கனவுகளை விட்டுச் சென்ற கலைஞன்



தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அடையாளங்களில் ஒன்று, ‘அவள் அப்படித்தான்’. அதனை இயக்கிய ருத்ரையாவின் மறைவுச் செய்தி கேட்டபோது, மனம் துணுக்குறாமல் இருக்க முடியாது. அவரின் அணுக்கத் தோழராக இருந்த வண்ணநிலவன், இங்கே தன் நினைவுகளைப் பகிர்கிறார்...

‘1975ல் நிலையான வேலையில்லாமல் அலைந்து கொண்டிருந்த நாட்கள் அவை. இயக்குநரும் நண்பருமான ஜெய பாரதியை அடிக்கடி சந்திப்பேன். அவரும் நானும் ஆதம்பாக்கத்தில்தான் இருந்து வந்தோம். அவர்தான் என்னை கன்னட இயக்குநர் பி.வி.காரந்தின் ‘சோமன துடி’ என்ற படத்தின் ப்ரிவியூவுக்கு அழைத்துச் சென்றார். அங்குதான் எனக்கு ருத்ரையாவுடன் முதன்முதலாக அறிமுகம் ஏற்பட்டது.

அப்போது அவர் சென்னை திரைப்படக் கல்லூரியில் கடைசி ஆண்டு படித்துக் கொண்டிருந்தார். படித்து வெளியே வந்ததும் தி.ஜானகி ராமனின் ‘அம்மா வந்தாள்’ நாவலைப் படமாக்க நினைத்தார். என்னை அதற்கு திரைக்கதை, வசனம் எழுதச் சொன்னார். ஏனோ ‘அம்மா வந்தாள்’ படமாகவே இல்லை.அவர் வாசிப்பதில் மிகுந்த விருப்பமுடையவர்.

இலக்கியப் பத்திரிகைகளுடன் அறிமுகமிருந்தது. நான் 1976ல் சிறிது காலம் அறை நண்பனாக அவருடன் தங்கியிருந்தேன். அவரது அறையில் சினிமா சம்பந்தமான புத்தகங்கள் ஏராளமிருக்கும். 1960களில் பிரான்ஸில் ‘நியூ வேவ்’ என்ற சினிமா முயற்சி நடந்தது. அந்த ‘நியூவேவ்’ அலையின் முக்கிய இயக்குநரான கோடார்ட்டின் திரைப்படங்களை ருத்ரையாவுக்கு மிகவும் பிடிக்கும். அது போன்ற முயற்சிகள் தமிழிலும் நடக்க வேண்டும் என்று நினைத்தவர் ருத்ரையா.

அவரின், ‘அவள் அப்படித்தான்’ படத்திற்கு இன்றிருக்கிற புகழும் வரவேற்பும் வெளிவந்த சமயத்தில் இல்லை. சென்னையில், காமதேனு தியேட்டரிலும் ப்ளூ டயமண்ட் தியேட்டரிலும் ஓடியது. இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் திரையிடப்பட்டபோதுதான் அது உரிய கவனிப்பைப் பெற்றது.ருத்ரையாவின் இரண்டாவது படம் ‘கிராமத்து அத்தியாயம்’.

 இதில் முதலில் கதாநாயகனாக இயக்குநர் ஜெயபாரதிதான் நடிப்பதாக இருந்தது. பாடல்களெல்லாம் அருமையாக இருந்தும் ஏனோ படம் ஓடவில்லை. சினிமாவைப் பற்றி நிறையத் தெரிந்தவர் ருத்ரையா. அதனால்தான் அவரால் தொடர்ந்து திரைப்படத் துறையில் இயங்க முடியாமல் போயிற்றோ என்னவோ? கமலைப் போல ருத்ரையா ஒரு சினிமா இன்டலெக்சுவல்.

67 வயது என்பது பெரிய வயதில்லை. சிறிது காலத்துக்கு முன்பு கூட, இயக்குநர் அருண்மொழியிடம் அடிக்கடி ‘கமலை வைத்துப் படம் பண்ண வேண்டும்’ என்று சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறார். சந்திக்கும்போதெல்லாம், என்னிடம் ஏதாவது ஒரு புதிய சினிமா கதையைச் சொல்லி அபிப்பிராயம் கேட்பார். தன் கனவுகளை விட்டுவிட்டு ருத்ரையா மறைந்து விட்டார்.   

வண்ணநிலவன்