‘இதைவிட இனிமையாக ஒரு எதிரியைப் பழிவாங்க முடியாது’’ மோடியின் முதல் அமெரிக்கப் பயணத்தை இப்படித்தான் வர்ணிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். குஜராத் கலவரங்களைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் அவருக்கு விசா தராமல் நிராகரித்த ஒரு நாட்டில் சிவப்புக் கம்பள வரவேற்பு.

நியூயார்க்கின் மேடிஸன் ஸ்கொயர் கார்டனில் மோடி பங்கேற்ற பிரமாண்ட மாநாடு, வெளிநாட்டுத் தலைவர்கள் பலருக்கு அமெரிக்க மண்ணில் சாத்தியமில்லாத விஷயம். இதையெல்லாம் தாண்டி, மோடி எதிர்பார்த்தது அமெரிக்காவில் கிடைத்ததா?
பொதுவாக வெளிநாட்டுத் தலைவர்கள் அமெரிக்கா வரும்போது, அவர்களை எதிர்த்து மனித உரிமை அமைப்புகள் சில போராட்டங்கள் நடத்தும். அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடம் அருகே நடக்கும் இந்தப் போராட்டங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களோ, செனட்டர்களோ ஆதரவு தெரிவிப்பார்கள். கண்டன அறிக்கையில் கையெழுத்து போடுவார்கள். ஆனால் மோடி விஷயத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என எந்தக் கட்சி பிரமுகர்களும் இப்படிச் செய்யவில்லை. மாறாக, இரு தரப்பிலும் சுமார் 30 எம்.பி.க்கள் மோடியை சந்தித்துப் பேசினார்கள்.
இரண்டு விஷயங்கள் அவர்களை இப்படிச் செய்ய வைத்திருக்கின்றன. ஒன்று, மோடியின் ‘மேக் இன் இண்டியா’ திட்டம். அமெரிக்க பிசினஸ் நிறுவனங்களுக்கு இந்தியாவின் கதவை மோடி அகலத் திறந்து விட்டிருக்கிறார். கிட்டத்தட்ட அவர், 120 கோடி மக்கள்தொகை கொண்ட மிகப்பெரிய நாட்டின் தலைமை செயல் அதிகாரி! அவரைப் பகைத்து காரியத்தைக் கெடுத்து விடக் கூடாது.
அமெரிக்காவை யோசிக்க வைத்த இரண்டாவது விஷயம், மோடியும் ஜப்பான் பிரதமர் அபேயும் போட்டிருக்கும் கூட்டணி. இருவருமே ‘தேசியம்’ பேசும் தலைவர்கள். இவர்கள் இணைந்து சீனாவுக்கு செக் வைத்தால் அது ‘சபாஷ்... சரியான போட்டி’ என்கிற அளவில் இருக்கும். இருவருக்குமே சீனாவை எதிர்க்க அமெரிக்காவின் உதவி தேவைப்படாது போய் விடும். அப்படி ஒதுக்கப்பட்டால், அது அமெரிக்காவுக்கு ஆபத்து.
அமெரிக்கா வந்த எந்தத் தலைவரையும் இத்தனை பிசினஸ் நிறுவன அதிபர்கள் சந்தித்ததில்லை. போயிங், ஜெனரல் எலெக்ட்ரிக், உலகின் மிகப்பெரிய மருந்து வேதிப்பொருள் நிறுவனமான மெர்க், உலகின் மிகப்பெரிய சொத்து நிர்வாக நிறுவனமான பிளாக்ராக்... இப்படி 23 நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் ஆர்வமாக வந்தனர். இதுதவிர அமெரிக்காவாழ் இந்தியர்கள் குழு... அத்தனை பேரையும் இந்தியாவில் பிசினஸ் தொடங்க மோடி அழைத்திருக்கிறார்.
மோடியின் கனவு, சீனா போல இந்தியாவை ஒரு உற்பத்தி கேந்திரம் ஆக்குவது. உலக மார்க்கெட்டை சீன உற்பத்திகள் இப்போது ஆக்கிரமிப்பது போல இந்தியப் பொருட்களும் எங்கெங்கும் செல்ல வேண்டும், அதன்மூலம் இந்தியாவில் வேலைவாய்ப்பும் தொழில்வாய்ப்பும் பெருக வேண்டும். இதற்கான முதலீடுகளைத்தான் அமெரிக்காவில் அவர் எதிர்பார்க்கிறார். அது சாத்தியமாகும்!
ஆனால் அமெரிக்க அரசில் விவசாயிகளுக்கு செல்வாக்கு அதிகம். அவர்கள் எப்படியாவது இந்தியாவைப் பணிய வைக்க முயற்சிக்கிறார்கள். அமெரிக்க விளைபொருட்களுக்கான சந்தையாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்பது அவர்கள் ஆசை. இதற்கு இந்தியா இதுவரை பணியவில்லை.
அமெரிக்க மனோபாவம் பற்றி அங்கு அதிபர் தேர்தலில் நின்று தோற்ற செனட்டர் ஜான் மெக்கெயின் இப்படிச் சொல்வார்... ‘‘நாம் எப்போதுமே அடுத்தவர்களிடமிருந்து சலுகைகள் பெறவே ஆசைப்படுவோம். நம் முதலீட்டைக் கொடுத்து, அதில் அடுத்தவர் ஜெயிக்க வேண்டும் என நினைக்க மாட்டோம். ஏதோ வியாபாரம் போல நமது நட்புறவு இருக்கிறது!’’இப்படிச் சிந்திக்கும் ஒரு தேசத்திலிருந்து நமக்கு என்ன வரும் என்று பார்ப்போம்!
அகஸ்டஸ்