பயம்



‘வையாபுரி அந்தக் கதவை மெல்லத் திறந்து பார்த்தான். சத்தமில்லாமல் கதவு திறந்தது. உடனே வேகமாக மூடி விட்டான். மனசு படபடத்தது. அவன் கண் அருகே பணம் இருக்கும் இடம் தெரிந்தது. உள்ளே யாருமில்லை. ஆனாலும் தனி ஆளாக உள்ளே சென்று பணத் தை எடுத்து வர பயம்.தன்னுடன் இணைந்து தொழில் செய்யும் மணிக்கு போன் அடித்தான்.

‘‘டேய், உன்னை எப்ப கூப்பிட்டேன்? நீ வந்திருப்பேன்னு நானும் ஸ்பாட்டுக்கு வந்துட்டேன். நீ இப்படி சொதப்பறியே..?’’ - எரிந்து விழுந்தான். ‘‘ப்ளீஸ்டா வையாபுரி... நான் வந்துக்கிட்டே இருக்கேன். நீ பயப்படாதே. நான் வந்ததும் காரியத்தை முடிச்சுடலாம்!’’ கொஞ்சம் தைரியம் பிறந்தது வையாபுரிக்கு.

திடீரென தன்னை யாரோ ஃபாலோ செய்வது போல தெரிய திடுக்கிட்டு திரும்பி பார்த்தான். யாருமில்லை. நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.அதிக நேரம் அவனைக் காக்க வைக்காமல் மணி வந்தான். இப்போது வையாபுரிக்கு யானை பலம் வந்தது போல் இருந்தது. ‘‘இப்பவாச்சும் வந்தியே..!’’ என்று நண்பன் வருகைக்காக மகிழ்ந்து, அவனுடன் தைரியமாக அந்த ஏ.டி.எம்க்குள் போய் தன் கணக்கில் இருந்த சம்பளப் பணத்தை எடுக்க நுழைந்தான் வையாபுரி!