காதல் கெமிஸ்ட்ரியில் மூன்று வில்லன்கள்!
முதல் பார்வையில் வருவதுதான்உண்மையான காதல். இரண்டாவது பார்வையிலேயே அது அழிந்துவிடுகிறது!
- இஸ்ரேல் ஜாங்வில்

‘‘மனம்தான் காதல் என்றால், நீ காதலிக்க ஒரு நாய்க்குட்டி போதும். உடல்தான் காதல் என்றால் நீ காதலிக்க ஒரு விலைமகள் போதும். உடலும் உள்ளமும் எந்தப் புள்ளியில் இணைகிறதோ அந்தப் புள்ளியில் பூ பூப்பதுதான் காதல்!’’ - காதலுக்கு கவிப்பேரரசு தந்த கவிதை டெஃப னிஷன் இது. ஆனால், உடலும் உள்ளமும் இணையும் அந்த ஸோ கால்டு புள்ளி... அப்படியொன்று நிஜத்தில் இருக்கிறதா? அல்லது, ‘கவிதைக்கு பொய்யழகு’ என்பது இங்கேயும் அப்ளை ஆகிவிட்டதா?
காதல் என்பது கிட்டத்தட்ட கடவுள் மாதிரி. ஒரு வகையில் அது பேயும் கூட. ‘இருக்கா, இல்லையா? யாரும் பாத்திருக்காய்ங்களா, இல்லையா?’ என வடிவேலு போல பல விஞ்ஞானிகள் அதை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.
‘சிட்டியில காதலைப் பாக்குறது கஷ்டமா? அதான் முத்தப் போராட்டமே நடத்துறாங்களே...’ என்கிறீர்களா? நம்மூரில் ‘காதல் எது’ என்பதற்கான இலக்கணம் அத்தனை சிம்பிள் இல்லை. அந்தக் காலத்தில், காதற்பரத்தை, காமக்கிழத்தி என இரண்டுக்கும் சின்னதொரு வித்தியாசத்தைத்தான் பார்த்திருக்கிறார்கள்.
ஆனால், கடந்த சில நூற்றாண்டுகளில் காமம் என்பதன் எதிர்ச்சொல்லாகவே காதல் உருமாற்றப்பட்டுவிட்டது. அதாவது, உடல் இன்பத்தையோ இனப்பெருக்கத்தையோ நாடாமல், வெறும் மனதால் ஒருவரை நேசிப்பதுதான் உண்மையான, பரிசுத்தமான, டிஸ்டில்டு காதல் என்று சொல்லப்படுகிறது.
காதல் பற்றி யாருக்கும் ஐடியா இல்லை என்பதால், யார் வேண்டுமானாலும் அதற்கு கிராமர் வகுக்கலாம் என்றாகிவிட்டது. நம் தமிழ் சினிமா அந்த கேப்பில் புகுந்து கேம் ஆடியது கொஞ்ச நஞ்சமல்ல. ‘காதல்ங்கறது அடிமனசுல அடிச்ச ஆணி மாதிரி...’ எனத் துவங்கி, நம் ஹீரோக்கள் கரகரவென அழுதார்கள்; ‘காதலுக்கு கண்ணில்லை... ஸ்டேட்டஸ் இல்லை’ என்று அதை ஹேண்டிகேப்ட் ஆக்கினார்கள்; தொடாமலே, பார்க்காமலே, சொல்லாமலே என வெரைட்டி காட்டினார்கள்.
காதலை ஏதோ சின்னம்மை வைரஸ் மாதிரி கற்பனை பண்ணி, ‘வாழ்வில் ஒரு முறைதான் வரும்’ என்ற நம்பிக்கையை வேறு விதைத்தார்கள். ‘ஒரு செடியில ஒரு ரோஜாதான் பூக்கும்’ என நம் பயாலஜி பாடத்தை மறக்கடித்தார்கள்.
பாரதியார் வேறு ஏதோ ஒரு மூடில் ‘காதல் போயின் சாதல்’ என்று சொல்லி வைக்க, அது விபரீதமாகப் புரிந்து கொள்ளப்பட்டது. ஒரு கட்டத்தில் காதலில் தோற்றவனுக்கு, காலம் முழுதும் பிரம்மச்சாரியாக வாழ்வது... அல்லது, கிளைமேக்ஸில் சாவது என இரண்டே ஆப்ஷனைத்தான் தந்தது நம் படைப்புலகம். இதனால் நிஜ வாழ்வில் நாம் இழந்த உயிர்கள் அநேகம்.
காதலைப் புனிதப்படுத்தும் இந்தக் கற்பனை மாய வலை நம் ஊரில் மட்டும் பின்னப்படவில்லை; உலகம் முழுவதுமே நடந்திருக்கிறது. ‘‘ரொமான்டிக் லவ் என்பது ஜஸ்ட் 800 வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை.
அதை உலகம் முழுவதும் பரப்பியவர்கள் பிரெஞ்சுக்காரர்களே’’ என்கிறார் அமெரிக்க எழுத்தாளர் ஜேம்ஸ் லியோனார்ட் பார்க். ‘‘பிரெஞ்சுக்காரர்கள் நாடோடிக் கலைஞர்களாக இருந்ததால், அவர்களின் படைப்புகளில் இப்படியொரு மிகை கற்பனை தேவைப்பட்டது’’ என்கிறார் அவர்.
காதல் என்பது உலகப் பிரச்னை... ஸோ, காதலை ஆய்வு செய்யவும் உலகம் முழுவதும் நிபுணர்கள் முயல்கிறார்கள். அமெரிக்காவைச் சேர்ந்த உளவியலாளரான பார்பரா ஃப்ரெடரிக்சன் அந்த முயற்சியில் கிட்டத்தட்ட வெற்றி பெற்றுவிட்டார். ஆம், காதல் எனும் கடவுளை அவர் கண்ணால் பார்த்துவிட்டார்.
காதலிக்கும்போது மனிதர்களின் மூளையில் என்ன நடக்கிறது என்பதை எம்.ஆர்.ஐ ஸ்கேன்கள் மூலம் பரிசோதித்து ஆய்வு முடிவுகளை வெளியிட்டிருக்கிறார் பார்பரா. ‘‘மிரர் நியூரான்கள், ஆக்ஸிடோசின், மற்றும் வேகல் டோன்... நம் மூளையில் இருக்கும் இந்த மூன்று வில்லன்கள்தான் காதலுக்குக் காரணம்’’ என வரையறுத்திருக்கிறார் அவர்.
அதாவது, நம் விருப்பத்துக்குரியவரை நாம் பார்த்த மாத்திரத்தில் இந்த மிரர் நியூரான்கள் ‘ஹை... இது உன் ஆளுதானே’ என நம் மெடுல்லா ஆப்ளாங்கேட்டாவில் கிச்சுகிச்சு மூட்டுகின்றன. அந்த நபரை நாம் தொடும்போதும் அணைக்கும்போதும் ஆக்ஸிடோசின் சுரக்கிறது. இது மன அழுத்தங்களைக் குறைத்து நம்மை நிம்மதியாக வைக்கிறது.
அடுத்து, மூளையில் துவங்கி இதயம், சுவாச மண்டலம் வரை வயரிங் கனெக்ஷன் போலப் பயணிக்கும் வேகல் நரம்புகள் தூண்டப்படுகின்றன. காதலிக்கும்போது இதயத்துடிப்பு அதிகமாகி படபடப்பதற்கு இந்த வேகல் நரம்பின் வேகம்தான் அத்தாரிட்டி. காதல் இதயத்தில்தான் பிறக்கிறது என நம் ஆட்கள் முடிவெடுத்ததற்கும் ஹார்ட்டின் வரைந்து அம்பு விட்டதற்கும் இந்தக் கல்பிரிட்தான் காரணமாம்.
ஆக, இதுதான் காதல். இதுதான் டான்ஸ் ஷோக்களில் சொல்லப்படும் கெமிஸ்ட்ரி. இது காமம் சாராதது. இது மனிதனுக்கு மட்டுமான உணர்வு. ‘‘இந்த காதல் உணர்வு யாரிடம் ஏற்படுகிறதோ, அவர் அருகில் இருப்பதை நாம் நிம்மதியாக உணர்வோம்!’’ எனத் துணிந்து சொல்லும் பார்பரா, இன்னொரு குண்டையும் தூக்கிப் போடுகிறார். ‘‘காமம் சாராதது என்கிறபோதே இது ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில்தான் தோன்ற வேண்டும் என்ற அவசியம் இல்லாமல் போகிறது.
ஆணுக்கு இன்னொரு ஆணின் மீதோ, பெண்ணுக்கு இன்னொரு பெண்ணின் மீதோ கூட இந்த உணர்வு தோன்றலாம். ஏன் ஒரு நாய்க்குட்டி யிடம் கூடத் தோன்றலாம். தோன்றிய உணர்வு அப்படியே இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. நேசித்த நாய் நம்மைக் கடித்து வைத்தால், காதல் மாறி நாம் கல்லெறியலாம்.
அதே போல, இந்தக் காதல் உணர்வு ஒரு முறைதான் வர வேண்டும் என்பதும் கட்டாயமல்ல. ஒருவருக்கு நூறுக்கும் மேற்பட்டவர்களிடம் இந்த உணர்வு தோன்ற வாய்ப்புள்ளது. ஒரே சமயத்தில் பல நபர்களிடமும் கூட இது தோன்றலாம்!’’ என்கிறார் அவர்.
இதுதான் காதலென்றால், நாமெல்லாம் கல்யாணத்துக்கு முன்னால் செய்வது காதலல்ல. அது ஒரு வகை இணை தேடல்தான். அப்படிச் சொல்லிக்கொள்ளத்தான் கௌரவமாகவும் இருக்கிறது.
நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேர் வைத்துக்கொள்ளுங்கள்... கல்யாணத்துக்கு முன்பு வரை ஆணும் பெண்ணும் ஆடும் அந்த சீண்டல் விளையாட்டு மிக இனிமையானது. ஆனால், டி.டி.ஹெச் ஆன்டெனா வெயிலில் வெளுப்பதைப் போல அந்த ஸ்வீட் தருணங்கள் கல்யாணத்துக்குப் பின் நிறம் இழக்கின்றனவே..? அன்று மயில் போலத் தெரிந்த காதலி, மனைவியான பின் ஈமு கோழி போலத் தெரிவது எதனால்?
நீங்கள் யார்?இது மெட்ராஸ் ஐ சீஸன். ‘‘உங்க கண்ல எதோ சிவப்பா இருக்கு பாருங்க’’ என ஒரு பெண் உங்களைப் பார்த்து இப்படிச் செய்கை செய்கிறார்.‘‘அப்படியா?’’ என உடனடியாக நீங்கள் எந்தக் கண்ணைத் தொட்டுப் பார்ப்பீர்கள்? உங்கள் விடையை அனுமானித்துக் கொண்டு தலைகீழாகத் தரப்பட்டிருக்கும் பலன்களுக்கு வாருங்கள்.
இடது கண்: எதையும் பார்த்தது பார்த்தபடி புரிந்துகொள்கிற இடது மூளைக்காரர் நீங்கள். திசைகளில் குழப்பம் கொண்ட நீங்கள், ஒரு அட்ரஸைக் கண்டுபிடிக்கக் கூடத் திணறுவீர்கள். ஆனால், பேச்சுத் திறனால் போக வேண்டிய இடத்தை விசாரித்து அறிந்துகொள்வீர்கள்.
வலது கண்: சுட்டப்படுவது வலது கண் எனப் புரிந்து அதற்கு ஏற்றபடி ரியாக்ட் செய்யும் நீங்கள், ஒரு விஷுவல் கிங்தான். வலது மூளை வலுத்திருப்பதன் அடையாளம் இது. எங்கேயும் வழி கண்டுபிடித்து செல்லும் ரூட்டு தல நீங்கள் என்றாலும், மக்கள் தொடர்பில் ரொம்ப வீக்காக இருப்பீர்கள். வளர்த்துக்கொள்ளுங்கள்!
இடது கண்: எதையும் பார்த்தது பார்த்தபடி புரிந்துகொள்கிற இடது மூளைக்காரர் நீங்கள். திசைகளில் குழப்பம் கொண்ட நீங்கள், ஒரு அட்ரஸைக் கண்டுபிடிக்கக் கூடத் திணறுவீர்கள். ஆனால், பேச்சுத் திறனால் போக வேண்டிய இடத்தை விசாரித்து அறிந்துகொள்வீர்கள்.
வலது கண்: சுட்டப்படுவது வலது கண் எனப் புரிந்து அதற்கு ஏற்றபடி ரியாக்ட் செய்யும் நீங்கள், ஒரு விஷுவல் கிங்தான். வலது மூளை வலுத்திருப்பதன் அடையாளம் இது. எங்கேயும் வழி கண்டுபிடித்து செல்லும் ரூட்டு தல நீங்கள் என்றாலும், மக்கள் தொடர்பில் ரொம்ப வீக்காக இருப்பீர்கள். வளர்த்துக்கொள்ளுங்கள்!
தேடுவோம்...
கோகுலவாச நவநீதன்