அவன் அவள் unlimited



பெண்களை வருத்தும்  BAD WORDS

விளையாட்டுகள் அனைத்துக்கும் பொதுவான அங்கம், கெட்ட வார்த்தை!
- ஜிம்மி க்ரீவ்ஸ்

காலை மிதிப்பது, மட்கார்டை இடிப்பது என சக மனிதனின் சின்னச் சின்ன தவறுகளுக்கெல்லாம் நாம் ரத்தக்காவு வாங்காமல் காப்பாற்றுவது கெட்ட வார்த்தைகள்தான். நாலு பேர் முன்னிலையில் எதிரியின் ஆண்மையையும், அவன் வீட்டுப் பெண்களின் கற்பையும் கேள்விக்குறியாக்கிவிட்டால் போதும்...

அவனைப் போரிட்டு வென்ற திருப்தி நமக்கு வந்துவிடுகிறது. உலக வரலாற்றில் மனிதனைப் போல் தன் அந்தரங்கங்களை மறைத்து சமூக வாழ்வை உருவாக்கிக்கொண்ட விலங்கு எதுவுமில்லை. ‘என்னதான் காஸ்ட்லி கோட்டு சூட்டு போட்டாலும்... நீயும் மனுஷன்தானே? இயற்கை உபாதையெல்லாம் உண்டுதானே? இனப்பெருக்க நடைமுறை எல்லாம் நடக்குதுதானே?’ என்ற தத்துவார்த்த கேள்விகளை பூடகமாக எழுப்பக் கூடியவை சில கெட்ட வார்த்தைகள்.

சில சமயம் கெட்ட வார்த்தைகள் வெறும் வார்த்தைகளாக இருப்பதில்லை. வாக்கியங்களாகவும் நீளும். எதிராளிக்குள் இருக்கும் ஆதிகால மிருகத்தை நினைவுபடுத்துவதும் எழுப்புவதும்தான் நோக்கம் என்கிறபோது, அதற்கேற்ற வசவு வாக்கியங்களை படைப்பாற்றலோடு உருவாக்குகிறவர்கள் நாட்டுப்புறத்தில் நிறைய. இதனால்தான், ரோட்டில் இருவர் கடும் வார்த்தைகளால் சண்டையிட்டுக் கொள்வது, வழிப்போக்கர்களுக்கு ஒருவகை அடல்ட் என்டர்டெயின்மென்ட்டாக இன்றும் நிலவுகிறது.

‘பதினாறு வயதினிலே’, ‘அவன் இவன்’ போன்ற படங்களில் இரு பெண்கள் அப்படி சண்டையிட்டுக் கொள்வதைக் காட்டியிருப்பார்கள். அரிதான நிகழ்வுகள் எப்போதுமே ரசிக்கப்படும். பெண்கள் கெட்ட வார்த்தை பேசுவதும் அந்த வகைதான். பொதுவாக கெட்ட வார்த்தை என்பது ஆண்களின் உலகம்.

‘‘இந்த விஷயத்தில் மட்டும் ஆண் பெண் சமத்துவம் சாத்தியமே இல்லை. ஆண்களோடு ஒப்பிட்டால் பெண்கள் கெட்ட வார்த்தை பேசுவது மிகமிகக் குறைவு’’ என்கிறது Handbook of Gender Research in Psychology எனும் ஆய்வுப் புத்தகம். கெட்ட வார்த்தைகளை மட்டும் ஆராயும் அமெரிக்க ஆய்விதழ் ஒன்றின் பெயரே  Maledicta.  உலக மொழிகள் அனைத்திலும் பெரும்பாலும் கெட்ட வார்த்தைகள் இப்படித்தான் இருக்கும் என்கிறார்கள் மனிதவியலாளர்கள்...

*அந்தரங்க உறுப்புகளின் பெயர்கள்
*தாய், மனைவி, சகோதரி போன்றவர்களின் பாலியல் ஒழுக்கப் பிறழ்வு
*பொது இயல்புக்கு மாறான பாலியல் நடவடிக்கைகள்
*முறை தவறிய உறவு

ஆண்களால், ஆண்களுக்காக, ஆண்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த கெட்ட வார்த்தைகளில் காயப்படுத்தப்படுவது என்னவோ பெண்தான். இது உலகம் முழுவதும் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. நம்மூரிலும் இதுபற்றி நிறையவே பேசியிருக்கிறார்கள். ஆனால், ஏன் கெட்ட வார்த்தைகள் பெண்களையே இழிவுபடுத்துகின்றன?

இந்தக் கேள்விக்கு ‘ஆணாதிக்கம்’ என சிம்பிள் பதில் சொல்லிவிட்டு நாம் நகர்ந்துவிடுவோம். ஆனால், எழுத்தாளர் பெருமாள் முருகன் இதை இன்னும் சற்று நுணுக்கமாகப் பார்க்கிறார். தமிழில் இந்த சப்ஜெக்டை ஆய்வு செய்து, ‘கெட்ட வார்த்தை பேசுவோம்’ என்றே புத்தகம் எழுதியிருப்பது இவரின் தனித்துவம்.

‘‘கெட்ட வார்த்தைகள் பெண்களைத்தான் இழிவுபடுத்துகின்றன என்ற முடிவே பரிசீலனைக்கு உரியது. கெட்ட வார்த்தைகள் பெரும்பாலும் ஒழுக்க மீறல்களையே குறிப்பிடுகின்றன. நம் சமூகத்தில் பெண்களுக்கென்றும் ஆண்களுக்கென்றும் தனித்தனியே வேல்யூஸ்... அதாவது, ஒழுக்கங்கள் இருப்பது கண்கூடு. ஆண்களைப் பொறுத்தவரை அவன் பிற மகளிரை நாடுவது ஒழுக்க மீறல் கிடையாது. தன் குடும்பத்துப் பெண்களிடமே காமுறுவது போன்ற தீவிர நடவடிக்கைதான் ஒழுக்கப் பிறழ்வு.

ஆனால், பெண்கள் பிற ஆண்களை நாடுவதே ஒழுக்க மீறல். இதற்கேற்றபடிதான் கெட்ட வார்த்தைகளும் பயன்படுத்தப்படுகின்றன. ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏன் தனித்தனி ஒழுக்கங்கள் எனக் கேட்டால், அது அடிப்படை உடற்கூறு வரை போய்விடும். ஒரு பெண் ஒழுக்கம் பிறழ்வதை அவள் கணவனின் ஆண்மையோடு தொடர்புபடுத்தித்தான் சமூகம் புரிந்துகொள்கிறது. தாய் தடம் மாறியிருந்தால் அது அவன் அப்பாவின் ஆண்மைக்கு இழுக்கு. ஆக, இதில் ஆண்களும் மறைமுகமாக இழிவுபடுத்தப்படுவதை கவனிக்க வேண்டும்’’ என்கிறார் அவர்.

நிஜம்தான். மனைவி ஓடிவிட்டாள் என்ற நிலை ஒரு ஆணை கொலை அல்லது தற்கொலையை நோக்கித் தள்ளும் அளவுக்கு ஆண்மை குறித்த அவமானம் நம் சமூகத்தில் இருந்திருக்கிறது. இது தவிர, ஆண் வழிச் சமூகத்தின் எள்ளலாகவும் சில கெட்ட வார்த்தைகளைப் பார்க்கலாம். இயற்கையாக எல்லா பாலூட்டி விலங்குகளும் பெண் வழிச் சமூகம்தான். ஒரு பெண் வயிற்றில் பிறக்கும் குழந்தை அவளுடையது என்பது தான் உறுதியான கூற்று. அதற்கான மரபணுவை அவள் எங்கிருந்து பெறுகிறாள் என்பது அவளின் தனிப்பட்ட விருப்பம்.

 ஆனால், மனித இனம் இதிலிருந்து மாறி, பாட்டன், பூட்டன் என தந்தை வழிச் சமூகத்தை செயற்கையாக உருவாக்கி வைத்திருக்கிறது. வெறும் நம்பிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ‘இவன் என் பிள்ளை’ என உரிமை கொண்டாடும் இந்த வழக்கத்தை சித்தர்கள் பலரும் கிண்டலடித்திருக்கிறார்கள். ‘அம்மா வந்து சொன்னால்தான் அப்பாவின் பேர் தெரியுமடா’ என சினிமா பாடலில் கூட இந்த நிதர்சனம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற ஆங்கில ஜோக் ஒன்று... அரசர் ஒருவர் தனது டபுள் ஆக்ஷன் போலவே இருக்கும் சேவகனை அழைத்து ஆச்சரியப்படுவார். ‘‘உன் அம்மா இங்கே பணிப்பெண்ணாக இருந்திருக்கிறாரா? நன்றாக யோசித்துச் சொல்’’ என அவனைத் துருவித் துருவிக் கேட்பார். ‘‘இல்லவே இல்லை மன்னா. என் அப்பாதான் ரொம்பக் காலம் அந்தப்புரக் காவலாளியாக இருந்தார்’’ என்பான் அவன். இத்தனை நிச்சயமற்ற - நிலையற்ற ஆண்வழிச் சமூகத்தின் எள்ளல் எல்லா வசவுச் சொற்களிலும் வழியும்.

‘‘ஆண்மைக் குறைபாடு மாதிரி நாம் ஏன் பெண்மைக் குறைபாட்டைப் பார்ப்பதில்லை என நீங்கள் கேட்கிற கேள்வி நம் சமூகத்தின் அடிப்படைக் கட்டுமானத்தில் கை வைக்கும்’’ என்கிறார் மதுரையைச் சேர்ந்த க்ளினிக்கல் சைக்காலஜிஸ்ட் சஃபி. ‘‘பெண்களிலும் இச்சையின்மை என்ற விதத்தில் செக்ஸ் குறைபாடு உண்டு. ஆனால், அதற்காக மருத்துவர்கள் நாடப்பட்டதே மிகக் குறைவு. சொல்லப் போனால், பெண்களின் பாலியல் இச்சை இங்கு சரிவர ஆவணப்படுத்தப்படவே இல்லை எனலாம்.

செக்ஸ் என்பது இன்பத்துக்காகவா, இனப்பெருக்கத்துக்காகவா என்பது உலக அளவில் பெரிய டிபேட். ஆனால், இங்கே செக்ஸின் நோக்கம் இனப்பெருக்கம்தான். ‘இல்லறத்தில் இன்பம் இல்லையா?’ என்ற லேகிய விளம்பரங்கள் கூட இங்கே ஆண்களைத்தான் குறி வைக்குமே தவிர, பெண்கள் பக்கம் வராது. இந்த வித்தியாசங்கள் இருக்கும் வரை, கெட்ட வார்த்தைகளிலும் முரண்கள் இருக்கும்!’’ என்கிறார் அவர்.குடும்பம், ஆண்வழிச் சமூகம் என நம் செயற்கை செட்டப்களில் இவ்வளவு முரண் இருந்தால், காதல் என்ற அலங்கார வார்த்தையில் எத்தனை முரண் இருக்கும்? உயிரியல் ரீதியாக காதல் என ஒன்று இருக்கிறதா?

நீங்கள் யார்?

இந்தப் படத்தில் இருப்பது ஒரு பறவையின் தலை மட்டுமல்ல... வேறென்ன உங்கள் கண்ணுக்குத் தெரிகிறது? கண்டுபிடித்துவிட்டு பலன்களை தலைகீழாக்கிப் பாருங்கள்!

இது வாத்து, க்ளாக்வைஸ்ல திருப்பினா முயல்... என அடுத்த விநாடியே கண்டுபிடித்துவிட்டால் நீங்கள் வலது மூளைக்காரர். சோம்பல் இருந்தாலும் புதியவைகளை விரும்பும் தேடல் உங்களின் ஸ்பெஷல்.முயல் வெகுநேரம் உங்களுக்குப் பிடிபடாமல் போக்குக்காட்டியிருந்தால் நீங்கள் இடது மூளைக்காரர். இது மாதிரி வடிவப் புதிர்களில் பின்வாங்கினாலும் மொழித்திறனிலும் கணிதத்திலும் உங்களுக்கு டிஸ்டிங்ஷன் நிச்சயம்!

நோ...மம்மி பாவம்... நோ நோ... டாடிபாவம்!

டேய் வண்டி இப்ப வெஸ்ட் பெங்கால்ல இருக்கு. அது செல்போன் கஸ்டமர் கேர்ல பேசுற ஆட்டோமேட்டிக் வாய்ஸ்டா!

கோகுலவாச நவநீதன்
-தேடுவோம்...