முத்தமிடுவது ஒரு போராட்ட வடிவம்!



சென்னையில் கிளம்பிய அனல்

கேரளாவின் கோழிக்கோட்டில் பற்றிய நெருப்பு... ஐதராபாத், மும்பை என பல்வேறு நகரங்களைக் கடந்து தற்போது சென்னைக்கும் பரவி விட்டது. ‘கிஸ் ஆஃப் லவ்’... தமிழில் ‘அன்பின் முத்தம்’ என்கிறார்கள். கோழிக்கோட்டில் ஒரு ஹோட்டலில் முத்தம் பகிர்வதற்காக ஒரு தனியிடம் ஒதுக்கப்பட்டிருந்தது பற்றி தொலைக்காட்சி ஒன்று செய்தி ஒளிபரப்ப, பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர்கள் அந்த ஹோட்டலை தகர்த்து விட்டார்கள்.

இதைக் கண்டித்து கொச்சியில் ராகுல் பசுபாலன் என்பவரின் தலைமையில் ஒன்றிணைந்த இளைஞர் கூட்டம், தெருக்களில் முத்தம் பகிர்ந்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் எங்கு பார்த்தாலும் ‘இச்... இச்...’ சத்தம். ஆதரவும் எதிர்ப்பும் சூடு கிளப்ப, ‘கிஸ் ஆஃப் லவ்’ மூவ்மென்ட் தேசம் முழுவதும் பரவியிருக்கிறது. ஆண்களும் பெண்களுமாக ஆரத் தழுவி, விழி மூடி ரசித்து முத்தம் பகிர்ந்து கொள்ளும் காட்சியைப் பார்த்து விக்கித்து நிற்கிறார்கள் மக்கள்.

சென்னையில் ஐ.ஐ.டி. மாணவர்கள் தமிழகத்தில் அன்பின் முத்தத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார்கள். மீடியாவின் சர்ச்சை வெளிச்சம் படாமல் தனித்திருக்கும் ஐ.ஐ.டி. வளாகத்தில் திடீர் ஒளி வெள்ளம். இதற்கு எதிர்வினையாக இந்து முன்னணியினர் ஐ.ஐ.டி. வளாகத்திற்கு எதிரே எச்சில் துப்பும் போராட்டத்தை நடத்தினார்கள். சென்னை ஐ.ஐ.டி.யில் ‘கிஸ் ஆஃப் லவ்’ மூவ்மென்ட்டை ஒருங்கிணைத்து நடத்திய பிரதீஷ் ராணி பிரகாஷை சந்தித்தோம்.மக்கள் அதிரும் அளவுக்கு வெட்ட வெளியில் இப்படி ஒரு நிகழ்வை நடத்த வேண்டிய அவசியம் என்ன?

‘‘அடிப்படைவாதிகளிடமிருந்து மக்களுடைய உரிமைகளைக் காப்பாற்றத் தொடங்கப்பட்ட ஒரு இயக்கமே ‘கிஸ் ஆஃப் லவ்’. தனி நபர்களின் உரிமைகளில் தலையிட்டு, அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதையே இந்தக் கலாசாரக் காவலர்கள் கொள்கையாக வைத்திருக்கிறார்கள். ஜாதியின் பெயரில், மதம், கோத்திரங்களின் பெயரில் தனி நபர்களின் திருமண உரிமைகளில் தலையிட்டு பிரச்னைகளை உருவாக்குவது,

ஆடை இலக்கணங்களை வகுப்பது, மொழி ரீதியாக, உணவு ரீதியாக தங்கள் கருத்தை தனிநபர்கள் மேல் திணிப்பது என இவர்களின் அட்டூழியங்கள் அதிகரித்துக்கொண்டே போகிறது. பொது இடத்தில் முத்தமிட அனுமதிக்க வேண்டும் என்று கோரி நாங்கள் போராடவில்லை. தனி மனித உரிமைகளில் இவர்கள் தலையிடுவதைக் கண்டித்து, முத்தமிடுவதை ஒரு போராட்ட யுக்தியாக எடுத்திருக்கிறோம்.’’

காதல், முத்தமெல்லாம் பரஸ்பர புரிதல்களோடு அறைக்குள் நிகழ வேண்டிய பகிர்வுகள். அதைப் பொதுவெளியில் நிகழ்த்துவதன் மூலம் கலாசாரத்தைக் கெடுப்பதாக உங்கள் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது... ‘‘நாங்களும் கலாசாரத்தைப் போற்றுகிறோம். ஆனால் கலாசாரம் என்ற பெயரில் வாழ்வுரிமையையும், தனி நபர் சுதந்திரத்தையும் பறிக்கக் கூடாது. எங்கள் கேள்வி என்னவென்றால், இரண்டு பேர் பரஸ்பர புரிதல்களோடு தங்கள் அன்பை ஒரு பொது இடத்தில் நாகரிகமாக வெளிப்படுத்திக் கொண்டால் அதைப் பற்றி மூன்றாவது நபர் ஏன் கவலைப்பட வேண்டும்?

எல்லோருக்கும் இங்கே பிரைவசி இருக்கிறது. மூன்றாவது நபர் தன் முடிவைத் திணிப்பது முற்றுமுழுதான மனித உரிமை மீறல். போராட்ட வடிவத்தைப் பற்றி கேள்வி எழுப்புகிறீர்கள். முத்தமி டு தல் என்பது அன்பின் வெளிப்பாடு. வாழ்க்கை முறையில் ஒரு உயர்ந்த நாகரிகம் அது. அந்த உணர்வை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். முத்தம் என்பது காமத்தின் வெளிப்பாடு இல்லை; அன்பின் வெளிப்பாடு.

அதை உணரமுடியாத அளவுக்கு வக்கிரம் கொண்டவர்கள்தான் எங்களை எதிர்க்கிறார்கள். அம்மாவுக்கோ, அப்பாவுக்கோ பிள்ளைகள் முத்தம் கொடுப்பதோ... சகோதர, சகோதரிகள் தங்களுக்குள் முத்தம் பகிர்ந்து கொள்வதோ காமமில்லை. அன்பு. நண்பர்களுக்குள் முத்தமிடுவதும் அன்பின் வெளிப்பாடுதான்.’’

எவ்வளவோ மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிகழ்கின்றன. அதுபற்றியெல்லாம் பேசாத ஐ.ஐ.டி மாணவர்கள் ‘கிஸ் ஆஃப் லவ்’ மூவ்மென்ட்டை மட்டும் கையில் எடுத்தது ஏன்?‘‘முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். நாங்கள் நடத்தியது காதல் கொண்டாட்டம் அல்ல. ஒரு உயரிய நோக்கத்துக்காகவும், வெகுஜன மக்களின் கவனத்தைக் கவரவும் நடத்தப்பட்ட ஒரு போராட்ட யுக்திதான் ‘அன்பின் முத்தம்’. இதை ஒருங்கிணைத்து நடத்தியது சென்னை ஐ.ஐ.டி மாணவர்களால் நடத்தப்படும் சிண்டாபார் (ChintaBAR) அமைப்பு. ChintaBAR  என்றால் ‘சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்வது’.

சமூகம், பொருளாதாரம், அரசியல் சார்ந்த விஷயங்களில் பங்கேற்று விவாதிப்பது, செயல்திட்டங்களை வகுப்பதுதான் இந்த அமைப்பின் நோக்கம். இதற்கு முன்பு நாங்கள் நிறைய பேசியிருக்கிறோம். பல்வேறு மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும், பெண் வதைக்கு எதிராகவும் குரல் கொடுத்திருக்கிறோம்; கருத்தரங்குகள் நடத்தியிருக்கிறோம். பல்ChintaBARவேறு ஆய்வுக் குழுக்களில் பங்கேற்றிருக்கிறோம். அனைத்து விதமான மனித உரிமை மீறல்களையும் நாங்கள் கண்டிக்கிறோம்.

தனி நபர் சுதந்திரம் பற்றிய விவாதத்தைக் கிளப்புவதே இப்போதைக்கு எங்கள் நோக்கம். பழமைவாத வலதுசாரி களை அம்பலப்படுத்தி விட்டோம். அவர்களின் உண்மையான நிறம் வெளிப்பட்டு விட்டது. ‘கிஸ் ஆஃப் லவ்’ மூவ்மென்ட்டை தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கு எடுத்துச் செல்ல விரும்புகிறோம்.’’

வெ.நீலகண்டன்
படங்கள்: அஷ்வின்