தேசிய விருது வாங்க ஆசை! டாப்ஸி



கோடை

சிறு தூறல் குளிப்பாட்ட, குளிர்காற்று தலை துவட்ட ஆச்சரிய க்ளைமேட்டில் சென்னை. ‘சாட்டர் டே ஈவினிங்னா அவனவன் டாஸ்மாக்கிலிருந்து டிஸ்கோ வரைக்கும் டிஸைன் டிஸைனா டைம்பாஸ் வச்சிருக்கான். நமக்கு..?’ என யோசித்தபோது, பெரிய ஆறுதல். சென்னை பக்கம் வந்திருந்தார் டாப்ஸி பன்னு.

அவருக்கு ஆகஸ்ட் 1ம் தேதி பிறந்தநாள் (கவர்ன்மென்ட் ஹாலி டே சொல்லிரலாமா!). அன்றைக்குத்தான் பார்த்திபன், ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ படத்தை ரிலீஸ் செய்கிறார். (கில்லாடி சார் நீங்க!). உட்கார்ந்ததும் பச்சரிசி புன்னகையுடன் உரையாடலைத் தொடங்கினார். ‘‘பார்த்திபனோடு படம்... எப்படி யிருக்கு... அந்த அனுபவம்?’’

‘‘எனக்கு பர்சனலா பிடிக்கிற குறிப்பிட்ட படங்களில் அவருடையதும் இருக்கு. ‘ரொம்பவும் முக்கியமான கதாபாத்திரம்... ஒரே ஒரு நாள் ஷூட்டிங்... சம்மதமா’ன்னு கேட்டு அவர்கிட்ட இருந்து மெஸேஜ் வந்தது. நான் எதையும் கேட்கலை. அதற்கான அவசியம் இல்லைன்னு தோணுச்சு. அவரிடமிருந்து ஒரு நிறைவான கேரக்டர்தான் கிடைக்கும் என நம்பினேன்.

 கிடார் கற்றுக் கொடுக்கிற பெண்ணா வர்றேன். வெட்கமில்லாமல் உண்மை சொன்னா, நான் கிடாரைக் கையில் பிடிச்சது கூட இல்லை. அதை மத்தவங்களுக்கு கற்றுக் கொடுக்கிற மாதிரி நடிக்கிறது எப்படின்னு கொஞ்சம் பயந்துட்டேன். அவர் அதை தற்காலிகமா கத்துக்க ஒரு சின்ன ட்யூஷனே வச்சிட்டார்.

‘வை ராஜா வை’ ஷூட்டிங்கில் இருந்தவளுக்கு, முடிந்ததும் கோச்சிங் க்ளாஸ். சும்மா வாசிக்கிற மாதிரி அதைப் பண்ணியிருக்கலாம். கேமராவை வைத்து ஜாலம் காட்டியிருக்கலாம். ஆனால், அவர் மெனக்கெட்டார். அதுதான் அவரோட ஸ்டைல். இன்னும் சொன்னால் படத்தில் என் பார்ட் எந்த இடத்தில் வருது, எவ்வளவு நேரம், எப்படி இருக்கும்... ஒண்ணுமே எனக்குத் தெரியாது. இதில் எனக்கு வசனம் கூட கிடையாது.

எவ்வளவு தொகைன்னு கேட்டப்போ, ‘நோ’ சொல்லி புன்னகையை மட்டும் பரிசா கொடுத்திட்டு வந்திட்டேன். நிச்சயம் அவரோட படத்தில் நடிச்சது கூடுதல் அனுபவம். நான் சின்னப் பொண்ணுதானே... அனுபவத்தை சேர்த்துக்கிற இடத்தில்தானே இருக்கோம்!’’
‘‘ ‘வை ராஜா வை’ படத்திலும் இன்னொரு ஹீரோயினா நடிக்கிறீங்க..?’’

‘‘நிஜமாகவே அது மாறுபட்ட ரோல். அதை விவரிச்சு சொல்ல எனக்கு அனுமதி கிடையாது. ஆனால், நெகட்டிவ், பாஸிட்டிவ் என ரெண்டு வகையிலும் அந்த ரோலை சேர்க்க முடியாது. அப்படியும் வித்தியாசப்படும். ஐஸ்வர்யாவுக்கு ‘இந்த ரோலை டாப்ஸி செய்தால் நல்லாயிருக்கும்’னு தோணினது பெரிய விஷயம் இல்லை! எனக்கு அப்படி நடிக்கிறதில் எந்த சிரமும் கிடையாது.

ஒற்றை ஹீரோயினாதான் படம் பண்ணுவேன்னு அடம் பிடிக்கிறது கிடையாது. பத்து நிமிஷம் வந்துட்டுப் போற ரோலில் கூட பிரமாதமான நடிப்பைக் கொடுத்தவங்க இருக்காங்க. சோலோ ஹீரோயின்தான்னு திட்டம் போட்டுக்கிட்டிருந்தால் இங்கே பெரிசா ஒண்ணும் கிடைக்காது. நமக்குப் பிடிக்கிற கேரக்டர்ஸ்... நல்ல கம்பெனி, டைரக்டர்... சேர்ந்து நடிக்கிற நடிகரோட புகழ்... எல்லாம் சேர்ந்தது தான் என் செலக்ஷன். எனக்கு வருத்தமெல்லாம் எதுவும் கிடையாது. சந்தோஷமா இருக்கேன்!’’

‘‘உங்களைத் தமிழ்ப் படத்தில் பார்க்கிறதே அரிதாகிட்டு வருதே..?’’‘‘ஹலோ... நான் தமிழ், தெலுங்கு, இந்தின்னு மூணு மார்க்கெட்லயும் இருக்கேன். அதனால், தமிழில் நடிக்கிற எல்லாப் படத்திலும் நான் இருப்பேன்னு எதிர்பார்க்கக் கூடாது. ஆனால், வர்ற படங்களில் கண்டிப்பா நல்லா வருவேன். ‘ஆரம்பம்’ படத்தில் எனக்குக் கிடைச்சது அருமையான ரோல். அஜித், ஆர்யான்னு காம்பினேஷன். கலகலன்னு எல்லோரது பார்வையும் பட்ட படம்.

பளிச்னு வந்தேன். இப்பவும் ‘வை ராஜா வை’, பார்த்திபன் படம்னு வந்துட்டுதானே இருக்கேன்? ‘முனி-3’ பார்த்தால் உங்களுக்கு இந்தக் கேள்வியே மறந்து போயிடும். லாரன்ஸ் என்னென்ன ஆச்சரியங்கள் வச்சிருக்கார்னு எனக்கே முழுசா தெரியாது. ஒரு வருஷத்தில் இவ்வளவுதான் நடிக்க முடியும்னு அளவிருக்கு இல்லை யா... இன்னும் தெலுங்கு, இந்தின்னு மீதிக் கணக்கு இருக் கே... நீங்க அதையும் பார்க்கணும். எவ்வளவு உயரம் போ றோம்னு நான் எப்பவும் யோசிக்கிறது கிடையாது. புதுசு புதுசா எத்தனை விஷயங்களை கத்துக்க முடியும்னுதான் பார்ப்பேன்.’’

‘‘இன்னமும் க்யூட்டா ‘ஆடுகளம்’ டாப்ஸியே மனசில் இருக்கார். அது மாதிரி வெற்றிமாறன்கிட்டேயிருந்து மறுபடி வருவீங்களா?’’ ‘‘அட, அவரே இன்னும் அடுத்த படத்துக்கான தயாரிப்புல தானே இருக்கார். ‘ ‘ஆடுகளம்’ படத்தில் என்னை மட்டும் விட்டுட்டு எல்லோரும் தேசிய விருது வாங்கிட்டீங்களே’ன்னு வெற்றி சார்கிட்ட கேட்டேன்.

என்னடா நமக்கு மட்டும் விட்டுப் போச்சுன்னு கொஞ்சம் வருத்தம்தான். ‘ஒண்ணும் கவலைப்படாதம்மா, அடுத்த படம் எடுக்கறோம். உனக்கு தேசிய விருது வாங்கிக் கொடுக்கறோம்’னு சொன்னார். அவர் நிஜமா சொன்னாரா, விளையாட்டான்னு கூட தெரியல. ஆனா, எனக்கு தேசிய விருது இன்னும் கனவு தான்.’’

- நா.கதிர்வேலன்