சகுனியின் தாயம்



‘‘நீங்க சொன்னது சரிதான் தோழர். கலப்பு மணத்துக்கும் கொழந்தைகளோட சாவுக்கும் தொடர்பு இருக்கிறா மாதிரிதான் தெரியுது...’’ கதிரை பார்த்தபடி ரங்கராஜன் சொன்னான்.
‘‘சாரி! எனக்கு அப்படித் தெரியலை...’’ - செருப்பைக் கழற்றிவிட்டு கதிரின் வீட்டுக்குள் நுழைந்தாள் தேன்மொழி. இறந்துபோன நான்கு குழந்தைகளின் இல்லங்களுக்கும் சென்றுவிட்டு அப்போதுதான் திரும்பியிருந்தார்கள். ஒவ்வொரு வீட்டிலும் ஒலித்த மரண ஓலம் அவர்கள் மூவரையும் உலுக்கியிருந்தது.

‘‘எதை வச்சு இந்த முடிவுக்கு வந்தீங்க?’’ கதிரின் குரலில் ஆவேசம் தெரிந்தது. ‘‘இதே கேள்வியை நானும் கேட்கலாம். அரசாங்கத்தை எதிர்க்கணும். இது உங்க அஜென்டா. அதுக்காக சகட்டுமேனிக்கு எல்லாத்திலும் குற்றம் கண்டுபிடிக்கக் கூடாது...’’‘‘அப்ப தடுப்பூசிகள்ல எந்தப் பிரச்னையும் இல்லைன்னு சொல்றீங்களா?’’

‘‘ஆமா. ஆரம்ப சுகாதார நிலையத்துல பணிபுரியறவ நான். உங்களைவிட எனக்கு இதைப் பத்தி நல்லாவே தெரியும்...’’‘‘என்ன தெரியும்?’’ - ரங்கராஜன் நிதானமாகக் கேட்டான். ‘‘தடுப்பூசிகள் பத்தி...’’ - சற்றும் சளைக்காமல் தேன்மொழி பதிலளித்தாள்.‘‘அப்ப சரி. இதுக்கு பதில் சொல்லுங்க. அமெரிக்காவுல தடுப்பூசிகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளோட பெற்றோர்கள் ஏன் வழக்குத் தொடர்ந்தாங்க? இதுக்காகவே ஏன் அங்க தனியா   ஹி.ஷி. க்ஷிணீநீநீவீஸீமீ சிஷீuக்ஷீt   தொடங்கினாங்க?’’

தேன்மொழி பதில் சொல்ல முயன்றாள். கையை உயர்த்தி அவளைத் தடுத்துவிட்டு, ‘‘இன்னொரு கேள்வியும் கேட்டுடறேன். ‘தடுப்பூசிகளால் ஒருநாள் ரத்த ஆறு ஓடும். நாளைய டாக்டர்கள் ஒரு நன்மையும் இல்லாத விஷத்தை நம்முடைய பிஞ்சுக் குழந்தைகளின் உடலில் ஏற்றி 21ம் நூற்றாண்டு வரை ஏன் கொண்டு சென்றோம் என்று புலம்புவார்கள்...’ இப்படி தடுப்பூசி ஆராய்ச்சியாளர் டாக்டர். டெட் கோரன் ஏன் எழுதியிருக்கார்?’’

தேன்மொழி தடுமாறினாள்.‘‘வெளிநாட்டு உதாரணங்களை விட்டுடுவோம். உள்நாட்டு எடுத்துக்காட்டுக்கே வருவோம். கல்பாக்கத்தை சேர்ந்த டாக்டர் புகழேந்தியை உங்களுக்குத் தெரியும். அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கார்...’’ சொன்ன ரங்கராஜன், தன் பையிலிருந்து ஒரு பைலை எடுத்தான். ‘‘எந்தத் தடுப்பு மருந்தும் ஒவ்வாமை காரணமாக இறப்பு உள்ளிட்ட பின்விளைவுகளை ஏற்படுத்த முடியும். அமெரிக்காவில் திம்மர்சால் வேதிப்பொருள் கலந்த தடுப்பூசிகள் தடை செய்யப்பட்டுள்ளன.

ஆனால், இந்தியாவில் தொடர்ந்து அவை புழக்கத்தில் உள்ளது பற்றி அரசோ, மருத்துவர்களோ பேசுவதில்லை. தடுப்பூசி மருந்தில் கலப்படம் ஏற்பட்டாலோ அல்லது மருந்தின் திறனைக் காப்பதற்காகச் சேர்க்கப்படும் (Preservatives) வேதிப் பொருட்கள் வினை புரிந்தாலோ இறப்பு நிகழும் அபாயம் இருந்து கொண்டே இருக்கிறது. இதை மருத்துவர்களும் பத்திரிகைகளும் வெளியிடுவதில்லை...’’

படித்து முடித்தவன் மீண்டும் அந்த பைலை தன் பைக்குள் வைத்துவிட்டு நிமிர்ந்தான். ‘‘இதைப் பத்தி என்ன நினைக்கறீங்க?’’‘‘இதெல்லாம் பழைய சம்பவங்கள்...’’‘‘அதாவது இப்ப எல்லாமே சரியா இருக்குன்னு சொல்றீங்க?’’‘‘ஆமா. இந்தியாவுல, குறிப்பா தமிழகத்துல இன்னிக்கி போலியோ பாதிப்பு இல்லை. தட்டம்மையும் அப்படித்தான். இதையெல்லாம் சாதிச்சது தடுப்பூசிகள்தான். இதை உங்களால மறுக்க முடியுமா?’’‘‘மறுக்கறதா யார் சொன்னாங்க?’’
‘‘ரங்கராஜன், நீங்க என்ன சொல்ல வர்றீங்க?’’

‘‘உண்மையை உங்களுக்குப் புரிய வைக்க முயற்சி பண்ணறேன். தடுப்பூசிகளோட நோக்கம் சரியானது. மனித குலத்துக்கு அது அவசியமானது. ஆனா...’’
‘‘ஆனா?’’‘‘அதை வச்சுக்கிட்டு பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் மக்களோட விளையாடறதைத்தான் ஏற்க முடியாதுன்னு சொல்றேன். 1980கள்ல குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசிகளோட எண்ணிக்கை பத்து. அதுவே 2008ல முப்பத்தியாறா உயர்ந்திருக்கு. வெயிட்... வெயிட்... வெயிட்...

இந்த புள்ளிவிபரம் இந்தியாவை சேர்ந்தது இல்லை. அமெரிக்காவுல நடைமுறைல இருக்கிற விஷயம். உலக நாடுகள் எல்லாமே அமெரிக்காவையும், இங்கிலாந்தையும்தான் எல்லா விஷயங்கள்லயும் பின்பற்றி வருது. அதனாலதான் இதைக் குறிப்பிட்டு சொல்ல வேண்டியிருக்கு. நினைச்சுப் பாருங்க. 28 வருடங்கள்ல அவ்வளவு நோய்க்கு தடுப்பு மருந்து போட வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது?’’

தேன்மொழி அமைதியாக இருந்தாள். ஏனெனில் அவள் மனதிலும் இதே கேள்விதான் வேலைக்கு சேர்ந்தது முதல் அலைபாய்ந்து கொண்டிருக்கிறது.‘‘போலியோ பத்தி சொன்னீங்க. அதுலயும் ஊழல் நடந்திருக்குன்னு உங்களுக்கு தெரியுமா?’’ இடையில் புகுந்த கதிர், தன் புத்தக அலமாரிக்கு சென்று சில பேப்பர் கட்டிங்ஸை கொண்டு வந்தான். ‘‘ஜூலை 28, 2007ல ‘தெஹல்கா’ ஆங்கில பத்திரிகைல ஒரு கட்டுரை வந்திருக்கு. உத்தரப் பிரதேச மாநிலத்துல கொடுக்கப்பட்ட போலியோ தடுப்பு மருந்துல வழக்கமானதை விட ஐந்து மடங்கு வீரியமுள்ள மருந்து இருந்ததாம்.

அதாவது மக்கள்கிட்ட சம்மதம் பெறாமலேயே இதை அவங்க மேல பரிசோதிச்சிருக்காங்க. இதை இந்திய மருத்துவக் கழகத்தின் தடுப்பு மருந்துப் பிரிவின் தலைவர் டாக்டர். ஜேக்கப் புலியேல் ஆமோதிச்சிருக்கார். 2008, ஜூலை 11 அன்னிக்கி ‘The Hindu’ ஆங்கில நாளிதழ்ல உ.பி. சம்பவம் தொடர்பா ‘Politics of Polio’ அப்படீன்னு ஒரு கட்டுரை எழுதியிருக்கார்.

அதுல 2006ம் ஆண்டு மட்டும் போலியோ சொட்டு மருந்து கொடுத்தும் நம்ம நாட்டுல ஆயிரத்து 600 பேருக்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டிருக்கறதாவும், இருபத்தேழாயிரம் பேர் பாதிக்கப்படலாம்னும் கவலை தெரிவிச்சிருக்கார். கூடவே இந்தியச் சூழலுக்குப் போலியோ சொட்டு மருந்து சரிப்பட்டு வராதுன்னு சொன்ன ‘உலக சுகாதார மையம்’ ஏன் திடீர்னு போலியோ முகாமுக்கு பரிந்துரை செய்யுதுன்னு கேட்டிருக்கார்...’’

‘‘புரியுதா தேன்மொழி...’’ என்றபடி அருகில் வந்தான் ரங்கராஜன். ‘‘இன்னி தேதில மருத்துவ சேவை என்பது தொழில் இல்லை. அது பிசினஸ். பணம் காய்க்கிற மரம். தடுப்பூசிகள் மூலமா நடக்கிற வியாபாரம் அதுல ஒரு அங்கம்...’’‘‘ஆனா, இதுக்கும் இந்தக் கிராமத்துல ஐந்து குழந்தைகள் இறந்ததுக்கும் என்ன தொடர்பிருக்கு? இதை எப்படி கலப்பு மணத்தோட தொடர்பு படுத்தறீங்க?’’ தேன்மொழி படபடத்தாள்.‘‘சொல்றேன்...’’ என்று ரங்கராஜன் விளக்கத் தொடங்கிய அதே நிமிடம் -திருப்பதி மலையிலிருந்து இளவரசனும், திவ்யாவும் தங்கள் குழந்தையோடு ஸ்காட் வில்லியம்ஸின் காரில் இறங்கிக் கொண்டிருந்தனர்.‘‘மலையடிவாரத்துல நாங்க இறங்கிக்கறோம் சார்...’’

‘‘எதுக்கு இளவரசன்? உங்க கிராமத்துலயே உங்களை இறக்கிடறேன்...’’‘‘அச்சோ... எதுக்கு சார் உங்களுக்கு சிரமம்...’’‘‘இதுல என்ன சிரமம்? உங்க கிராமத்துல நிறைய பேரு லவ் மேரேஜ் செய்துக்கிட்டதா சொன்னீங்க இல்லையா? அவங்க எல்லாரையும் பார்த்து பேசணும்னு நினைக்கறேன். பை தி வே, திவ்யா... அதுதானே உங்க பேரு?’’
‘‘ஆ...மா...’’ திவ்யா தடுமாறினாள்.

‘‘இளவரசனை முதன்முதல்ல எங்க சந்திச்சீங்க... உங்க ரெண்டு பேருக்கும் எப்படி காதல் மலர்ந்தது... திருமணம் எங்க நடந்ததுன்னு கொஞ்சம் சொல்லுங்க. ஒரு ஆர்ட்டிகிள் எழுத உதவும்...’’

வெட்கத்துடன் தங்கள் காதலையும், அது திருமணத்தில் முடிந்ததையும் அவள் சொல்லத் தொடங்கிய அதே நேரம் -முழங்கை அளவுக்கு கொம்புகளைக் கொண்ட பெரிய ஆடு ஒன்று அவர்கள் காருக்கு குறுக்கே வந்து வழிமறித்தது. ‘‘என்னது, காந்தாரி விதவையா? இதை மறைத்துத்தான் காந்தார அரசர் சுபாலன் தன் மகளை திருதராஷ்டிரனுக்கு மணமுடித்து வைத்தாரா...?’’ - பீஷ்மர் கர்ஜித்தார்.

ஆம், இடியென முழங்கினார். அப்படித்தான் சிறையில் இருந்தபோது சகுனி கேள்விப்பட்டார். இதனை அடுத்து நடந்த சம்பவங்களும் அவர் கைதாகி இருந்தபோது அறிந்தது தான்.
‘‘இந்த விஷயம் வெளியே தெரிந்தால் நமது குலத்தைப் பற்றி என்ன நினைப்பார்கள்? கைம்பெண்ணை மணந்தவன்தான் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறான் என கேலி செய்ய மாட்டார்களா? இந்த விவரம் வெளியே பரவாமல் தடுக்க வேண்டும். அதே சமயம் நம்மை ஏமாற்றிய சுபாலனுக்கும் தக்க பாடம் கற்பிக்க வேண்டும்.

யாரங்கே... உடனே படைத்தலைவரை அழைத்து வாருங்கள்...’’சில கணங்களுக்கு பின் வந்து நின்ற படைத்தலைவரிடம் மடமடவென்று கட்டளையிட்டார். ‘‘உடனே படைவீரர்களுடன் காந்தார நாட்டுக்கு செல். நெருங்கின சொந்தம் முதல் தூரத்து உறவு வரை மன்னர் குடும்பத்தை சேர்ந்த அனைவரையும் கைது செய். பிறந்த குழந்தையாகவே இருந்தாலும் பாவம் பார்க்காதே. போ. காதும் காதும் வைத்ததுபோல் அனைவரையும் சங்கிலியால் பிணைத்து அழைத்து வா...’’

பீஷ்மரின் கட்டளைக்கு படைத்தளபதி அடிபணிந்தான். இரவோடு இரவாக காந்தார தேசத்துக்குள் நுழைந்தவன், அரண்மனையில் இருந்த சகலரையும் கத்தி முனையில் மிரட்டி மூடு பல்லக்கில் ஏற்றினான். தப்பித்துச் செல்ல முயன்றவர்களை தயவு தாட்சண்யம் பார்க்காமல் கொன்றான். பீஷ்மரின் பிரதிநிதி ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.இந்த விஷயம் எதுவும் காந்தார தேச மக்களுக்குத் தெரியாது. குடும்பத்தினருடன் தன் மகள் வீட்டுக்கு தங்கள் அரசர் சென்றிருப்பதாகவே நம்பினார்கள். அஸ்தினாபுரத்துக்கு வந்த சுபாலனையும் அவர் குடும்பத்தையும் சிறைச்சாலைதான் வரவேற்றது. அங்கு அவர்கள் அனுபவித்த கொடுமைகள் இருக்கிறதே...

தன் மடியில் படுத்திருந்த துரியோதனனின் தலையை கோதியபடியே தன் காலை சகுனி பார்த்தார். நன்றாக இருந்த கால்கள் முடமானதும் அஸ்தினாபுர சிறையில்தான். மட்டுமல்ல, கௌரவர்களையும், பாண்டவர்களையும் அடியோடு அழித்து பீஷ்மரின் வம்சமே தழைக்கக் கூடாது என சபதம் செய்ததும், அதற்காகவே தொடை எலும்பிலிருந்து தாயக்கட்டையை உருவாக்கியதும் அதே சிறையில்தான்.

காந்தாரியின் முதல் திருமணத்தையும்... தாலி கட்டி முடித்ததுமே கணவனாக மணவறையில் அமர்ந்திருந்தவன் வெட்டுப்பட்டதையும் நினைத்துப் பார்த்தார்.சகுனியின் ரத்தம் கொதித்தது. முழங்கை அளவுக்கு கொம்புகளைக் கொண்ட பெரிய ஆடு ஒன்று அவர் மனக்கண்ணில் தோன்றியது. தன் கையிலிருந்த தாயத்தை உருட்டத் தொடங்கினார்...‘‘சகுனியோட தாயத்தை வெல்லும் சக்தி எதுன்னு உனக்குத் தெரியணுமா மகேஷ்?’’ விக்கிரமாதித்த மகாராஜா கேட்டார்.‘‘ஆமா...’’

பதுமைகளாக கண்கள் வரை மாறியிருந்த ஸ்பைடர் மேனும் ஹாரி பார்ட்டரும் கூட, தான் சொல்லப் போகும் உண்மைக்காக காத்திருப்பதை புரிந்து கொண்ட விக்கிரமாதித்த மகாராஜா புன்னகைத்தார். ‘‘இந்த உண்மையை நான் சொல்லணும்னா நீ ஒரு காரியம் பண்ணணும்...’’‘‘என்னன்னு சொல்லுங்க ராஜா...’’ மகேஷ் படபடத்தான்.‘‘ஒரு ஆட்டோட நீ சண்டை போடணும்...’’
‘‘ஆடா?’’

‘‘ஆமா. அதோ அங்க இருக்கு பாரு...’’ ராஜா சுட்டிக் காட்டிய இடத்தில் ஒரு ஆடு கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. கொம்புகள் முழங்கை அளவுக்கு வளர்ந்திருந்தன.  ‘‘இது எப்ப இங்க வந்தது?’’‘‘அந்தக் கேள்வி உனக்கு எதுக்கு மகேஷ். போ. அந்த ஆட்டை ஜெயிச்சுட்டு வா...’’மகேஷ் தயக்கத்துடன் விக்கிரமாதித்த மகாராஜாவை ஏறிட்டான். அவர் சிரிப்புடன் நின்றிருந்தார்.

தலையை உலுக்கியபடி அந்த ஆட்டை நோக்கிச் சென்றான். ஆனால் -ஆட்டை நெருங்க முடியவில்லை. அருகில் சென்றதுமே எதன் மீதோ ‘டொம்’ என மோதிக் கொண்டான். தலை வலித்தது.‘‘அது கண்ணாடி சுவர். நீ இந்தப் பக்கம் நிக்கற. ஆடு அந்தப் பக்கம் இருக்கு...’’ வேதாளம் பதிலளித்தது.‘‘ஆனா, எந்தச் சுவரும் தெரியலையே...’’

‘‘புறக் கண்களுக்கு தெரியாது. ஏன்னா, அது மாயச் சுவர்...’’‘‘ஆஹா... இப்படியிருந்தா அந்த ஆட்டோட நான் எப்படி சண்டை போடறது?’’‘‘அது உன்னோட கவலை. ஆனா, ஆட்டை ஜெயிச்சாதான் சகுனியோட தாயத்தை எப்படி வெல்வதுன்னு விக்கிரமாதித்த மகாராஜா உனக்கு சொல்வார்...’’மகேஷ் யோசிக்கத் தொடங்கினான்.

‘‘உடனே இளமாறன் செல்லும் தேரைச் சுற்றி வளையுங்கள்...’’ என்று சோழ மன்னர் பெருநற்கிள்ளி கட்டளையிடவும் -ரதத்தில் இருந்த யவன ராணி விநோதமான ஒலியொன்றை எழுப்பி முடிக்கவும் சரியாக இருந்தது. அடுத்த கணம் எங்கிருந்தோ புறப்பட்டு வந்த ஆட்டு மந்தை அந்த மைதானத்துக்குள் நுழைந்து, வீரர்களுக்கு இடையில் சர்வசாதாரணமாக புகுந்தது. இதனால் சோழ வீரர்களின் வேகம் தடைப்பட்டது. 

இதைப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்த இளமாறன், ராணியின் செவியில் எதையோ முணுமுணுத்துவிட்டு தேரின் கடிவாளத்தை அவளிடம் ஒப்படைத்தான். புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக தலையசைத்த ராணி, கோட்டை மதிற்சுவர் பக்கம் ரதத்தைத் திருப்பினாள். வாளை உருவியபடி தேர் மீது கால் வைத்த இளமாறன் ஒரே தாவலில் கோட்டையின் மேல் பக்கம் சென்றான். அங்கிருந்த வீரர்களுடன் வாட்போர் புரிய ஆரம்பித்தான்.

அதே சமயம் ஓடும் ரதத்திலிருந்து தரையில் குதித்த ராணி, ஆட்டு மந்தைகளுக்கு இடையில் மறைந்தாள். முழங்கை அளவுக்கு கொம்புகளைக் கொண்ட பெரிய ஆடு ஒன்று முழுமையாக அவளை மறைத்தது.

‘‘எதிரி சரியான கோழை...’’
‘‘எப்படிச் சொல்கிறீர்கள் மன்னா?’’
‘‘என்னுடைய முதுகுக்குப் பின்னால் எவ்வளவு வேகமாக ஓடி வருகிறான் பார்...’’

‘‘அந்த தாதாவிடம் உனக்கு மட்டும் எப்படி உடனே வேலை கெடச்சுது?’’
‘‘உங்களுக்கு உருட்டுக் கட்டையா உழைப்பேன்னு சொன்னேன். உடனே வேலை கொடுத்துட்டாரு!’’

‘‘டாக்டர் ஒரு மணி நேரமா பேஷன்ட்டைப் பார்க்கிறார்...’’
‘‘ஏன் அப்படி?’’‘‘பேஷன்ட் யாராச்சும் வராங்களான்னு எதிர்பார்க்கிறார்...’’
- என்.பர்வதவர்த்தினி, சென்னை-75.

(தொடரும்)

கே.என்.சிவராமன்