ஒன்றரை லட்சம் ராணுவத்தினர் எங்களைச் சூழ்ந்துள்ளார்கள்!



அதிர்ச்சியூட்டும் விக்னேஸ்வரன்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கிய இலங்கையின் வடக்கு மாகாண முதல் அமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். இலங்கை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பணியாற்றியவர்.

இறுதிக்கட்டப் போருக்குப் பின், 2013ல் வடக்கு மாகாணத்துக்கு நடத்தப்பட்ட தேர்தலில், ராஜபக்ஷே கும்பலின் கடும் சதிகளைக் கடந்து 38 இடங்களில் 30 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு, சட்டப்புலமை மிக்க விக்னேஸ்வரனை முதல்வராகத் தேர்வு செய்தது.

பி.யூ.சி.எல். அமைப்பின் ஏற்பாட்டில் நடந்த கே.ஜி.கண்ணபிரான் நினைவு சொற்பொழிவு உள்பட தனிப்பட்ட சில நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக அண்மையில் தமிழகம் வந்தார் விக்னேஸ்வரன். மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு பேசியவர், தமிழர்களுக்கும், வடக்கு மாகாண அரசுக்கும் எதிராக ராஜபக்ஷே அரசு செய்யும் கொடுமைகளை சற்று உள்ளீடாகவே எடுத்து வைத்தார்.

''நீங்கள் எதிர்பார்க்கிறபடி உணர்ச்சிபூர்வமாகப் பேசினால் அது எம்மை மட்டுமல்ல... வட மாகாண சபையையும் பாதிக்கும். நான் பேசும் வார்த்தைகளை வைத்து எமக்கு பயங்கரவாத பூச்சைப் பூசி வட மாகாண சபையைக் கலைக்கவும் எங்கள் மத்திய அரசாங்கம் தயங்காது. இப்படிச் சொல்வதால் என்னை கையாலாகாதவன் என்று நினைக்காதீர்கள். சூழலுக்கு ஏற்ப சூள் உரைப்பதே சூரத்தனம்’’ என்று தன்னிலை விளக்கம் அளித்த விக்னேஸ்வரன், தங்கள் பிரச்னை களையும் பகிர்ந்து கொண்டார்.

‘‘வடக்கு மாகாணத்தின் தலைமைச் செயலர், முதலமைச்சரின் ஆணைகளுக்குக் கட்டுப்படத் தேவையில்லை என்ற நிலையை அங்குள்ள மத்திய அரசு உருவாக்கி வைத்துள்ளது. மாகாண நிதி செயல்பாடுகள் முதலமைச்சரிடம் இருந்து பறிக்கப்பட்டு தலைமைச் செயலாளரிடம் வழங்கப்பட்டுள்ளன. ஆளுநரும், தலைமைச் செயலாளருமே நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். எந்த தீர்மானமாக இருந்தாலும் அவர்கள் நினைத்தால் மட்டுமே நிறைவேறும். மத்திய அரசாங்கத்துக்கு எதிரான எந்த தீர்மானத்தையும் நிறைவேற்ற விடுவதில்லை.

அரசு ஊழியர்கள் மாகாண அரசுக்குக் கட்டுப்படுவதில்லை. ஊழியர் நியமனம், பதவி உயர்வு எதுவும் மாகாண அரசின் கையில் இல்லை. நில உரிமை சார்ந்த விஷயங்களும் அவர்கள் கையில்தான் இருக்கிறது. மாகாண அரசின் உத்தரவுக்கு இணங்கும் அதிகாரிகளை கவர்னரும், தலைமைச் செயலாள ரும் மிரட்டுகிறார்கள். ராணுவத்தின் தளபதியாக இருந்தவரே கவர்னராக இருப்பதால் அவரை எதிர்க்க யாருக்கும் துணிவில்லை.

 வடமாகாண சபைக்கென ஒரு நிதியம் செயல்படுகிறது. ஆனால் அது தலைமைச் செயலாளரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. முதலமைச்சருக்கான நிதியம் ஒன்றை நாங்கள் திறக்க முற்பட்டபோது அதை கவர்னர் நிராகரித்து விட்டார். ஆனால் பிற மாகாணங்களில் அப்படியான நிதியங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

 ‘புலி வரப் போகிறது...’, ‘புலி வரப் போகிறது’ என்று கூறி சுமார் ஒன்றரை லட்சம் ராணுவத்தினரை வடக்கு மாகாணத்தில் குவித்திருக்கிறார்கள். மக்களின் அன்றாட நடவடிக்கைகள் அனைத்திலும் அவர்கள் தலையிடுகிறார்கள். பெண்களின் கதி பெருத்த சங்கடமாக இருக்கிறது. எங்கள் நிலங்களை ராணுவத்தினர் கைப்பற்றி விவசாயம் செய்து அந்த விளைச்சலை எங்களுக்கே விற்கிறார்கள்.

வலிகாமம் பிரதேசத்தில் ஒரே இடத்தில் 6000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களைப் பறித்து, குடியிருப்புகள், கோயில்கள், கல்விக்கூடங்களை பலவந்தமாக இடித்து ஹோட்டல்களையும், கோல்ப் மைதானங்களையும், நீச்சல் குளங்களையும் கட்டி வருகிறது ராணுவம். அங்கிருந்த மக்கள் முகாம்களில் வதைபடுகிறார்கள். இதையெல்லாம் கண்டித்தால், ‘உங்களுக்கும் புலிகளுக்கும் தொடர்பு’ என்று விசாரணைக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

30-40 வருடங்களுக்கு முன்னர் வெளியேறி இப்போது மீண்டும் தமது நிலங்களுக்குத் திரும்புபவர்கள், அந்நிலங்களில் வேறு நபர்கள் இருப்பதைக் காண்கிறார்கள். ‘இவை அரசுக்குச் சொந்தமான நிலங்கள். வேறு நபர்களுக்குக் கொடுத்து விட்டோம்’ என்று கூறி அதிகாரிகள் விரட்டுகிறார்கள். அநேகமாக தமிழகத்தில் அகதிகளாக இருப்பவர்கள் எம் நாட்டுக்குத் திரும்பினாலும் அவர்களும் இப்படியொரு நிலையைத்தான் சந்திப்பார்கள். எனவே, அவர்களைத் திருப்பியழைத்து வேறு இடங்களில் குடியமர்த்த இந்திய அரசாங்கம் எங்களுக்கு உதவ வேண்டும்.

போரால் பாதிக்கப்பட்ட 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் இருக்கிறார்கள். ஒரு லட்சத்துக்கும் மேலான இளம் விதவைகள் இருக்கிறார்கள். பெற்றோரை இழந்த அனாதைக் குழந்தைகள் இருக்கின்றன.

தகுந்த திறன் இருந்தும் வேலையற்ற இளைஞர்கள் இருக்கிறார்கள். இவர்களின் வாழ்வாதாரத்துக்கு எந்த ஏற்பாடுகளும் செய்ய முடியவில்லை. ஆனால் தெற்கில் இருந்து ஏராளமான வேலையாட்கள் கொண்டு வரப்படுகிறார்கள். மக்களின் மனநிலை போரினால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. அதை நீக்குவதற்கான வைத்திய வசதிகள் எங்களிடம் இல்லை. குழந்தைகளுக்கு சத்துணவு கொடுக்கக்கூட வழியில்லை. 

இந்தியா உதவியுடன் கட்டப்படும் வீட்டுவசதித் திட்டத்தில் ஊழல் மலிந்திருக்கிறது. அரசியல் சகாயம் பெற்றவர்களுக்கு மட்டுமே வீடு கிடைக்கிறது. நல்ல நோக்கத்தில் இந்திய அரசால் கொடுக்கப்பட்ட அத்திட்டம் பயனற்றுப் போய்விட்டது.

வட மாகாணத்தில் சிங்களர்களைப் பெருவாரியாகக் குடியமர்த்தி, தமிழர்களை சிறுபான்மையினராக்க ராணுவம் மூலம் நடவடிக்கை எடுக்கிறது அரசாங்கம்.   ‘சிறிதும் அதிகாரம் இல்லாத வட மாகாண சபைக்கு ஏன் தெரிவானீர்கள்?’ என்று நீங்கள் கேட்பீர்கள்.

முன்னர், கிழக்கு மாகாண சபை தேர்தலை நாங்கள் புறக்கணித்ததால், தமிழ் பேசும் பிரதேசமான கிழக்கு மாகாணத்தில் சிங்களம் பெருமளவு ஊடுருவி விட்டது. சுதந்திரம் பெறுவதற்கு முன் 5 சதவீதத்துக்கும் குறைவாக இருந்த சிங்கள மக்கள் விகிதாச்சாரம் இப்போது 35 சதவீதத்துக்கும் அதிகமாகி விட்டது.

 இதே நிலை வட மாகாணத்திற்கும் வரக்கூடாது என்பதாலேயே பொறுப்புக்கு வந்தோம். எங்களுக்குத் தற்போதைய தேவை உரிய சட்ட மாற்றமே. ஒற்றை ஆட்சிமுறையை மாற்றி மாகாணங்களுக்கு அதிகாரங்களை பரவலாக்க வேண்டும். இதை வலியுறுத்த இந்திய அரசாங்கத்துக்கு தார்மீக உரிமை உள்ளது. அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்’’ என்று வேதனையோடு முடிக்கிறார் விக்னேஸ்வரன்.

வெ.நீலகண்டன்,
பேராச்சி கண்ணன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்