மனக்குறை நீக்கும் மகான்கள்



ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள்

நான் தனியாக இருக்கிறேன்
என்கிறார்கள்
இல்லை என்பது
நமக்குத்தானே தெரியும்!

ர்நாம் எங்கிருந்தாலும்
என்னைப் பற்றி நீயும்
உன்னைப் பற்றி நானும்
சிந்திக்கும் புள்ளியில்
தவிக்கிறது ஆன்மா

ர்பிறவிப் பெருந்துயர்
வாழ்க்கைத் தவம்
வரமாய்
இணைத்துக் கொள்!
என்றெல்லாம்
பாம்பன் சுவாமிகளின்
மனம் முருகனை
நினைத்து உருகியது.

வேலவன் வாசனையாய் கூடவே வலம் வந்தாலும் போதவில்லை அவருக்கு. சதா முருகனோடே இருக்க வேண்டும் என விரும்பினார். இப்பொழுதெல்லாம் நாட்கள் ஓட மறுத்து நகர்ந்தன. சுவாமிகள் தலங்களுக்கு பயணிப்பதை மெல்லக் குறைத்துக்கொண்டு தவத்தில் தீவிரமானார். திருவான்மியூரில் இடம் வாங்கச் சொன்னது முருகன். அது எதற்கு என்பது இருவரும் அறிந்த ரகசியம். ஆனால், அதை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தமது சீடர்களுக்கு சுவாமிகள் குறிப்பால் உணர்த்தினார்.

‘ஸ்ரீமத் குமார சுவாமியம்’ என்ற ஐந்து காண்டங்களும் 1192 செய்யுள்களும் கொண்ட நூலை எழுதி முடித்தார். அத்வைதத்தின் அருமை சொல்ல வேத, உபநிஷதங்களை மேற்கோள் காட்டி ‘சுத்தாத்வைத நிர்ணயம்’ எனும் நூலைப் படைத்தார். ‘அடுத்து என்ன? அடுத்து என்ன?’ என்று முருகனைக் கேட்டுக் கேட்டு செய்து முடித்தார்.

மயூர வாகன சேவனம் விழாவை சிறப்பாக நடத்த சில விதிமுறைகளை வகுத்தளித்தார். தமக்குப் பின்னாலும் தம் அடியார்களுக்கு வழிகாட்டும் விதமாய் 6666 பாடல்களை படைத்து முடித்திருந்தார். முருகனுக்கு ஆறு முகங்கள்.

ஆறுபடை வீடுகள். சரவணபவ என்கிற ஆறெழுத்து மந்திரம் அவனுடையது. அதன் காரணமாகவே தாம் 13 வயதிலிருந்து எழுதிய செய்யுள்களின் தொகை, ‘ஆறு’ என வருமாறே எழுதிக் குவித்தார். இந்த 6666 பாடல்களையும் 32 வியாசங்களையும் ஆறு மண்டலங்களாகத் தொகுத்தளித்தார். இன்றும் அவை வழிகாட்டும் முருக வேதமாகும்.

இறைப்பணி, இலக்கியப் பணி என சதா சர்வ காலமும் நடந்து கொண்டிருந்த சுவாமிகளுக்கு வயது 78 ஆகியிருந்தது. முகத்தில் சூரிய ஒளியும் கண்களில் சந்திரனின் குளுமையும் மிகுந்திருந்தது. கோதுமைக் கஞ்சியே உணவாகி இருந்தது.ஒரு ஜீவன் பிறவி எடுப்பது மழை பொழிவது போல. அந்த மழைத்துளி பூமியில் விழும் இடத்திற்கு ஏற்ப மாறுகிறது. தம்மால் முடிந்த அளவுக்கு பூமியை வளமாக்கி உதவுகிறது.

அந்தத் துளியை மீண்டும் இறைவன் என்கிற சூரியக் கிரணம், தன் சக்தி மிகுந்த ஒளியால் ஆவியாக்கி தம்மோடு இணைத்துக்கொள்கிறது. இந்த நிகழ்வு இறைவனின் கருணை. அவன் அருள் சக்தி, மீண்டும் அவனோடு சேர்வதுதான் சுகம்... பேரானந்தம். நெருக்கமானவர்களிடம் மெல்லச் சொன்னார்.

சுவாமிகள் அடிக்கடி தம் இறுதி நாட்கள் குறித்து பேசுவது அடியார்கள் மனதில் வருத்தத்தை விதைத்தது. ஆனால், துறவிகளுக்கு விடுதலை அல்லவா மரணம்! இறகு போல லேசாக இருந்தார், பாம்பன் சுவாமிகள்.1928 மே மாதம் சென்னையில் வெயில் அதிகம் இருந்ததால் பெங்களூருக்குச் சென்றார். ஒரு அன்பர் வீட்டில் தங்கினார். அங்கு அவருக்கு அடிக்கடி ஆறுமுகனின் அழகு தரிசனம் கிடைத்தது. ஜூலை 15ம் தேதி சென்னை திரும்பினார்.

வைகாசி மாதம் 15ம் நாள். பாம்பன் சுவாமிகள் இரவு வெகு நேரம் விழித்திருந்தார். தமது அன்பர்களான ராஜாபாதர் முதலியாரையும் மதுரை முதலியாரையும் அருகில் அழைத்தார்.
‘‘மயூர வாகன சேவன விழாவை விட்டுவிடாமல் தொடர்ந்து நடத்துங்கள்’’ என்றார். ‘‘என் உடலை திருவான்மியூர் நிலத்தில் அடக்கம் செய்து விடுங்கள்’’ என உத்தரவிட்டார்.
இருவரும் பதறினார்கள்.

‘‘மனிதன் பிறக்கும்போதே நிச்சயமானது மரணம் மட்டும்தான். அதை புன்னகையோடு எதிர்கொள்வதுதான் துறவுக்கு அழகு’’ - சிரித்துக்கொண்டே சொன்னார். ஆனால், அவர்களின் மனசு சமாதானம் ஆகவில்லை. தாயைவிட கருணையோடு வழிநடத்தும் குருவை இழக்க யாருக்குத்தான் மனசு வரும்?பொழுது விடிந்தது. ‘‘இங்கு வெயில் அதிகமாக இருக்கிறது. பெங்களூருக்குச் சென்று வரலாம். ரயிலுக்கு டிக்கெட் எடுங்கள்’’ என்றார். அவர்களும் வாங்கி வந்தார்கள்.

ஆனால், சுவாமிகள் பயணத்தை ரத்து செய்தார். முருகன் தன்னை அவனோடு அழைத்துச் செல்லப் போகிறான் என்பதை தெளிவாய் உணர்ந்துகொண்டார்.29.5.1929 - புதன் கிழமை...இரவுப் பொழுது. அந்த அறையில் அகல் விளக்கு நிதானமாய் சுடர்விட்டு எரிந்து கொண்டிருந்தது. அதன் மெல்லிய ஒளி அறையில் நிரம்பி வழிந்தது.

கூடவே, சாம்பிராணி வாசனை மனதை லேசாக்கிக் கொண்டிருக்க, சுவாமிகள் தன் அடியாரை அழைத்தார். ஜன்னல்களைத் திறந்துவிடச் சொன்னார். குளிர்ந்த நீரை துணியில் நனைத்து உடலைத் துடைத்து விடச் சொன்னார். நெற்றி நிறைய நீறணிந்துகொண்டார். கொஞ்சம் பால் அருந்தினார். கதவை மூடிவிட்டுச் செல்லும்படி பணித்தார்.

சுவாமிகள் தனியே அமர்ந்தார். முருகனை புருவ மத்தியில் நிறுத்தினார். ‘‘வா முருகா, உன்னோடு பேசணும்’’ என்றார்.குழந்தை முருகன் அருகில் வந்தான். எதிரே அமர்ந்தான். ‘என்ன?’ என்பதாய் முகம் பார்த்தான். அவரது கைகளைப் பற்றிக்கொண்டு ‘‘ம்ம்ம்ம் பேசலாம்’’ என்றான்.‘‘நான் இன்னும் எத்தனை நாள் இங்கே இருக்கணும்? எனக்கு நீ தந்த வேலைகள் முடிந்ததா?’’ என்று கேட்டார் பாம்பன் சுவாமிகள்.

உண்மையில் இந்த உலகம், ஒரு உயிரின் தேவை இந்த பூமிக்கு இருக்கும் வரைதான் அதை இங்கே இருக்க அனுமதிக்கிறது. அதன் தேவை முடிந்த அடுத்த கணமே அதை இயற்கையோடு இயற்கையாய் கலக்கச் செய்துவிடுகிறது. முருகனிடம் அதைத்தான் கேட்டார் பாம்பன் சுவாமிகள், ‘‘இன்னும் இங்கே நான் முடிக்க வேண்டிய வேலை ஏதேனும் இருக்கிறதா?’’ என்று.

‘‘வெகு சிறப்பாக... நிறைவாக... செய்திருக்கிறாய். தமிழ் வேதமாய் சகலத்தையும் யுகம் தாண்டியும் உணர்ந்தும் அரிய பொக்கிஷங்களைப் படைத்துவிட்டாய். நீ என்ன செய்து முடித்திருக்கிறாய் என்பதை புரிந்துகொள்ளவே பல காலம் ஆகும். மக்களின் உன்னதமான உள்முக வாழ்க்கைக்கு உன் எழுத்து உதவும். முருக வழிபாட்டின் நுனி முதல் வேர் வரை அனைத்தையும் அளித்துவிட்டாய். இது உன் பிறவிப் பணி. எனக்கு மகா திருப்தி’’ என தலை வருடிய முருகன், ‘‘உனக்கென்ன வேண்டும்?’’ என ஆதூரமாய் கேட்டான்.

பாம்பன் சுவாமிகளின் கண்களில் நீர் அருவியாய்ப் பொங்கியது. ‘‘இதை நான் சொல்லித்தான் உனக்குத் தெரிய வேண்டுமா? நீதான்... உன் அண்மைதான்... எப்போதும் உன்னோடு என்கிற நிலைதான்...’’ இரண்டு கைகளாலும் குகனின் கன்னத்தை ஏந்திக்கொண்டார். ‘தெரியும்’ என்பதாய் முருகன் சிரித்தான்.

‘‘என்னைத் தள்ளினாலும் என்னை நம்பினவரைக் கைவிட்டுவிடாதே’’ எனக் கூடுதலாய் ஒரு வேண்டுகோள் வைத்தார். ‘‘சத்தியமாய்க் கைவிட மாட்டேன்’’ என்பது போல பாம்பன் சுவாமிகளின் கரங்களை தன் கரங்களால் அழுத்தி உறுதி தந்தான்.

ஜன்னல் வழியாக ‘சுவாமி என்ன செய்கிறார்’ எனப் பார்த்த சீடர்கள் அவர் தனக்குத்தானே ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார் என நினைத்தார்கள். சுவாமிகளின் உன்மத்த நிலை யாருக்குப் புரியும்?

இரவு முருகனோடு உரையாடுவதிலேயே கழிந்தது. பொழுது புலர்ந்தது.30.5.1929. வியாழக்கிழமை. சுக்கில ஆண்டு. வைகாசி மாதம். கிருஷ்ணபட்சத்து சஷ்டி திதி. அவிட்ட நட்சத்திரம் கூடிய சுபநாள். சுவாமிகள் அதிகாலையிலேயே எழுந்து தனது நித்திய பணிகளை முடித்தார். காலை 7:15க்கு பத்மாசனத்தில் அமர்ந்தார்.

அருகில் அன்பர்கள் பணிவாக நின்று கொண்டிருந்தார்கள். தன் முன்னே இருந்த விபூதிப் பையில் இருந்து திருநீறு எடுத்து அனைவருக்கும் கொடுத்தார். ‘‘என்னை ஆதரித்தருளும் பரம ரகசிய சக்தி என்னை நம்பினாரை ஆதரியாது நிற்குமோ? ஐயம் வேண்டாம். குகன் காப்பான்’’ என சத்திய வார்த்தை உதிர்த்தார். ‘என்ன நடக்கப் போகிறது’ என்பதை உணர்ந்துகொண்ட அடியார்கள் கண்ணீர் விட்டு விசும்பினார்கள்.

அவர்களைத் தேற்றிய பாம்பன் சுவாமிகள், ‘‘இந்த உடல் மறைந்தாலும் இன்னும் 500 ஆண்டுகள் என் ஆன்மா இங்கு உயிர்ப்போடு இருந்து உங்களுக்கு வழி காட்டும்’’ என்று அருளினார்.

‘‘முருகா...’’ என்றபடி எல்லோரையும் கனிவாகப் பார்த்தார். மெல்ல கண் மூடினார். ஆழமாய் காற்றை உள்ளிழுத்து உள்ளேயே நிறுத்தினார். அது உந்தியிலேயே எழுந்து அடங்கியது. சுவாமிகள் சமாதியாகிவிட்டார். குக சாயுச்சிய நிலையை அடைந்துவிட்டார் என அடியார்கள் புரிந்துகொண்ட தருணத்தில் முருகன் அருவமாய் வந்தான். சுவாமிகளின் ஒளியுடலை ஆரத்தழுவிக் கொண்டான். இதற்குத்தானே இத்தனை ஆண்டுகால தவம்,  இத்தனை தவிப்பு என விரல் கோர்த்தான். பேரொளியும் ஒளியும் மெல்ல இணைந்தன... கலந்தன.

சுவாமிகளின் கட்டளைப்படி, 31.5.1929 அன்று காலை திருவான்மியூரில் சுவாமிகள் குறிப்பிட்ட இடத்திற்கு அவரது திருவுடலை ஊர்வலமாகக் கொண்டுவந்தார்கள். மகான்களை அடக்கம் செய்யும் முறைப்படி பாம்பன் சுவாமிகளின் திருவுடல் அமர்த்தப்பட்டு சமாதி நிறுவப்பட்டது. திருவான்மியூர் பூமி தாய்மையோடு தன் தவப்புதல்வனை ஏற்றுக்கொண்டது. பக்தர்கள் கை கூப்பி தொழுது நின்றார்கள்.

-திருவான்மியூரில் பாம்பன் சுவாமிகளின் ஜீவ சமாதியில் தரிசனம் முடித்து வீடு திரும்பும் ஒவ்வொருவருக்குள்ளும் அவர் பூரணமாய் அமர்ந்து கொள்கிறார். பாம்பன் சுவாமிகள் மட்டுமில்லை... அவர் வாழ்நாள் முழுதும் வணங்கிய முருகனும் பக்தர்களின் கூடவே இருந்து வழிநடத்துகிறார். குரு வாழ்க! குகன் வாழ்க!! ஒளி பேரொளியானது

பாம்பன் சுவாமிகளின் அமுத மொழிகள்

* தண்ணீரில் மூழ்குபவன் மூச்சுக் காற்றுக்காக எவ்வளவு தவிப்பானோ, கடவுளைக் காணவும் அவ்வளவு தீவிர தவிப்பு வேண்டும்.
* உணவுக்காக அலைவது மாத்திரம் மனிதப் பிறவியின் நோக்கம் இல்லை. இறைவனை அடைவதே மனிதனின் நிறைவான லட்சியமாக இருக்க வேண்டும்.
* பொறாமை கூடவே கூடாது.
* சத்தியத்தின் வழி நடப்பதும் உண்மையே பேசுவதும் தவம்.
* சாமானியனாக இருந்தாலும், சந்நியாசியாக இருந்தாலும், புகழின் மீது இருக்கும் ஆர்வம் அலாதியானது. அது பேராசையை ஏற்படுத்திவிடும். புகழின் மீது இருக்கும் ஆவலை துளிகூட வளரவிடக் கூடாது.
* முருகனின் பக்தர்களுக்கு அமுது படைத்தல், அன்னதானம் செய்தல் போன்றவை மகத்தான புண்ணியம் சேர்க்கும். 
* என் பொருட்டு நிந்திக்கப்படுவோரையும் முருகன் அருள் காக்கும்.
* ஏக தெய்வமாக முருகனைத் தீவிரமாக பற்றிக்கொண்டவர்களை வேலும் மயிலும் காக்கும். இது சத்தியம்.

மயூர வாகன சேவனம்... சுவாமிகளின் வழிகாட்டுதல்

ஆண்டுதோறும் மார்கழி மாதம் சுக்கில பட்சத்து பிரதமை திதியில் விழாவை ஆரம்பித்து நடத்த வேண்டும். விழாவில் இறைவனின் படத்தை முதலில் எடுத்துச் செல்லக்கூடாது. வஜ்ஜிராயுதத்தையே நடுநாயகமாகக் கொண்டு செல்ல வேண்டும்.

முருகனின் வாகனமான மயில்கள், வேல், சேவற்கொடி, குடை போன்றவற்றிற்கு சந்தனம் பூசி, குங்குமம் வைத்து பூச்சூடி, உபசாரங்களோடு வீதியுலா வரவேண்டும்.
வாண வேடிக்கை இருக்கலாம். தீவட்டிகள் அதிகம் பயன்படுத்தலாம். ஆனால், பெட்ரோமாக்ஸ் விளக்குகளைத் தவிர்த்துவிட வேண்டும். வாத்தியங்களைப் பயன்படுத்தலாம். 

விழா மண்டபத்தில் முருகனின் அழகு படத்துக்கு அலங்காரம் செய்து சண்முக நாமாவளியும் அசோக சால வாசப் பாராயணமும் செய்ய வேண்டும். விழாவின் மறுநாள் நிச்சயம் ஏழை, எளியவர்களுக்கு பாயசத்துடன் அன்னதானம் செய்ய வேண்டும்.

பாம்பன் சுவாமிகள் தரிசனம்! சென்னை-திருவான்மியூர்

வேண்டும் வரமெல்லாம் தரும் பாம்பன் சுவாமிகளின் ஜீவ சமாதி சென்னை, திருவான்மியூரில் கலாக்ஷேத்ரா அருகில் அமைந்துள்ளது. மயூரபுரம் எனக் கொண்டாடப்படும் இத்தலத்தை தரிசித்தால் நம் வாழ்க்கை நல்ல விதமாய் மாறும். பாம்பன் சுவாமிகளின் அருள் நிரம்பி வழியும் புண்ணிய பூமி இது. ஆலயத் தொடர்புக்கு:  044-2452 1866.

(அடுத்த இதழில்... அரவிந்த அன்னையின் அமுத சரிதம்)

எஸ்.ஆர்.செந்தில்குமார்