குட்டிச்சுவர் சிந்தனைகள்!



* நரகத்தின் வாசலில் நிற்கும் வரிசையை விட நீளமாக, நகரத்திலேயே நரகத்தை காட்டும் ஸ்டேட் பேங்க் ஏ.டி.எம்மில் நிற்கும் கியூவிற்கு சூடாக போண்டா, பஜ்ஜி, காபி, டீ விற்கலாம்.
* டாஸ்மாக் பார்ல 2 ரூபா பிளாஸ்டிக் டம்ளரை 5 ரூபான்னு பில் போட்டு குடிகாரங்க வயித்துல அடிக்கிறாங்க. அதுக்கு பதிலா நாமளே டாஸ்மாக் வாசலில் 2 ரூபாய் பிளாஸ்டிக் டம்ளரை 3 ரூபாய்க்கு வாடகைக்கு விடலாம்.

* நடமாடும் ஸ்மார்ட் போன் பேட்டரி சார்ஜர் கடை போட்டு, 1 ரூபாய்க்கு 10% பேட்டரி ஏத்திக் கொடுத்து கல்லா கட்டலாம்.
* பார்ட் டைம் பிசினஸா, தினமும் காலை 7-9 மணி வரை, அப்பார்ட்மென்ட் அம்மாக்கள் குழந்தைகளை பயமுறுத்தி சோறூட்ட ஒத்தக்கண்ணன் வேஷம் போட்டு காசு வசூலிக்கலாம்.
* ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் அம்மா மெஸ்ஸில் அவர்கள் இட்லி சாப்பிட இடம் பிடித்து தந்து கமிஷன் வாங்கிக்கலாம். அதோடு, அம்மா மெஸ்ஸில் சாப்பிட்டுட்டு வரும் கோடிக்கணக்கான(?!) மக்களுக்கு பீடா, இஞ்சி முரப்பா விற்று சில்லறைய தேத்தி சொத்து சேர்க்கலாம்.
* பேச்சுலர்கள் ரூம் மற்றும் மேன்ஷன் மொட்டை மாடிகளில் பாட்டில் கலெக்ஷன் கான்ட்ராக்ட் எடுக்கலாம்.
* வாலிப வயோதிக அன்பர்களால், பொண்ணுங்க எஸ்.எம்.எஸ் அனுப்பும் வேகத்துக்கு பதில் டைப் பண்ண முடியாது. ஒரு மணி நேரத்துக்கு 50 ரூபா கணக்கில் அவர்களுக்கு எஸ்.எம்.எஸ் டைப் பண்ணித் தரலாம்.
* வேலை செய்யறேன்னு சொல்லிட்டு எப்பவும் ட்விட்டர், ஃபேஸ்புக்ல இருக்கும் ஐ.டி துறையினரைக் கண்காணித்து, அவர்கள் கங்காணியிடம் போட்டுக்கொடுத்து விடுவோம் என ப்ளாக் மெயில் செய்யலாம்.

- மேற்கூறிய ஐடியாக்கள் எல்லாம், தற்போது நான் எழுதிக்கொண்டிருக்கும் ‘அம்பானி ஆக ஆயிரம் வழி’ புத்தகத்திலிருந்து... வாங்கிப் படியுங்கள்! ‘ரஜினி வழி தனி வழி, அம்பானியாக ஆயிரம் வழி’!

தமிழ் கூறும் இந்த நல்லுலகில் ஒரு ஆணால் ஒரு பெண்ணை மிரட்ட முடியுதுன்னா, ஒரு ஆணால் ஒரு பெண்ணை திட்ட முடியுதுன்னா, ஒரு ஆணால் ஒரு பெண்ணை அவள் செய்த தவறுக்காக கண்டிக்க முடியுதுன்னா, ஒரு ஆணால் ஒரு பெண்ணை அரை மணி நேரத்துக்குள் செலவில்லாமல் சமாதானப்படுத்த முடியும்னா, ஒரு ஆணால் ஒரு பெண்ணை தான் சொல்லும் விஷயத்துக்கு தலையாட்ட வைக்க முடியும்னா,

ஒரு ஆணால் ஒரு பெண்ணுக்கு அரை மணிநேரம் இடைவிடாமல் அட்வைஸ் பண்ண முடியும்னா, ஒரு ஆணால் ஒரு பெண்ணுடன் - அந்தப் பெண் பேச்சுக்கிடையில் குறுக்கிடாமல் தொடர்ந்து பேச முடியும்னா, ஒரு ஆணால் ஒரு பெண்ணுக்கான ஆடையை, பயன்படுத்தும் பொருளை, தேவையான விஷயங்களை தேர்ந்தெடுக்க முடியும்னா...
அதுக்கு நிச்சயம் இரண்டு விஷயம்தான் காரணமா இருக்க முடியும். ஒண்ணு... அந்த ஆண், அந்தப் பெண்ணோட அப்பாவா இருக்கணும்; ரெண்டு... அந்தப் பொண்ணுக்கும் 5 வயசுக்குள்ள இருந்தாகணும்!

பள்ளிக்கூடத்துக்குப் போன பிறகு, வீடு பிரச்னையா தெரியல. பள்ளிக்கூடத்துல வாத்தியார பார்த்த பிறகு, பெத்த அப்பா பிரச்னையா தெரியல. பரீட்சைகளை பார்த்த பிறகு, பாடங்களும் வாத்தியாருமே பிரச்னையா தெரியல. காலேஜ் போன பிறகு, பள்ளிக்கூடமே பிரச்னையா தெரியல. டிகிரி வாங்கின பிறகு, காலேஜ் பிரச்னையா தெரியல. ஆபீஸ் போன பிறகு, படிப்பே பிரச்னையா தெரியல. கல்யாணம் பண்ணின பிறகு, ஆபீஸே பிரச்னையா தெரியல. பொண்டாட்டி வந்த பிறகு, பிரச்னைகளே பிரச்னையா தெரியல.

புள்ளை, குட்டிங்க பொறந்த பிறகு, பொண்டாட்டியே பிரச்னையா தெரியல.
ஒரு ஆம்பளை தான் பொறந்ததிலிருந்து எத்தனை பிரச்னைகளை தாண்டி வர்றான்! ஆனா, இந்தப் பொண்ணுங்களுக்குத்தான் எவ்வளவு ஜாலியான வாழ்க்கை! அவங்களுக்கு ஆம்பளைங்கள தவிர்த்து வேற என்ன பிரச்னை இருக்கு வாழ்க்கைல?

கட்டில்ல முட்டக் கொடுத்து விட்டத்தைப் பார்த்து யோசிச்சப்ப கொட்டின தத்துவங்கள்...

* பால் காய்ச்ச பால் இருந்தா போதும். ஆனா சாராயம் காய்ச்ச பேட்டரி, வாழைப்பழம், திராட்சை, தண்ணின்னு பல பொருட்கள் வேணும். இதான் வாழ்க்கை.
* பொண்ண கட்ட பொண்ணு இருந்தா போதும். ஆனா வீடு கட்ட செங்கல், சிமென்ட், மண்ணுன்னு பல வேணும். இதான் வாழ்க்கை.
* செடி வளர தண்ணி ஊத்துனா போதும். ஆனா, முடி வளர காசு செலவு பண்ணி எண்ணெய் தேய்க்கணும். இதான் வாழ்க்கை.
* மான் ஓட கரன்ட் தேவையில்ல. ஆனா, பேன் ஓட கரன்ட் வேணும். இப்படித்தான் இருக்கு வாழ்க்கை.
* தீப்பெட்டிய உரசினா தீ வரும். ஆனா, துணிப் பெட்டிய உரசுனா துணி வராது. அதான் வாழ்க்கை.
* பால் கார்டை வச்சு பால் வாங்கலாம். ஆனா, ஏ.டி.எம் கார்டை வச்சு ஏ.டி.எம் வாங்க முடியுமா? இப்படித்தான் வாழ்க்கையும்.
* வீட்டு சாவிய வீட்டுக்குள்ள வைப்போம். ஆனா, பைக் சாவிய பைக்குக்குள்ள வச்சுட்டுப் போறதில்ல. இப்படி கொடுமையானது வாழ்க்கை.

கதை...

‘‘மச்சான், உங்க ஊரு பைபாஸ் ரோட்டுல நிக்கிறேன், எப்படி உங்க வீட்டுக்கு வர்றது?’’

‘‘மாப்ள, அங்கன ஒரு ரவுண்டானா இருக்கா? அதுல லெப்ட்ல கட் பண்ணி நேரா வா, ஒரு கிலோ மீட்டர்ல ஒரு டாஸ்மாக் இருக்கும். அதுக்குப் பக்கத்துல ஒரு ரோடு போகும். அதுல நுழைஞ்சு அரை கிலோ மீட்டர் வந்தா மகாலட்சுமி ஐயங்கார் பேக்கரி இருக்கும். அதுக்கு ஆப்போசிட் ரோட்ல வந்தாக்கா, டெட் எண்ட்ல ஒரு ‘டி’ ஜங்ஷன் வரும். அதுல ரைட் எடுத்து வந்தா, ரோட்டுக்கு லெப்ட்ல ஒரு டாஸ்மாக் இருக்கும். அதை ஒட்டி ஒரு ரோடு போகும்.

அதுல 300 மீட்டர்ல கணபதி ஐயங்கார் பேக்கரின்னு ஒண்ணு இருக்கும். அதுல ரைட் எடுத்து நேரா எங்கயும் கட் பண்ணாம வந்தீன்னா, லெப்ட்ல ஒரு பெரிய பார் வச்ச டாஸ்மாக் இருக்கும். அதுக்கு ஆப்போசிட் ரோட்ல நுழைஞ்சா, உடனே அப்துல்லா ஐயங்கார் பேக்கரி வரும். அதுல லெப்ட் எடுத்து வந்து, செகண்ட் ரைட் எடுத்து, நேரா வந்துக்கிட்டே இரு.

இப்ப ஒரு டாஸ்மாக் லெஃப்ட் சைடுல வரும். அதுக்கு ஆப்போசிட் ரோட்டுல வந்தா அந்தோணி ஐயங்கார் பேக்கரி வரும். அங்க வந்துட்டு எனக்கு கால் பண்ணு.’’நீதி: கோயிலை வைத்தும், ஸ்கூல், காலேஜை வைத்தும் வழி சொன்னது அந்தக் காலம். டாஸ்மாக்கையும் ஐயங்கார் பேக்கரிகளையும் வைத்து வழி கண்டுபிடிப்பதே இந்தக் காலம்.

இந்த வார குட்டிச் செவுரு போஸ்டர் பாய்...

குண்டுகள் போட்டு குழந்தைகளையும் கொன்று, பாலஸ்தீனத்தை பாவஸ்தீனமாய் மாற்றிக்கொண்டிருக்கும்இஸ்ரேல் ராணுவம்!

ஆல்தோட்ட பூபதி