பாட்டில்



‘கடவுளே... இதுக்கும் போட்டி வந்துடுச்சா?’ - கவலையாய் இருந்தது சங்கருக்கு.ஊரில் எங்கெல்லாம் சந்தடியில்லாமல் இருக்கிறதோ, அங்கெல்லாம் கூட்டமாய் அமர்ந்து குடிக்கிறார்கள். அவர்கள் வீசுகிற காலி பாட்டில்களைப் பொறுக்கி விற்று, தினம் பதினைந்து, இருபது சம்பாதித்தான் சங்கர். இப்போது அவன் பிழைப்பைக் கெடுக்க பல பேர் கிளம்பிவிட்டார்கள். அவனுக்கு முன்பே யாரோ போட்டியாளர்கள் போய் பாட்டில்களை அள்ளி விடுகிறார்கள்.

சங்கரின் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை.
‘‘என்னடா! இன்னிக்கும் எதுவும் கிடைக்கலையா?’’
‘‘இல்லேம்மா...’’

‘‘சாப்பாட்டுக்குக் கூட ஒண்ணும் இல்லடா’’ - இருமியபடி அம்மா புலம்பியது அவனை சங்கடப்படுத்தியது. ‘‘கடைசியா ஸ்கூல் கிரவுண்டுக்குப் போய் பாக்கறேம்மா. அந்த இடம் வேற யாருக்கும் தெரியாது!’’

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஊரை விட்டு சற்றுத் தள்ளி இருக்கும் பள்ளி மைதானம் போதையில் தடுமாறிக் கொண்டிருக்கும். அங்கே சென்றால் நிறைய பாட்டில்கள் கிடைக்கும். கிளம்பிச் சென்றான். அதிர்ந்தான். யாராவது விற்றுப் பிழைப்பார்களே என்ற எண்ணம் கூட இல்லாமல், போதையில் அனைத்து பாட்டில்களையும் தரையில் அடித்து உடைத்திருந்தார்கள். பொறுப்பில்லாத குடிகாரர்கள். ‘ஸ்கூல் பிள்ளைங்க கால்ல குத்தினா என்ன ஆகறது?’ என்ற கவலையில் எல்லாவற்றையும் கூட்டிப் பெருக்க ஆரம்பித்தான் அவன்.          

கே.செல்வன்