மழைத்தும்பிகள்



இரவு நீதானே சொன்னாய்
இடையூறாக இருக்கிறது
என்று
அதுதான்
முதன்முதலாக நீ
முத்தமிட்டுத் தந்த
கூழாங்கல்லோடு
கழற்றி வைத்திருக்கிறேன்
தாலியை

வாழ்க்கை வேறொன்றுமில்லை
உனக்குக் கிடைக்காத
ஆணுக்காக
உனக்குக் கிடைக்கிற
ஆணுக்கு
உன்னைக் கிடைக்காமல்
செய்வது

சமூகம் கொடுத்த
அங்கீகாரத்திற்காகவே
பல எழுத்தாளர்களின்
உலகத் தரம் வாய்ந்த
காமப் பிரதிகள்
நினைக்கப்படுதலோடே
எரிக்கப்படுகின்றன

ஆற்றோரத்துக் கோரையில்
புணர்ந்தபடியே
நீண்ட நேரம்
அமர்ந்திருந்த
அந்தத் தும்பிகளின்
கண்களில்
பதிந்திருப்போமோ
என்கிற
குற்ற உணர்வோடு
அந்த இரவை
அப்படியே
விடிய வைத்தோம்

மௌனம்
விழுங்குபவரை
விழுங்குதல்

அறிவுமதி