஒப்படைச்ச விஷயங்கள்லதான் விஷயமே இருக்கு!’’‘‘ஐ நோ... ஐ நோ...’’‘‘பி கேர்ஃபுல்...’’‘‘நான் பாத்துக்கறேன் சார்... நீங்க பேச்சு மாறிடாம பேசின படி நடந்துக்குங்க!’’

‘‘நோ பிராப்ளம்... உங்க அக்கவுன்ட்ல இப்பவே அஞ்சு லட்ச ரூபாய் போட்டுட்டோம். இன்னுமா மெஸேஜ் வரலை?’’ - கேள்வியே வர்ஷன் வரையில் தித்தித்தது.
தோட்டத்தில் ஒரு மூலையில் கருந்தேள் ஒன்று, பங்களாவுக்குள் நுழைய விரும்புவது போல் சென்று கொண்டிருந்தது!

கவிதைக்கு ஒரு தினம்

காற்று இசையாகித்
தொடும் நேரம்
நான் மீண்டும்
உன்
புல்லாங்குழல் நதிக்குத்
திரும்புகிறேன்

தரவும் பெறவும்
முடியாத முத்தங்கள்
வானெங்கும்
விட்டுவிட்டுப் பிரகாசிக்கின்றன
என் பெருமூச்சைப்
போர்த்திவிடுகிறேன்
உன் கழுத்துவரை

காதலின் நீலம் கடல்
காதலின் மௌனம் மலை
சில முத்தங்களாலும்
கண்ணீர்த்துளிகளாலும்
கடந்துவிட நினைக்கிறோம்
கடல்களும் மலைகளும்
எப்போதும்
நம் கூடவே இருக்கின்றன

வெட்டுப்புலித் தீப்பெட்டிக்குள்
பொன்வண்டுகளோடு
மூச்சடைத்துவிட்டன
உன் வயதுகளும் சிறகுகளும்
ஆளுயரக் கண்ணாடியின் முன்
உன் உடல் குறுகுகிறது
ஆடைகளின் பேய்
உன்னை ஆட்கொண்டிருக்கிறது

தொடரும்...

இந்திரா சௌந்தர்ராஜன்
ஓவியம்: ஸ்யாம்