கே.ஒய்.சி என்றால் என்ன?



‘‘பதினைஞ்சு வருஷமா எனக்கு அக்கவுன்ட் இருக்குப்பா அந்த பேங்க்ல. ஃபாரின்ல இருக்குற என் ஃப்ரெண்ட் அவன் வீட்டை ரெனவேட் பண்ணச் சொல்லி போன மாசம்தான் ஒரு 2 லட்சத்தை என் அக்கவுன்ட்ல போட்டான்.

அடுத்த நாளே பேங்க்ல இருந்து ஃபோன்... உங்க அக்கவுன்ட் டீட்டெயில் பத்தலை. கே.ஒய்.சினு ஒரு ஃபார்ம் ஃபில்லப் பண்ணணும்’னு சொல்றாங்க. எதுக்கு இதெல்லாம் புதுசா? ஏதாச்சும் வம்பு வருமா?’’  நடுக்கத்தோடு கேட்டார் நண்பர் ஒருவர்.

கே.எஃப்.சி சிக்கன் தெரியும்... அதென்ன கே.ஒய்.சி? இந்தப் புதிய ஃபார்ம் எதற்காக? இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முன்னாள் ஜெனரல் மேனேஜரான ஆர்.கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டோம்...

‘‘கே.ஒய்.சி என்றால் know your customer. அதாவது, தங்கள் வாடிக்கையாளர் யார்? தற்போது எங்கே வசிக்கிறார்? என்பதையெல்லாம் நிறுவனங்கள் தெரிந்து வைத்துக் கொள்ளும் வசதி. வங்கிகளைப் பொறுத்தவரை தவறான பணப்பட்டுவாடா நடக்க நிறைய வாய்ப்பிருக்கிறது.

சட்டத்துக்குப் புறம்பான காரியத்துக்கு தங்கள் வங்கியின் கணக்கு பயன்படுத்தப்படும்போது, அதன் மீது நடவடிக்கை எடுக்க வங்கிகளுக்கு முழு உரிமை உண்டு. வங்கிக் கணக்கை கண்காணிக்க அரசின் வருமான வரித்துறைக்கு அதிகாரம் உண்டு. ஒரு குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் தவறான பணம் நடமாடுவது தெரிந்தால், வங்கிகள் அந்த வாடிக்கையாளரை அழைத்து விளக்கம் பெறும்.

ஆனால், சமீப காலங்களாக வங்கிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் உள்ள இடைவெளி அதிகரித்துவிட்டது. ஏ.டி.எம் கார்டுகள், நெட்பேங்கிங் போன்ற வசதிகள் வந்த பின்பு, எங்கிருந்து வேண்டுமானாலும் வங்கிப் பரிவர்த்தனை செய்ய முடிகிறது. பல வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் இருப்பிடச் சான்று போன்றவை மிகப் பழையதாக இருக்கும்.

அந்த வீட்டை, தெருவை... ஏன், அந்த நகரத்தை விட்டே சென்று விட்டாலும் கூட வங்கிப் பரிவர்த்தனை தொடர்ந்து நடைபெறும். சில நேரம் வாடிக்கையாளர் இறந்த பிறகும் கூட அவரின் டெபிட் கார்டை வைத்து மனைவியோ, மகனோ, மகளோ வங்கிப் பரிவர்த்தனை செய்துகொண்டிருப்பார்கள்.

அப்படிப்பட்ட கணக்குகளில் ஏதாவது தவறாகத் தென்பட்டால், யாரைக் கூப்பிட்டு விசாரிப்பது என்று தெரி யாது. ஆவணங்களில் கொடுக்கப்பட்ட பழைய முகவரியில் யாரும் இருக்க மாட்டார்கள். இது போன்ற சிக்கல் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த கே.ஒய்.சி படிவம் கொண்டுவரப்பட்டது.

இன்று, வங்கிக் கணக்கைத் துவங்கும்போதே கே.ஒய்.சி படிவத்தைப் பூர்த்தி செய்யச் சொல்கிறார்கள். இதே படிவத்தை ‘க்ராப்’ என்றும் அழைக்கிறார்கள். ‘கஸ்டமர் ரெக்கார்ட் ஆஃப் ப்ரொஃபைல்’ என்பதன் சுருக்கம் அது. இதனோடு ஒரு வாடிக்கையாளர் தனது தற்போதைய இருப்பிடச் சான்றை அளிக்க வேண்டும்.

 பேன் கார்ட், டிரைவிங் லைசென்ஸ், வோட்டர் ஐ.டி என எதைக் கொடுத்தாலும் அதில் பழைய முகவரி இருக்க வாய்ப்புண்டு. இதனால் கடந்த இரண்டு மாதத்தில் வந்த டெலிபோன் பில், போஸ்ட் பெயிட் மொபைல் பில், அல்லது மின்சாரக் கட்டணம் போன்றவற்றைக் கறாராகக் கேட்டுப் பெறுகிறது கே.ஒய்.சி.

தற்போது செல்போன் நிறுவனங்களும் கே.ஒய்.சி படிவம் பெறுவதில் கவனம் செலுத்துகின்றன. சில வங்கிகள் பணப்பரிவர்த்தனையே இல்லை என்றாலும் பழைய வாடிக்கையாளர்களை அழைத்து கே.ஒய்.சி பூர்த்தி செய்யச் சொல்கின்றன. பண மோசடி, அடையாள மோசடி, பண வெளுப்பு மற்றும் தீவிரவாதிகளின் பணப்பரிவர்த்தனையைத் தடுப்பதுதான் இந்தப் படிவத்தின் நோக்கம்.

 ஆக, உங்கள் வங்கிக் கணக்கில் வரும் ஒவ்வொரு ரூபாய்க்கும் உங்களிடம் கணக்கு இருந்தால், காரணம் இருந்தால், கே.ஒய்.சியை நினைத்துக் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை!’’ என்றார் அவர்.அட, சும்மா தெரிஞ்சு வச்சிக்கறதுக்குத்தானாம்ங்க. நல்லா கௌப்புறாங்க பீதிய!

 டி.ரஞ்சித்
படம்: ஆர்.சி.எஸ்