புகையை நிறுத்திய விருது!



தங்க மீன்கள் ராம்

அறையெங்கும் பொக்கே... வருகிற வாழ்த்துச் செய்திகளுக்கு அடக்கத்தோடு பதிலளிக்கிறார் டைரக்டர் ராம். தமிழின் சிறந்த படம்... சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது... சிறந்த பாடலாசிரியருக்கான விருது... என மூன்று தேசிய விருது களால் கௌரவப்படுத்தப்பட்டிருக்கிறது ‘தங்க மீன்கள்’. ‘‘என்ன ராம், மொத்தமா விருதுகளை அள்ளிக்கிட்டு வந்திட்டிங்க?’’ என்றால், ‘‘வணக்கங்கண்ணா’ என நெஞ்சில் கை வைத்துச் சிரிக்கிறார்.

‘‘படத்துக்கு முதல் விமர்சனம் ‘குங்குமம்’ இதழில் வந்ததுதான். மிகவும் நெகிழ்த்திப் போட்டது. இந்தியன் பனோரமா, குழந்தைகள் திரைப்பட விழா, சென்னை திரைப்பட விழா என எல்லாவற்றிலும் ‘தங்க மீன்களு’க்கு கவனமும், முதலிடமும் கிடைத்தது. அதனால் ஒரு தேசிய விருதாவது சாத்தியம் என நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால், டெல்லியிலிருந்து கூடுதல் வெற்றிக்கு ஆசீர்
வதித்து இருக்கிறார்கள்.

நாம் செய்கிற வேலையை செய்து கொண்டே இருந்தால், அதுவே ஒரு நல்ல இடத்திற்கு நிச்சயமாக கொண்டு போய்ச் சேர்க்கும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. சாதனாவுக்கு விருது கிடைத்தது இன்னும் மகிழ்ச்சி. படத்தில் அவளது உழைப்பு அசுரத்தனமானது. ‘எனக்கு விருது கிடைத்தால், புகை பிடிப்பதை நிறுத்தி விடுகிறீர்களா’ என்றாள். வேறு வழியில்லை... எனது புகை ‘நண்பனை’ மறக்கத்தான் வேண்டும்.

நா.முத்துகுமார் எனது பிரிய சிநேகிதன். கல்லூரிக் காலங்களில் இருந்து இன்று வரை சேர்ந்தேதான் பயணித்தோம். ‘கற்றது தமிழ்’ படத்தை தேசிய விருதுக்கு அனுப்பவில்லை. அதைச் செய்திருந்தால் அப்போதே அவனுக்குக் கிடைத்திருக்கக் கூடும். இந்த சினிமாவை வெளியிட்ட சதிஷ்குமாரை மறக்க முடியாது.எனக்கு எது நல்லது நடந் தாலும் நான் பகிர்வது என் ஆசான் பாலுமகேந்திராவிடம். இந்த வருடம் அதுவும் முடியாது.

ஆனால், ‘தலைமுறை’களும் தேசிய விருதில் இடம் பெற்றிருப்பது நெகிழ்ச்சி. நேற்று இந்தச் செய்தியை கேட்டுவிட்டு கோவையிலிருந்து மகள் ஸ்ரீசங்கரகோமதி போன் செய்தாள். நான் அவளிடம் ஆயிரம் முறைக்கு மேல் ‘ஐ லவ் யூ’ சொல்லியிருப்பேன். ஆனால், நன்றி என்ற வார்த்தையை  பகிர்ந்துகொண்டது கிடையாது.

 முதல் தடவையாக ‘நன்றி’ சொன்னேன். இந்தப் படத்தில் என் மனைவி எழுதிய ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ கவிதைப் புத்தகத்திலிருந்து சில கவிதைகளைக் காட்சிப்படுத்தியிருக்கிறேன். அவளுக்காக நான் ஒன்றும் செய்துவிடவில்லை என்ற குற்ற உணர்ச்சியிலிருந்து இந்த விருதால் கொஞ்சம் விடுபட்டிருக்கிறேன்!’’

 நா.கதிர்வேலன்