கவிதைக்காரர்கள் வீதி




பெரியவர்கள்
‘அமைதியாய் வா’வென்று
ஏறக்குறைய இழுத்தபடி
போய்க்கொண்டிருந்தாள் அம்மா.
‘ஃபிரண்டோட அப்பா’ என்று
சொல்லிக்கொண்டே
திரும்பித் திரும்பிப் பார்த்தபடி
போய்க்கொண்டிருந்தான் சிறுவன்.

பெரியவர்கள்
பெரும்பாலும்
திரும்பிப் பார்ப்பதில்லை!

வரவு
இத்தனை ஆண்டுகளுக்குப் பின்
நீ இப்படி வந்திருக்க வேண்டாம்.

முகப்புத்தகத்தில் வந்திருக்கும்
உன் நட்புக் கோரிக்கையில்
ஒரு முகமற்ற முகத்துடன்

இத்தனை ஆண்டுகளுக்குப் பின்
உன் வரவு
இப்படி இருந்திருக்க வேண்டாம்!

அப்படியே...
என்றைக்காவது
பார்த்தால்
கேட்பதற்கென்று
சில கேள்விகள்
என் வசம்

என்றைக்காவது
பார்த்தால்
கேட்கப்படாமல்
அவை
அப்படியே
இருப்பதுதான்
அழகு!

செல்வராஜ் ஜெகதீசன்