பேசும் சித்திரங்கள்!



தமிழ் ஸ்டுடியோ  16

பால்யம் தொலைத்த ஊழியம் ‘‘நிகழ்காலத்தில் தமிழ் இலக்கியங்களை விட, தமிழ் சினிமாவே நிறைய படிமங்களை உருவாக்குகிறது’’ என்று இயக்குனர் ஒருவர் அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் புதிய கதாபாத்திரங்களை, கதைமாந்தர்களை, புதிய படிமங்களை தமிழில் குறும்படங்கள்தான் தொடர்ச்சியாக உருவாக்கிக் கொண்டே இருக்கின்றன. குழந்தைகளின் கல்வித் தேவை குறித்து, தமிழ் இலக்கியமும், தமிழ் சினிமாவும் சிந்தித்ததை விட, தமிழ்க் குறும்படங்கள் நிறையவே சிந்தித்திருக்கின்றன. சமூகத்தின் புறக்கணிக்கப்பட்ட பக்கங்களில் வாழும் மனிதர்களின் குழந்தைகள் அடைய வேண்டிய கல்வி குறித்த கலகக்குரலாக வெடித்துக் கொண்டே இருக்கின்றன நிறைய குறும்படங்கள்.

கிராமங்களிலும் நகரங்களிலும் வறுமைக்கோட்டை எட்டிப் பிடிக்க முயன்றபடி வாழும் குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகள் கூட கல்வியறிவு புகட்டப்படாமல் குழந்தைத் தொழிலாளர்களாக களமிறக்கப்படுகிறார்கள். இந்த தேசத்தின் வலிமை குறித்தும், எதிர்காலம் குறித்தும் அரசியல் மேடைகளில் எழுப்பப்படும் வெற்று முழக்கங்கள் எவ்வளவு அபத்தமானவை என பள்ளிக்கூடங்களின் வாசலை மிதிக்காத இந்தக் குழந்தைகள் உச்சிமண்டையில் ஆணியடித்து சொல்கின்றன.

 பட்டாசுத் தொழிற்சாலைகள், ஜவுளிக்கடைகள், பணிமனைகள் எனப் பல்வேறு இடங்களில் சிக்கித் தவிக்கின்ற குழந்தைத் தொழிலாளர்களையும், பேருந்து நிலையங்களிலும், தெருவோரங்களிலும் தேசத்தின் திசையெங்கும் தினப்பாட்டிற்கே திண்டாடி பிச்சைக்காரர்களாகத் திரிகின்ற கோடிக்கணக்கான குழந்தைகளையும் பள்ளிகளை நோக்கி அழைத்து வருவது எத்தகைய பெரிய பணி!

‘‘இந்தப் பணி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே கல்வி உரிமைச் சட்டம் முழுமையடையும்’’ என முனைவர் ஆர்.இராமானுஜம் ஒருமுறை தெரிவித்திருந்தார். ஆனால், இருக்க இடம் இல்லாமல், நிலையான வருமானம் இல்லாமல், நாடோடிகளாகத் திரிபவர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி குறித்து எப்படி சிந்திப்பார்கள்? இவர்களின் கல்வித் தேவை குறித்தும், சைக்கிளில் சாகசம் செய்து பிழைக்கும் ஒரு விளிம்பு நிலை மனிதனை படிமமாகவும் தமிழில் குறும்படம்தான் முதன்முதலாகப் பதிவு செய்துள்ளது. சுப்பராஜின் ‘செடி’ குறும்படம், இவர்களின் கல்வித் தேவை குறித்தும், அதில் பெற்றோர்களின் பங்கு குறித்தும் சிந்திக்க வைக்கிறது.

சொந்த ஊர் இதுதான் என அடையாளம் ஏதுமில்லாமல், வசிப்பதற்கு நிலையான ஒரு இடமில்லாமல், கோவையிலிருந்து சென்னை மாநகரம் வந்து, சைக்கிளில் சாகசம் செய்து பிழைக்கும் மணி, சென்னையின் புறநகர்ப் பகுதி ஒன்றில் டென்ட் அடித்து தன்னுடைய மகள் வர்ஷாவுடன் வசித்து வருகிறான். அன்று மகளுக்கு உடல்நிலை சரியில்லாததால், நிலையான நாடோடியாகத் திரிந்துகொண்டிருக்கும் ஒரு பெரியவரைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, நகரத்தை நோக்கிக் கிளம்புகிறான். சாகசம் செய்யும் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது, சைக்கிளின் டியூபும் டயரும் வெடித்துவிடுகிறது.

அதனை சரிசெய்தால்தான் பிழைப்பு. தெரிந்த ஓரிரு நபர்களிடம் உதவி கேட்கிறான். யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. இதற்கிடையில் பெரும் மழை வரவே, கூடாரத்தை நோக்கிக் கிளம்புகிறான். அங்கே பெரியவர் குடித்துவிட்டு, போதையில் உளறிக் கொண்டிருக்கிறார். மகளைக் காணவில்லை. பதற்றத்தில் தவிப்போடு அங்கும் இங்கும் ஓடும் மணி, ஓரிடத்தில் மகளைக் கண்டடைகிறான். மழை விட்டதும், மகளுக்கு சாகசப் பயிற்சி அளிக்கிறான். ஒரு பெரிய குச்சியின் உச்சியில் நிற்க வைக்கும்போது, வர்ஷா தவறி கீழே விழுந்து விடுகிறாள்.

பயமும் இயலாமையும் அவனை ஆட் கொள்ள, வர்ஷாவை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்கிறான். தலையில் சி.டி. ஸ்கேன் எடுக்க பணம் கேட்கிறார் செவிலி. அந்தப் பணத்தைத் திரட்டுவதற்காக நகரம் நோக்கி வந்து, யாரோ ஒருவருடைய சைக்கிளைக் கேட்டு வாங்கி, உயிரைப் பணயம் வைத்து சாகசம் செய்கிறான். உணர்ச்சி வேகத்தில் அவன் செய்யும் சாகசங்கள், பார்வையாளர்களை மயிர் கூச்செரியச் செய்கின்றன. எல்லாரும் முடிந்தவரை பணம் கொடுக்கிறார்கள். தேவையான பணத்தை திரட்டிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைகிறான். அங்கே அடுத்தடுத்து நடக்கும் உரையாடலும், காட்சி விவரிப்புகளும் படத்தின் மையத்தை பார்வையாளனுக்கு அழகாக எடுத்துரைக்கிறது.

காட்சிபூர்வமாக குறும்படத்தில் சில இடங்கள் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. நகரிலிருந்து 15 கி.மீ. தாண்டி கூடாரம் அமைக்க, சைக்கிளில் மணி வேக வேகமாக வந்துகொண்டிருக்கும்போது, அவனது தலைக்குமேல் விமானம் மெதுவாக மேலேறிக்கொண்டிருக்கிறது. சமனில்லாத வளர்ச்சி யாருக்கும் உதவாது. ஒருபக்கம் உலகமயமாக்கலால் நகரத்தின் ஒருபகுதி மக்கள் உயர்ந்துகொண்டே இருக்கிறார்கள்; அதே உலகமயமாக்கலின் விளைவாக கிராம மக்களும், வாழ்விடம் கூட இல்லாமல் நாடோடிகளாகத் திரிபவர்களும் பொருளாதார ரீதியில் தாழ்ந்துகொண்டே இருக்கிறார்கள் என்பதைத்தான் இந்தக் காட்சியின் வாயிலாக உணர முடிகிறது.

ஒரு படத்திற்கு டப்பிங் என்று சொல்லப்படும் பின்னணிக் குரல் சேர்ப்பும், படத்தின் பின்னணி இசையும் மிக முக்கியமான கூறுகள். கதைமாந்தர்களின் மீதான நம்பகத்தன்மையை பின்னணிக் குரல் கொடுப்பவர்கள்தான் சில இடங்களில் தீர்மானிக்கிறார்கள். கதை சொல்லலின் சுவாரசியத்தை, திருப்பத்தை, தேவையை, சில இடங்களில் பின்னணி இசை தீர்மானிக்கிறது. பின்னணிக் குரல் சேர்ப்பும், பின்னணி இசையும் இந்தப் படத்தில் அந்த வேலையை சரியாகச் செய்யவில்லை. சில இடங்களில் படத்தின் இயல்புத் தன்மையோடு ஒன்ற முடியாமல் போவதற்கு மேற்சொன்ன இந்த இரண்டும் பெரும் காரணமாக அமைந்து விடுகிறது. தவிர திரைப்படங்களில் கேட்டுப் பழகிய குரல்களை மீண்டும் இப்படிப்பட்ட படங்களில் கேட்கும்போது, அந்தக் கதாபாத்திரங்கள் மீது ஒருவித அயர்ச்சி ஏற்படுவதையும் தவிர்க்க முடியவில்லை.

தமிழ் சினிமா அதன் எளிய மக்கள் பற்றி எவ்வித கவலையும் கொள்ளாமல், தொடர்ச்சியாக நகைச்சுவை, காதல், வன்முறை என பொழுதுபோக்கு எந்திரங்களாக மக்களை மாற்றும் வேலையை செய்துகொண்டிருக்கும்போது, அதற்கு மாற்றாக உருவாகி வரும் குறும்படங்கள், எளிய மக்கள் பற்றி புதுவிதமான படிமங்களை உருவாக்குவது வரவேற்கத்தக்க விஷயம்.

கழைக்கூத்தாடிகளின் வாழ்க்கையையும், அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கல்வியறிவு புகட்ட வேண்டியதன் அவசியத்தையும் இந்தக் குறும்படம் அழகாக விவரிக்கிறது. குறும்படத்தின் இயக்குனர் சுப்பராஜ், சைக்கிள் சாகசம் செய்யும் மணியாகவும் நடித்திருக்கிறார். பயிற்சி எடுத்துக்கொண்டு, அவரே சைக்கிளில் சாகசமும் செய்கிறார். எவ்வித வியாபார நோக்கமும் இல்லாமல் எடுக்கப்படும் குறும்படத்திற்காக இத்தனை உழைக்கும் சாதாரண மனிதர்களே, அந்தப் படைப்பின் வெற்றிவழியாக, உன்னதமான கலைஞர்களாக மாறிவிடுகிறார்கள்.

இருக்க இடம் இல்லாமல், நிலையான வருமானம் இல்லாமல், நாடோடிகளாகத் திரிபவர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி குறித்து எப்படி சிந்திப்பார்கள்?

படம்: செடி
இயக்கம்: சுப்பராஜ் ஏ.ஆர்.
நேரம்: 15.01 நிமிடங்கள்
ஒளிப்பதிவு: எல்.கே.கீர்த்தி பாசு
ஒலி: பாண்டியன் கே.என்.
படத்தொகுப்பு: பொன் குமார்,
குட்டி குமார்
பார்க்க: www.youtube.com/watch?v=zveRNoViR04

திரைப்படங்களில் டப்பிங் கலைஞராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கியவர், இந்தக் குறும்படத்தின் இயக்குனர் சுப்பராஜ். குறும்படங்களின் வாயிலாக, மக்களுக்குத் தேவையான படைப்புகளை உருவாக்க நினைத்திருக்கிறார். புதுவிதமான மனிதர்களையும், கதைமாந்தர்களையும் அறிமுகம் செய்யும் பொருட்டு, கதைக் களனைத் தேடிக் கொண்டிருந்தார். அப்போதுதான், சைக்கிளில் சாகசம் செய்பவர்களின் வாழ்க்கையைப் பார்த்திருக்கிறார். வெறுமனே அவர்களின் சாகச வாழ்வையும், அதில் நிறைந்திருக்கும் அவலத்தையும் சொல்லாமல், அவர்கள் தங்களின் சந்ததிகளுக்கு செய்ய வேண்டிய மிகப் பெரிய கடமை என்ன என்பதைத் தேடியிருக்கிறார்.

குழந்தைகளுக்கு கல்வியறிவு புகட்ட வேண்டியதன் அவசியத்தை தன்னுடைய படைப்பின் வாயிலாக அவர் பதிவு செய்திருக்கிறார். கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாக போராடியும், கழைக்கூத்தாடிகளுக்கு என்று சொந்தமாக ஒரு இடம் இல்லாமல் இருப்பதும், தாங்கள் என்ன சாதிப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள இன்று வரை அவர்கள் போராடி வருவதும், சுப்பராஜை இந்தக் கதைக்களத்தை நோக்கி ஈர்த்திருக்கிறது. கதையின் மாந்தர்கள் மீது உண்மையான பரிவோடு இருப்பதும் நல்ல கலைஞனின் வேலைதானே.

(சித்திரங்கள் பேசும்...)
ஓவியம்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி