தயங்கிய சிவாஜியின் தடாலடி சண்டை!



‘சூரக்கோட்டை சிங்கக்குட்டி’ ஷூட்டிங்கில் எடுத்த படம் இது. போட்டோவில் புன்னகை வீசும் சிவாஜி, இதற்கு சில நிமிடங்களுக்கு முன் பதற்றத்துடன் இருந்த விஷயம் பற்றித் தெரியுமா?’’ எனப் புதிர் போட்டு, அந்தச் சம்பவத்தைப் பகிர்ந்துகொள்கிறார் ஜூடோ ரத்னம்.

‘‘இப்போதும், ‘ரயில் சண்டைக் காட்சி எடுப்பதில் ரத்னம் மாஸ்டர் கெட்டிக்காரர்’ என்கிற பெயர் எனக்கு உண்டு. ஏவி.எம் முருகன் தயாரித்த, ‘சூரக்கோட்டை சிங்கக்குட்டி’ படத்தில் பிரபுவை வைத்து செங்கல்பட்டு ரயில் பாலத்தில் சண்டைக் காட்சியை எடுத்தபோது, அதில் இருந்த ரிஸ்க், யூனிட்டையே அலற வைத்தது. பிரபு ரிஸ்க் எடுத்து நடித்தார்.

பிறகு ஒரு வாரம் கழித்து ஏவி.எம் ஸ்டுடியோவில் இன்னொரு காட்சியை எடுத்தோம். திடீரென ஸ்பாட்டுக்கு வந்த சிவாஜி அண்ணன், ‘மாஸ்டர் ஜி... ஃபைட் சீன்ல ரொம்ப ரிஸ்க் எடுக்குறீங்கன்னு சொன்னாங்க. என் மகனை பத்திரமா பார்த்துக்குங்க’ என ஒரு தந்தைக்குரிய அக்கறையில் சொன்னார். அதன் பிறகு சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டோம்’’ என்றவர் சிவாஜிக்கு சண்டை சொல்லிக்கொடுத்த இன்னொரு அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.

‘‘சிவாஜி தன் படங்களுக்கு பர்சனலாக இரண்டு ஸ்டன்ட் மாஸ்டர்களைத்தான் பயன்படுத்தி வந்தார். ‘திருப்பம்’ படத்தில் சண்டைக் காட்சியை இயக்கித் தரும்படி சொன்ன கே.ஆர்.ஜி, சிவாஜியிடம் என்னை அறிமுகப்படுத்தி ‘ரொம்பப் பிரமாதமா சண்டைக் காட்சிகளை எடுப்பார்’ என்றார். ‘கேள்விப்பட்டிருக்கேன்’ என்று அரை மனசோடுதான் சம்மதித்தார் சிவாஜி. மறுநாள் சண்டைக் காட்சிக்காக 50 அடி நீளத்துக்கு டிராலி போடப்பட்டு இரண்டு கேமராக்கள் தயாராக இருந்தன.

‘எதிரிகள் உங்களை தாக்க வரும்போது அவர்களைப் பார்க்காமலேயே ஒவ்வொருவராக அடித்து விரட்டுகிறீர்கள்’ என்று சிவாஜியிடம் விளக்கியபோது, ‘அதெப்படி பார்க்காமலே அடிப்பது? எங்கே செஞ்சு காட்டுங்க...’ என்றார். நானும் ஸ்டன்ட் நடிகர்களை என்னைத் தாக்க வைத்து, அவர்களை அடித்துக் காட்டினேன்.

சிவாஜி ஷாக்காகிவிட்டார். ‘உங்களைப் பத்தி நிறைய சொல்லியிருக்காங்க. இப்போதான் உங்க திறமையை நேர்ல பார்க்கறேன்...’ என்று மரியாதை கலந்த பாராட்டை கொடுத்தார். ஆனாலும் அவருக்குத் தயக்கம். ‘நீங்க செய்யலாம். என்னால் இந்த மாதிரி செய்ய முடியுமா?’ என்றார். ‘அட, ‘மனோகரா’ படத்துல நீங்க சங்கிலியை அறுத்துக்கிட்டு கர்ஜிக்கிற சீன்ல, நிஜமான வீரத்தைப் பார்த்திருக்கோம். இதெல்லாம் உங்களுக்கு தூசுதான்’னு நான் சொல்ல, அடுத்த நிமிஷமே அசத்தலா நடித்து ஆச்சரியப்படுத்தினார்.’’

- அமலன்