வாழ்த்துகள் வாழ வைக்கின்றன!



நூற்றாண்டு விழாக்கள் நம் ஊரில் சகஜம். ஆனால், அந்த விழா நாயகரே... 100வது பிறந்த நாள் காணும் மனிதரே... அந்நிகழ்ச்சியில் பங்கேற்பது அபூர்வம். அப்படியொரு சிறப்பு கிடைத்திருக்கிறது நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யருக்கு.

நீதிமன்றத்தின் நெடிதுயர்ந்த படிகளை சாமானிய மக்கள் ஏறிக் கடப்பது சவாலாகவே இருந்தது ஒரு காலம்; ஏழைகளுக்கு எட்டாத உயரத்தில் அதன் கதவுகள் இருந்தன. இன்று நீதித்துறைதான் அடித்தட்டு மக்களின் கடைசி நம்பிக்கையாக இருக்கிறது.

இந்த மாற்றத்துக்கு முதல் வித்தாக இருந்தவர் வி.ஆர்.கிருஷ்ணய்யர். போஸ்ட் கார்டில் எழுதியிருந்த தகவலையே கோரிக்கை மனுவாக ஏற்று விசாரித்து, பொது நல வழக்கு என எந்தப் பிரச்னைக்கும் யாரும் நீதிமன்றத்தை அணுகலாம் என மாற்றிக் காட்டியவர் அவர். ‘ஜுடிஷியல் ஆக்டிவிஸம்’ என இன்று நீதிமன்றம் தானாகவே தலையிட்டு பல பிரச்னைகளில் உத்தரவுகள் பிறப்பிக்கிறது;

பல நீதிபதிகள் தங்கள் முன்மாதிரி யாக நினைக்கும் கிருஷ்ணய்யரின் உழைப்பு இதன் பின்னால் இருக்கிறது. மரண தண்டனையை எதிர்க்கும் நீதிக்குரலாக இவரது குரல் இருந்தது. இந்த வயதிலும் மரண தண்டனைக்கு எதிரான பிரசாரத்திலும், மனித உரிமைகளைக் காப்பாற்றப் பாடுபடும் இயக்கங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். 

கேரள அரசியலிலும் நீதித் துறையிலும் பல புரட்சிகளைச் செய்து போராளி எனப் பெயர் வாங்கிய கிருஷ்ணய்யருக்கு அம்மாநில அரசும் பல்வேறு அமைப்புகளும் நூற்றாண்டு விழாவை பாராட்டு விழாவாகவே நடத்தி பிரம்மாண்டப்படுத்தி விட்டன.

 வறட்டு கம்யூனிஸ்ட், பிழைக்கத் தெரியாதவர் என்ற விமர்சனங்களூடே வாழ்க்கை முழுக்க பயணித்து வந்திருக்கும் பாதை வி.ஆர்.கியினுடையது. இன்று, கொச்சியிலும் மும்பையிலும் இவருக்கு மெழுகுச் சிலை நிறுவும் முயற்சியில் இறங்கியுள்ளது மும்பை லோனாவாலா மியூசியம். இந்த வயதிலும் நினைவுத்திறன் குன்றாமல் ஒரு நேர்காணலுக்கு ஒத்துழைக்கிறார் மனிதர்.

‘‘எங்களுக்குப் பூர்வீகம் தமிழ்நாடுதான். பிழைப்பிற்காக பாலக்காடு வந்தோம். தாத்தா வெங்கடேஸ்வர ஐயர் தொடக்கப்பள்ளி ஆசிரியர். மாதம் இரண்டு ரூபாய் சம்பளம். அதில், என் அப்பா ராமய்யரை பட்டப்படிப்பு வரை கஷ்டப்பட்டு படிக்க வைத்தார்.

சட்டம் படிக்க வைக்க பணமில்லை. அந்தக் கால நடைமுறைப்படி கீழ் நீதிமன்றங்களில் 20 வருடம்   ‘ப்ளீடர்’ஆகப் பயிற்சி செய்து ‘வழக்கறிஞர்’ அங்கீகாரம் பெற்றவர் அப்பா. அவரால் பெரிய வீடு, கார் எல்லாம் வாங்க முடிந்தது. என்னையும் நன்றாகப் படிக்க வைக்க முடிந்தது.

நான் பாலக்காடு விக்டோரியா கல்லூரியில் படிக்கும்போது இங்கிலாந்து பேராசிரியர் ஹெரால்ட் லாஸ்கியின் சோஷலிச சிந்தனைகள் என்னுள் தாக்கங்களை ஏற்படுத்தின. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் என்னை நல்ல பேச்சாளனாக மாற்றியது.

 பின்பு சென்னையில் சட்டப்படிப்பு முடித்து, கேரள மாநிலத்தின் தலச்சேரியில் வழக்கறிஞராகப் பயிற்சியைத் தொடங்கியபோது, பாட்டாளிகளுக்காகவும் விவசாயிகளுக்காகவும் வாதாடத் தொடங்கினேன். 1952ல் சென்னை மாகாண சபைத் தேர்தல் வந்தது. கம்யூனிஸ்ட் நண்பர்களும், உழைக்கும் வர்க்கமும் என்னை கூத்துபரம்பா தொகுதியில் போட்டியிட வைத்து வெற்றியைத் தந்தார்கள்.

அந்தத் தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. மத்திய அமைச்சராக இருந்த ராஜாஜி, சட்டசபையின் மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டு முதல்வரானார். ‘இது ஜனநாயக முறைக்கு எதிரானது...’ என்று நான் எதிர்த்தும் பலனில்லை. அதன் பின்பு நான் மலபார் பகுதி மக்களுக்காக இரண்டு மசோதாக்களைக் கொண்டு வந்து சட்டமன்றத்தில் நிறைவேற்றினேன். அதற்காக ராஜாஜியிடம் ரொம்பவும் வாதாட வேண்டியிருந்தது.

சென்னை மாகாண சட்டசபை தந்த அனுபவங்கள்தான் கேரள அரசியலில் நான் சிறப்பாகச் செயல்பட உதவின!’’ என்கிற கிருஷ்ணய்யருக்கு அரசியலைத் தாண்டி ராஜாஜியிடம் நல்ல நட்புறவு இருந்திருக்கிறது. தன் மனைவி சாரதா மற்றும் மகன்கள் ரமேஷ், பரமேஷோடு ஒரு முறை இவர் ராஜாஜியை சந்திக்கச் சென்றாராம்.

 வரவேற்று பேசிக்கொண்டிருந்த ராஜாஜி, சிறுபிள்ளைகள் ரமேஷ் - பரமேஷிடம், ‘‘அப்பா மாதிரி வந்துவிடாதீர்கள்...’’ என்று குறும்பாகச் சொன்னாராம். அது அப்படியே பலித்திருக்கிறது. ரமேஷ் எஞ்சினியராகி அமெரிக்காவில் செட்டிலாகிவிட, பரமேஷ் தனியார் நிறுவனத் துணைத் தலைவராக சென்னையில் இருக்கிறார்.

கிருஷ்ணய்யரின் மனைவி சாரதா 1974ம் வருடமே காலமாகி விட்டார். அன்று முதல் வி.ஆர்.கிக்கு தனிமைதான் துணை. காலை எழுந்ததும் காபி. எட்டு மணியளவில் கார்ன் ஃப்ளேக்ஸ் அல்லது ஓட்ஸ் சாப்பிடுவார்.

பத்தரை மணிக்கு சாப்பாடு, பிற்பகல் நாலு மணிக்கு தோசை, மாலை காய்கறி சூப், இரவில் தயிர் அல்லது தக்காளி சாதம்... இதுதான் வி.ஆர்.கியின் மெனு. இவரின் பாதம் படாத கொச்சி நகர சாலைகளே இல்லை. எண்பது வயது வரை நாள் தவறாமல் வாக்கிங் போயிருக்கிறார். சமீபமாகத்தான் வயோதிகம், வி.ஆர்.கிக்கு வாக்கிங் போவதிலிருந்து கட்டாய ஓய்வு தந்திருக்கிறது!‘‘உங்களின் நீண்ட ஆயுளின் ரகசியம்...’’

‘‘சாதாரண மக்களின் ஆசிகள்தான் என நினைக்கிறேன். நீதிபதியாக இருந்தபோதே மரண தண்டனையை எதிர்த்து வந்த என்னை வாயார வாழ்த்தியவர்கள் அதிகம். உதாரணத்துக்கு ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன்... ஆல் இந்தியா ரேடியோவில் பாடல்கள் பாடிக் கொண்டிருந்த ஒருவர்... ஏதோ கோபத்தில் அவர் தன் தாயை அடிக்க, அவர் மரணமடைந்துவிட்டார். அதற்காக அந்த நபர் ஆயுள் கைதியாகி முடங்கிக் கிடந்தார். நான் கேரளாவில் சிறைத்துறை அமைச்சரானபோது, அந்தக் கைதி மீண்டும் வானொலியில் பாட அனுமதி பெற்றுத் தந்தேன்.

அதில் கிடைத்த சன்மானத்தால் அவரின் குடும்பம் கஷ்டமின்றி வாழ முடிந்தது. அவர் விடுதலை ஆனதும், இதற்காக எனக்கொரு நன்றி மடல் எழுதி, நான் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்தினார். இப்படி என்னால் ஏதாவது ஒரு விதத்தில் பலன் பெற்றவர்களின் வாழ்த்துகள் என் ஆயுளைக் கூட்டியிருக்க வேண்டும்.

மேலும், 49வது வயதில் காலமாகிவிட்ட என் மனைவி சாரதா, அவர் வாழ வேண்டிய ஆயுளையும் எனக்குக் கொடுத்து காத்தும் வருகிறார் என்றுதான் சொல்ல வேண்டும்’’ -நெகிழ்ந்து, நம்மையும் நெகிழச் செய்கிறார் வி.ஆர்.கி.என் நீண்ட ஆயுளின் ரகசியம், சாதாரண மக்களின் ஆசிகள்தான் என நினைக்கிறேன். நீதிபதியாக இருந்தபோதே மரண தண்டனையை எதிர்த்து வந்தஎன்னை வாயார வாழ்த்தியவர்கள் அதிகம்!

-பிஸ்மி பரிணாமன்