சைலன்ட் மம்முட்டி மகன்... சடசடக்கும் நஸ்ரியா!



இயக்குனர் பாலாஜி மோகன்

டைட்டிலுக்காக தலையைப் பிய்த்துக்கொண்டிருக்கும் இயக்குனர்களுக்கு மத்தியில், தலைப்பிலேயே கவர்ந்திழுக்கும் தந்திரம் தெரிந்தவர் பாலாஜிமோகன். ‘காதலில் சொதப்புவது எப்படி?’ படத்தைத் தொடர்ந்து இவர் இயக்கும் படம், ‘வாயை மூடிப் பேசவும்’. இறுதிக்கட்ட பணியில் இருந்தவரிடம், ‘‘கொஞ்சம் வாயைத் திறந்து  பேசலாமா?’’ என்றோம். கலகலவென நேரம் ஒதுக்கி வந்தமர்ந்தார்...

‘‘தொடர்ந்து முரணான தலைப்புகளையே வைக்கிறீங்களே..?’’‘‘முரண்பாடு இல்லாத விஷயங்களே இல்லை. முரண்பாடு இல்லாமல் உலகம் ஒரு நாளும் இயங் காது. ‘வாயை மூடி பேசுறதா... அதெப்படி?’ன்னு உங்களுக்குள் எழும் கேள்வியே ஒரு எதிர்பார் ப்பை ஏற்படுத்துதுதானே? அதுதான் இந்த டைட்டிலோட சக்ஸஸ். தவிர, கதைக்கும் தலைப்புக்கும் சம்பந்தமும் இருக்கு. நாம் பேசும் வார்த்தைகள் சில சமயங்களில் தவறா சித்தரிக்கப்பட்டு, புரிந்துகொள்ளப்பட்டு, அது பெரிய விளைவுகளைக் கொண்டு வந்துடும்.

தவறாகப் பேசுவதால், பேசாமல் இருப்பதால் அல்லது அதிகம் பேசுவதால் என்னென்ன வம்புகள் வரும்? அதை வெவ்வேறு கேரக்டர்கள் மூலம் சுவாரஸ்யமா அலசுற கதை இது. இதை சீரியஸாவோ இறுக்கமாவோ இல்லாம தினம் தினம் வாழ்க்கையில் பிரதிபலிக்கிற விஷயங்களா பதிவு செய்திருக்கிறேன்.’’‘‘ஹீரோ துல்கர் எப்படி?’’

‘‘தமிழில் அவருக்கு இது முதல் படம். மம்முட்டியின் மகன் என்பதைத் தாண்டி மலையாளத்தில் தன் திறமையை நிரூபிச்சவர். கேரளாவில் அவருக்குன்னு ஒரு ரசிகர் கூட்டம் இருக்கு. நல்ல ஸ்கிரிப்ட் அமைஞ்சா மட்டுமே தமிழில் அறிமுகமாகணும்னு காத்திருந்த துல்கர், இந்தக் கதையில் நடிக்க சம்மதித்ததில் சந்தோஷம். படத்தில் அவர் விற்பனைப் பிரதிநிதியா வர்றார். யாருக்காவது ஏதாவது பிரச்னைன்னா உடனே அதுக்குத் தீர்வு தேடற கேரக்டர். நஸ்ரியா டாக்டரா வர்றாங்க. ஹீரோவுக்கு பேச்சு தான் பலமே.

ஹீரோயினோ நேர் எதிர் கேரக்டர். தலையே போற பிரச்னையா இருந்தாலும் அமைதியா அடுத்த வேலையைப் பார்க்கப் போயிடுவாங்க. இவங்களுக்குள்ள கெமிஸ்ட்ரி எப்படி பாஸ் மார்க் வாங்குதுன்னு சொல்றோம். நிஜ வாழ்க்கையில் நஸ்ரியா மூச்சுக்கு முந்நூறு வார்த்தை பேசிக்கிட்டே இருக்குறவங்க. துல்கர் ரொம்ப அளந்து பேசுறவர். அதனாலேயே ரெண்டு பேருக்கும் இந்த கேரக் டர் சவாலா அமைஞ்சது.

பனிமலை என்கிற ஊர்தான் கதைக்களம். அந்த ஊர்ல திடீர்னு ஒரு நோய் பரவுது. இந்த நோயால் பாதிக்கப்பட்டா, குரல் போயிடும். அப்படி ஒரு சூழ்நிலைதான் துல்கரையும் நஸ்ரியாவையும் இணைக்குது. ‘அப்புறமென்ன... காதலும் டூயட்டும்தானே!’ன்னு சராசரி படங்களின் சாயலில் இந்தப் படத்தை எதிர்பார்க்க முடியாது. அரசியல், சமுதாயப் பிரச்னை, காமெடி எல்லாம் கலந்த ஒரு கதையா இது இருக்கும்.’’
‘‘ரொம்ப நாள் கழித்து
மதுபாலா..?’’

‘‘படத்தில் துணிச்சல் மிகுந்த பத்திரிகையாளரா அவங்க வர்றாங்க. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிப்பதால், அழுத்தமான கேரக்டரா இருக்கணும் என்பது மதுபாலாவின் விருப்பம். அந்த விருப்பத்தை நூறு சதவீதம் பூர்த்தி செய்திருக்கு இந்தக் கேரக்டர். கதையை எழுதும்போதே என்னை அறியாமல், இந்தக் கேரக்டருக்கு மதுபாலா நடிச்சா நல்லாயிருக்கும்னு தோணிச்சு. அவங்களை மைண்ட்ல வச்சுக்கிட்டு உருவாக்கின கேரக்டர். எதிர்பார்த்ததை விடவும் பிரமாதமா வந்திருக்கு.’’
‘‘முதல் படம் மெகா ஹிட்டடித்தும் பெரிய ஸ்டார்களைத் தேடிப் போகாதது ஏன்?’’

‘‘எனக்கும் ஆசை இருக்கு... கதை அமையணுமே! இந்தப் படத்தோட கதை பெரிய ஸ்டார்களைக் கேட்கலை. பட், துல்கரும் பெரிய ஸ்டார்தான். கேரளா பக்கம் போன £ல், டிராஃபிக் சிக்னலில் கூட அவர் கார் கண்ணாடியை இறக்க முடியாது. ஆட்டோகிராஃப் வாங்க கூட்டம் அலைமோதும். எந்தக் கேரக்டருக்குள்ளும் தன்னைப் பொருத்திக் கொள்ளக்கூடிய திறமைசாலி. தமிழிலும் அவருக்குப் பெரிய இடம் கிடைக்கும்னு நம்புறேன்.

சினிமாவில் இதுதான் என்னோட இலக்குன்னு பெருசா எதையும் நிர்ணச்சுக்கிட்டு அதை நோக்கி ஓடுற பழக்கம் எனக்கில்லை. இன்னைக்கு இதுதான் டார்கெட்னு நினைத்தால், நாளைக்கு வேறொரு டார்கெட் முளைக்கும். எனவே, அந்தந்த நாளுக்கான வேலையில் மட்டும் கவனம் எடுத்துக்கறேன்!’’ ‘‘அடுத்து தனுஷ் படத்தை இயக்குறீங்களா?’’

‘‘ஆமாம். கதையெல்லாம் கேட்டு ஓகே சொல்லிட்டார். கூடிய சீக்கிரம் எப்போ ஷூட்டிங் போறோம் என்பது முடிவாகிடும். என்னோட முந்தைய படங்களில் பார்க்காத ஒரு சாயலும் வித்தியாசமும் இந்தப் படத்தில் இருக்கும். ஆக்ஷனும் இருக்கும். தனுஷ் ஜோடியா காஜல் அகர்வால் நடிக்கிறாங்க. தனுஷ் எனக்குப் பிடித்த நடிகர். எந்தக் கேரக்டராக இருந்தாலும் இயல்பை விட்டு விலகாத நடிப்பைக் கொடுக்கக் கூடியவர். அவரை இயக்க பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கேன்.’’

 அமலன்