மினிமம் பேலன்ஸ் இனி தேவையில்லை!



‘‘சே... போன வாரம் பேங்க்ல இருந்த மினிமம் பேலன்ஸை எடுத்து செலவு பண்ணிட்டேன் மச்சி. அடுத்த வாரமே போட்டுட்டேன். அதுக்குப் போயி காசு புடிச்சிட்டாங்க!’’ என்ற வருத்தங்கள் இனி தேவையில்லை.

 ‘‘மினிமம் பேலன்ஸ் இல்லை என்பதற்காக இனி வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் அபராதம் வசூலிக்கக் கூடாது’’ என அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி. இந்தச் செய்தி சாதாரண வாடிக்கையாளர்களின் வயிற்றில் பாலை வார்த்திருந்தாலும், இது மறைமுகமாகத் தலைவலியையே தரும் என விவாதிக்கின்றன தனியார் வங்கிகள் சில!

இந்த அறிவிப்பு வெளியானதுமே முதலில் எதிர்ப்பு தெரிவித்தவர், ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் நிர்வாக இயக்குனர் ஆதித்ய பூரி. ‘‘மினிமம் பேலன்ஸ் இல்லை என்பதற்காக அபராதம் விதிக்கக் கூடாது என்ற உத்தரவை நாங்கள் மதிக்க வேண்டும் என்றால், வேறு சில சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்க வேண்டி வரும்’’ என்றார் அவர்.

‘‘ஒருவர் தனது சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்சமாக 10 ஆயிரம் ரூபாய் வைத்திருக்கிறார் என்றால், அதற்கு அடிப்படை வட்டியான 4 சதவீதத்தில் வங்கிகள் சம்பாதிப்பது வெறும் 400 ரூபாய் மட்டுமே. இதற்கு நாங்கள் அந்த வாடிக்கையாளருக்கு வருடம் முழுக்க செக் புத்தகம் தருகிறோம். எங்கள் வங்கி ஏ.டி.எம்களில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுக்கும் வசதியைத் தருகிறோம். மாதா மாதம் கணக்கு ஸ்டேட்மென்ட் அளிக்கிறோம். இப்படி பல சேவைகளை இலவசமாக அளிக்க நாங்கள் பெரிய நிர்வாகக் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டியிருக்கிறது. இதனால் எங்களுக்கு பெரிய நஷ்டம்தான். குறைந்தபட்சம் ஒரு சேமிப்புக் கணக்கில் 30 ஆயிரம் ரூபாய் இருந்தால்தான் இந்த சேவைகளை இலவசமாக அளிக்க முடியும்’’ என்கிற அவர் சொன்ன அடுத்த விஷயம் அதிர்ச்சியூட்டுவது.

‘‘ரிசர்வ் வங்கியின் உத்தரவை மதிப்போம். ஆனால், எல்லா சேவைகளுக்கும் கட்டணம் வசூலிக்க எங்களுக்கு எந்தத் தடையும் இல்லை. அதை செய்யத் தொடங்கினால், அது மினிமம் பேலன்ஸ் அபராதத்தைவிட அதிகமாக இருக்கும்!’’

இன்றிருக்கும் நிலையில், ஒவ்வொரு வங்கியும் தங்களுக்கு ஏற்ற வகையில் இந்த மினிமம் பேலன்ஸ் தொகையை நிர்ணயிக்கின்றன. சில தனியார் வங்கிகளில் குறைந்தபட்சம் 10,000 ரூபாய் சேமிப்புக் கணக்கில் இருக்க வேண்டும். சில பொதுத்துறை வங்கிகள் ஆயிரம் ரூபாய் வரை இந்த பேலன்ஸ் இருக்க வேண்டும் என எச்சரிக்கின்றன. அனைத்து வங்கிகளும் இந்த மினிமம் பேலன்ஸை சரியாகத் தக்க வைக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கின்றன. இந்த அபராதத் தொகையை வாடிக்கையாளர்களின் கணக்கில் உள்ள பணத்திலிருந்தே கழித்தும் விடுகின்றன.
தற்போது இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள கொள்கை முடிவின்படி, இனி ‘மினிமம் பேலன்ஸுக்கு மட்டுமல்ல...

நீண்ட நாட்கள் செயல்படாமல் உள்ள கணக்கிற்கும் அபராதம் விதிக்கக் கூடாது. அதற்கு பதில், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களின் வங்கிச் சேவையில் ஏ.டி.எம்., காசோலை போன்ற சில சேவைகளை நிறுத்தி வைக்கலாம் எனவும், எப்போது அவர் மினிமம் பேலன்ஸை எட்டுகிறாரோ அப்போது மீண்டும் அவருக்கு எல்லா சேவைகளையும் அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது ஆர்.பி.ஐ.

‘‘தற்போதுள்ள ‘மினிமம் பேலன்ஸ்’ மிகக் குறைவான தொகைதான். அதற்கு பதில் ஏ.டி.எம் போன்ற இன்றியமையாத சேவைகளை நிறுத்திக்கொள்வதுதான் வாடிக்கையாளர்களுக்கு பெரும் தலைவலியாக இருக்கும்’’ என்பது வங்கிகள் சொல்லும் பாயின்ட்.

‘‘ரிசர்வ் வங்கியின் உத்தரவு வரவேற்கத்தக்கது’’ என்கிற பொருளாதார நிபுணர் சோம.வள்ளியப்பன், இதுபற்றி நீளும் விவாதங்களுக்கு ஒரு தீர்வும் வைத்திருக்கிறார்.
‘‘இந்த உத்தரவின் மூலம், மாதக் கடைசியில் செலவுக்காக திணறும் சாதாரண வாடிக்கையாளர்களின் மனதை ரிசர்வ் வங்கி குளிர வைத்துள்ளது. அதே நேரம், எல்லாமே வணிகமயமாகிவிட்ட இன்றைய தேதியில் எதையும் இலவசமாகப் பெற முடியாது.

செலவே இல்லை என்பதால், சிலர் ஐந்தாறு சேமிப்புக் கணக்குகள் கூட வைத்துக் கொண்டு எதையும் முறையாக பராமரிக்காமல் இருக்கின்றனர். செலவு செய்து அந்தக் கணக்குகளை பாராமரிக்கும் வங்கிகளுக்கு இதனால் நிறைய இழப்பு ஏற்படுகிறது. எனவே, தொலைபேசி, மின்சாரம் உள்ளிட்ட சேவைகளைப் பெறும்போது, நாம் பயன்படுத்தவே இல்லை என்றாலும் குறைந்தபட்சமாக ‘சேவைக் கட்டணம்’ என்ற ஒன்றை மாதக் கட்டணமாக செலுத்துகிறோம் அல்லவா? அதே போல வருடத்துக்கு நூறு முதல் இருநூறு ரூபாய் வரை... ஒரு சிறு தொகையை வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கலாம்!’’ என்கிறார் அவர்.  

ஏ.டி.எம், செக்புக் என சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கத் தொடங்கினால், அது மினிமம் பேலன்ஸ் அபராதத்தைவிட அதிகமாக இருக்கும்!
 
- பேராச்சி கண்ணன்