கலைஞருடன் ஒரு நாள்



இருளில் தவிக்கிறது தமிழ்நாடு!

காலை 10 மணி. வாகனங்களின் அணிவகுப்பால் திருச்சி சங்கம் ஓட்டல் வளாகம் திணறுகிறது. குடும்பம் குடும்பமாக குவிந்து கொண்டே இருக்கும் உடன்பிறப்புகளின் முகத்தில் அதீத உற்சாகம்.

உள்ளே, கலைஞர். ஒரு இளைஞனுக்குரிய உத்வேகத்தோடு அன்றைய பிரசாரத்துக்கான தயாரிப்புகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். அவர் நினைவில் வைத்துக் கேட்கும் செய்தித்தாள்களையும், ஆவணங்களையும் பரபரப்பாக திரட்டிக்கொண்டிருக்கிறார்கள் உதவியாளர்கள். இடையிடையே கட்சி முன்னணியினரோடு விவாதங்கள்... பிற பகுதிகளின் நிலவரம் பற்றிய விசாரித்தல்கள்... சந்திப்புகள்... கலைஞரின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது.

கலைஞரின் பிரசாரமும், வேகமும் நாடாளுமன்றத் தேர்தல் களத்தின் போக்கை மாற்றிப் போட்டிருப்பது உண்மை. செல்லுமிடங்களில் குவியும் மக்களின் உணர்ச்சியே அதற்கு சாட்சி. அவரின் முகம் கண்டு இளைஞர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். ஒவ்வொரு வார்த்தைக்கும் மனம் கொடுத்து மயங்கி நிற்கிறார்கள். வெற்று விமர்சனமாக இல்லாமல், இடையிடையே கட்சியின் அடிப்படைக் கோட்பாடுகளைப் பயிற்றுவிப்பதும், முன்னோடிகளது வரலாற்றின் ஊடாக, உணர்ச்சி வேகத்தில் எல்லை மீறும் இளைஞர்களுக்கு கட்டுப்பாட்டைப் போதிப்பதுமாக மிகப் பொறுப்
புணர்வோடு இந்த பிரசாரத்தை முன்னெடுத்திருக்கிறார் கலைஞர். 

ஏப்ரல் 5ம் தேதி தொடங்கிய பயணம். அவினாசி, திருப்பூர், ஈரோடு, சேலம், சென்னை, தஞ்சை, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருவாரூர், திருச்சி, மதுரை என ஏப்ரல் 13ம் தேதிக்குள் தமிழகத்தின் முக்கால் பாகத்தை கடந்திருக்கிறார் கலைஞர். நாளொன்றுக்கு 3 முதல் 5 கூட்டங்கள். நிறைவாக ஒரு பொதுக்கூட்டம். இதுதான் கலைஞரின் பிரசாரத் திட்டம். எப்போதும் போலவே இப்போதும் பேச்சுக்கான மெனக்கெடல்கள், ஆழ்ந்த தயாரித்தல்கள், கோர்வையான தகவல் சேகரிப்புகள்...

இந்த பிரமாண்ட உழைப்புதான் கட்டிப் போட்டு வைத்திருக்கிறது தொண்டர்களை.
3 மணிக்கு பிரசாரப் பயணம் தொடங்கும் என்று அறிவித்திருந்தாலும், மதியம் 1 மணிக்கே கையில் பொன்னாடையோடு தொண்டர்கள் ஹோட்டல் லிப்ட்டின் முன்பாக குவியத் தொடங்கி விட்டார்கள். ஒவ்வொரு முறையும் லிப்ட் திறந்து மூடும்போதும் எல்லோருக்கும் இதயம் படபடக்கிறது. அறையின் முகப்பில் மாவட்ட நிர்வாகிகள் காத்திருக்கிறார்கள்.

சரியாக 3.30... லிஃப்ட் திறக்க, தொண்டர்கள் உணர்ச்சிக் குரலோடு பிரவகிக்கிறார்கள். வாழ்த்தொலி, பொன்னாடை என வந்து குவியும் அன்புக்கு புன்னகையைப் பரிசளித்து விட்டு வாகனம் ஏறுகிறார் கலைஞர். அன்றைய பிரசாரம் விராலிமலையில் தொடங்குகிறது. அங்கு நிலம் தெரியா அளவுக்கு எங்கெங்கும் தலைகள். சாலையின் ஓரத்தில் அணிவகுத்து நின்று வரவேற்கும் மக்கள் வெள்ளத்தின் ஊடாக நகர்ந்து செல்கிறது அவரது வாகனம். அவரைப் பார்க்கத் துடிக்கிற மக்களுக்கு செக்யூரிட்டி அலுவலர்களே வழியமைத்துக் கொடுக்கிறார்கள்.

‘‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே...’’ என்ற மந்திர வார்த்தைக்கு மயங்கிப் போகிறது கூட்டம். விலைவாசி ஏற்றத்தின் விளைவுகளையும், காரணங்களையும் பட்டியலிட்டதோடு, திமுக கொண்டு வந்த திட்டங்களை மறைக்க நடக்கும் முயற்சிகளையும் சாடுகிறார் கலைஞர்.

துவரங்குறிச்சியில் நாடாளுமன்ற வடிவில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. பெரும் மக்கள் வெள்ளம் திரண்டிருந்தது. பள்ளம், மேடான பகுதிகளைக் கடந்து மேடையில் ஏறுவதன் சாத்தியத்தை ஆராய்ந்த செக்யூரிட்டி அலுவலர்கள், வாகனத்தில் இருந்தபடியே பேசுமாறு கேட்டுக்கொண்டனர். கலைஞரின் முகம் பார்க்கும் ஆவலில் மேடையைச் சூழ்ந்திருந்த எல்லோரும் வாகனத்தை நோக்கி ஓடி வர, அவர்களைக் கட்டுப்படுத்துவதற்குள் அலுவலர்கள் திணறிப் போகிறார்கள். இங்கு விலைவாசி உயர்வைப் பற்றி ஆதாரங்களை முன்வைத்து மிகவும் அழுத்தமாகப் பேசினார் கலைஞர்.

‘‘திமுக ஆட்சியில் 1 கிலோ துவரம்பருப்பு 60 ரூபாய் விற்றது; இப்போது 84 ரூபாய். 34 ரூபாய்க்கு விற்ற கடலைப்பருப்பு இன்றைக்கு 48 ரூபாய். 80 ரூபாய் விற்ற பயத்தம் பருப்பும், 60 ரூபாய் விற்ற பழைய புளியும் இப்போது செஞ்சுரி போட்டு விட்டன. 120 ரூபாய் விற்ற மிளகாய் இப்போது 160 ரூபாய். 80 ரூபாய் விற்ற தனியா, இப்போது 116 ரூபாய். 50 ரூபாய் விற்ற வெந்தயம் 100 ரூபாய். 84 ரூபாய் விற்ற நல்லெண்ணெய் இப்போது 120 ரூபாய். இதுதான் ஜெயலலிதா ஆட்சியில் மக்களுக்குக் கிடைத்த பரிசு...’’ என்ற கலைஞர், ‘‘விலைவாசி ஏற்றம் பற்றியும் மக்களின் நல்வாழ்வு பற்றியும் சிறிதும் கவலைப்படாத அ.தி.மு.க. அரசுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும்’’ என்று நிறுத்துகிறபோது, ‘‘நிச்சயம் பாடம் கற்பிப்போம்’’ என்ற குரல் மக்கள் மத்தியில் எழுந்து அடங்குகிறது.

திருச்சிமதுரை நெடுஞ்சாலையில், மதுரை மாவட்ட எல்லையான பள்ளப்பட்டி அருகே ஏராளமான தொண்டர்கள் அணிவகுத்து நிற்கிறார்கள். பின்னணியில் ‘கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே! மக்கள் உள்ளம் குடிகொண்ட உண்மைத் தலைவர் வாழ்கவே’ என்ற நாகூர் ஹனிபாவின் குரல் கம்பீரமாக ஒலிக்க, அதற்கு இணையாக கிளம்புகிறது தொண்டர்களின் ஆரவாரம். வாகனத்தை நிறுத்தச் சொன்ன கலைஞர், கண்ணாடியை இறக்கிவிட்டு அனைவரையும் வணங்க... அகம் மகிழ்ந்து நின்றார்கள் தொண்டர்கள்.

இரவு 8 மணிக்கு நேரடியாக மதுரை ஓபுளா படித்துறையில் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட மேடைக்குச் செல்கிறார் கலைஞர். தென் மாவட்ட திமுக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் அத்தனை பேரும் அணிவகுத்து வரவேற்கிறார்கள்.

பொன்னாடை அணிவிப்பவர்களை அன்புடன் நலம் விசாரிக்கிறார். உள்ளூர் பிரமுகர்களின் பேச்சைக் கூர்ந்து கேட்கிறார். தேவைப்பட்டால் குறிப்பெடுக்கிறார். மேடையில் தரப்படும் மனுக்களை வாசித்துவிட்டு உதவியாளர் சண்முகநாதனிடம் கொடுக்கிறார். கூட்டத்தின் தொடக்கத்திலிருந்தே, ஆர்வ மிகுதியால் கொடிகளை உயரத் தூக்கி ஆட்டிக்கொண்டும், குரல் கொடுத்துக் கொண்டும் இருந்த ஒரு கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த இளைஞர்களைக் கவனித்த கலைஞர், பேச்சின் தொடக்கத்திலேயே அவர்களுக்கு அறிவுரை சொல்லத் தவறவில்லை.

‘‘இன்று கொடி பிடித்து நின்று கொண்டிருக்கிற இளைஞர்கள் நாளைக்கு மற்றவர்களை வழிநடத்தும் தலைவர்களாக வரவேண்டும். அந்தப் பொறுப்புணர்வு அவசியம். எனது 75 ஆண்டு கால பொது வாழ்க்கையில் கடமைகண்ணியம்கட்டுப்பாடு ஆகிய மூன்று கொள்கைகளையும் சமரசத்துக்கு இடமின்றி கடைபிடித்து வருகிறேன். காயிதே மில்லத் அவர்களைப் பற்றிப் பேசும்போதும், எழுதும்போதும் ‘கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத்’ என்றே சொல்ல வேண்டும் என்பது நாங்கள் கற்ற பாடம். தந்தை பெரியார், தன் 8090 வயதுகளில் கூட மற்றவர்களை எழுந்து நின்று கும்பிட்டு வரவேற்கும் மரபைக் கைவிடவில்லை. மற்றவர்களை மதிப்பதுதான் சுயமரியாதை. இதை தம்பிக்கு அண்ணன் சொல்லும் அறிவுரையாக நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்’’ என்று சொன்ன பிறகு தோழமைக் கொடிகள் சற்று இறங்கின.

அமைதியில் ஆழ்கிறது கூட்டம்.‘‘ ‘இருட்டறையில் உள்ளதடா உலகம்’ என்றார் பாரதிதாசன். இன்று தமிழ்நாடு இருளில் தவிக்கிறது. 2 வருடங்களுக்கு முன்பு 2 மணி நேரம் மின்வெட்டு இருந்தபோது, ‘கருணாநிதி உடனே ராஜினாமா செய்ய வேண்டும்’ என்று அறிக்கை கொடுத்தார் அம்மையார் ஜெயலலிதா. பத்திரிகைகளும் அதைப் பக்கம் பக்கமாக வெளியிட்டன. இன்றைக்கு 10 மணி நேரம் மின்வெட்டு இருக்கிறது. இப்போது ‘ஜெயலலிதா ராஜினாமா செய்ய வேண்டும்’ என்று நான் சொல்ல மாட்டேன். அவ்வளவு எளிதாக அவர் தப்பித்துக்கொள்ள முடியாது. சொத்துக்குவிப்பு வழக்கைச் சந்தித்து விட்டு அதன்பிறகு முடிவு செய்து கொள்ளட்டும்...’’ என்று கலைஞர் சொல்ல, கூட்டம் கைதட்டி ஆமோதிக்கிறது.

‘‘எனது ஆட்சியில் யாருக்கும் எந்தக் கஷ்டமும் இருக்காது. இன்பம் பொங்கும், பொன் விளையும் என்றெல்லாம் வாக்குறுதி கொடுத்தார் ஜெயலலிதா. போயஸ் கார்டனில்தான் பொன் விளைந்தது. ஏழைகள் வீட்டில் எதுவும் விளையவில்லை’’ என்று யதார்த்தம் சொன்ன கலைஞர், சொத்துக்குவிப்பு வழக்கைப் பற்றி விரிவாக விளக்கினார். ‘‘முதல்வர் பதவியில் அமரும்போது, ‘முதல்வர் பணிக்காக தரும் சம்பளத்தை வாங்க மாட்டேன். மாதம் 1 ரூபாய் மட்டுமே சம்பளம் பெறுவேன்’ என்று அடித்துச் சொன்னார் ஜெயலலிதா. ஆனால் அவர் நடித்துச்சொன்னார் என்பது அதன்பிறகு தான் தெரியவந்தது’’ என்றதை மக்கள் வெகுவாக ரசித்தார்கள்.

பெங்களூர் நீதிமன்றத்தில் வெளியிடப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஜெயலலிதாவின் சொத்துக்களையும் கிண்டல் கலந்து பட்டியலிட்டு மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தார் கலைஞர்.
‘‘1 ரூபாய் சம்பளம் வாங்கிய ஏழை ஜெயலலிதாவுக்கு வாலாஜாபாத்தில் 100 ஏக்கர்; சிறுதாவூரில் 25 ஏக்கரில் 1 பங்களா; நீலாங்கரையில் 2 ஏக்கர்; கொடநாட்டில் 892 ஏக்கர் மற்றும் பங்களாக்கள்; காஞ்சிபுரத்தில் 200 ஏக்கர்; கன்னியாகுமரியில் 1,190 ஏக்கர்; ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 200 ஏக்கர்; இவை போக ஐதராபாத்தில் ஒரு திராட்சைத் தோட்டம்; இதெல்லாம் 1 ரூபாய் சம்பளத்தில் வாங்கிப் போட்ட இடங்கள். இந்த வித்தையை தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் கற்றுக்கொடுத்தால் எல்லாருமே கோடீஸ்வராகி விடலாம்...’’ என்ற கலைஞர், அந்த சொத்துகளின் மதிப்பையும் பட்டியலிட்டு திகைக்க வைத்தார்.

‘‘தலைவர் எப்படி பேசுறார் பாருண்ணே... விரல் நுனியில தகவல்களை வச்சுக்கிட்டு இவரை மாதிரிப் பேச இன்னைக்கு யாரு இருக்கா? இவ்வளவு சொத்துக்களை இந்த அம்மா வாங்கி குவிச்சு வச்சுக்கிட்டு எங்களை கைநீட்டி குறை சொல்லுதே.. அதுக்கு இந்த தேர்தல்ல பாடம் கற்பிக்கணும்ணே’’ என்று நெகிழ்ச்சியின் உச்சத்தில், உணர்வுபூர்வமாக சொல்கிறார் மேடைக்குக் கீழே அமர்ந்திருந்த பசுமலையைச் சேர்ந்த சின்னப்பா.

மாலை 3.30 மணிக்குத் தொடங்கிய பயணம் சிறிதும் இடைவெளியின்றி நீண்டு இரவு 10 மணிக்கு நிறைவுகிறது. கலைஞரின் முகத்தில் சிறிதும் சோர்வில்லை. தொண்டர்களின் முகம் பார்த்த மகிழ்ச்சியில் மேலும் உற்சாகம் நிறைந்திருக்கிறது.

வாகனத்தில் இருந்தபடியே நாளைக்கான பயணத் திட்டங்கள் பற்றி விசாரிக்கிறார். வேட்பாளர்களுக்கு அறிவுரை, ஆலோசனைகள் வழங்குகிறார். பிற பகுதிகளில் பிரசாரத்தின் போக்கு பற்றி கேட்கிறார். உணவு, வாசிப்பு கடந்து உறங்க 11 மணிக்கு மேலாகிவிடுகிறது. ஓய்வறியா உழைப்பு, கண்ணியம் தவறாத பேச்சு, கண்டிப்பு, கலங்காத நெஞ்சுறுதி... கலைஞர் ஒரு மானுட வியப்பு!

எனது ஆட்சியில் இன்பம் பொங்கும், பொன் விளையும் என்றெல்லாம் வாக்குறுதி கொடுத்தார் ஜெயலலிதா. போயஸ் கார்டனில்தான் பொன் விளைந்தது!

மாதம் 1 ரூபாய் மட்டுமே சம்பளம் பெறுவேன் என்று அடித்துச் சொன்னார் ஜெயலலிதா. ஆனால் அவர் நடித்துச்சொன்னார் என்பது அதன்பிறகுதான் தெரிய வந்தது!

 வெ.நீலகண்டன்
படங்கள்: புதூர் சரவணன்