மொழிபெயர்ப்பு!



வெறுமையைப் புறம்  தள்ளும் ஆக்கபூர்வமான துணையே மொழிபெயர்ப்பு!

உலக இலக்கியங்கள் பலவும் சுடச்சுட தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வருகின்றன. ஆனால் புகழ்பெற்ற தமிழ் இலக்கியங்கள் பிற மொழிகளுக்கு ஏன் போகவில்லை?

எம்.ஏ.சுசீலா! தமிழின் ஆகச்சிறந்த மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவர். ரஷிய எழுத்தாளர் ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் புகழ்பெற்ற நாவல்களான ‘அசடன்’, ‘குற்றமும் தண்டனையும்’ ஆகியவற்றை தமிழுக்குத் தந்தவர். சிறுகதை, சொற்பொழிவு, நாடகம் என பல தளங்களில் இயங்கி வரும் சுசீலா, தமிழை உலக இலக்கியங்களால் வளப்படுத்தும் பணியை மனமுவந்து செய்துகொண்டிருக்கிறார்.

மொழி சார்ந்து நிறைய படித்திருக்கிறீர்கள். வளமான மொழியென்று சொல்லத்தக்க அளவுக்கு தமிழில் இலக்கியங்கள் செய்யப்படுகின்றனவா?நிச்சயமாக! ஜெயமோகனின் ‘கொற்றவை’ ஒன்று போதுமே... ஒவ்வொரு காலகட்டத்திலும் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே வருவது மொழியின் இயல்பு. அந்தப் புதுமையின் மாற்றத்தை, வளர்ச்சியை, மனதுக்குள் நினைவு படுத்திக்கொண்டுதான் இன்
றைய படைப்புக்களை நாம் எடை போட வேண்டும். அந்த நோக்கில் தமிழின் தொன்மைக்கும் பன்முகத் தன்மைக்கும் சிறப்பு சேர்க்கும் படைப்புகள் சிறுகதைகளாக, நாவல்களாக, கவிதைகளாக வந்து கொண்டுதான் இருக்கின்றன.

பிற மொழிகளில் இருந்து தமிழுக்கு வரும் அளவுக்கு தமிழில் இருந்து இலக்கியங்கள் வெளி மொழிகளுக்குச் செல்வதில்லையே? பிற மொழிகளிலிருந்து தமிழில் பெயர்க்கும்போது ரஷ்யன் போன்ற மூலமொழிகள் தெரியாவிட்டாலும் நம்பகத்தன்மை கொண்ட ஆங்கில மொழிபெயர்ப்பை ஊடகமாகக் கொண்டு செய்துவிட முடிகிறது. தமிழிலிருந்து வேறு மொழிக்குப் படைப்பைக் கொண்டு செல்பவர்கள், குறிப்பிட்ட இரு மொழிகளிலும் திறனுள்ளவர்களாக இருந்தாக வேண்டும். பன்மொழி ஆளுமையையும் படைப்பாற்றலையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

கல்கத்தா சு.கிருஷ்ணமூர்த்தி, நிறைய தமிழ்ப் படைப்புகளை - ‘சிலப்பதிகாரம்’ உட்பட - வங்காள மொழிக்குக் கொண்டு சென்றிருக்கிறார். சங்கப் பாடல்களில் சில ஏ.கே.ராமானுஜன், வைதேஹி ஹெர்பெர்ட் போன்றவர்களால் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. மௌனி, ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதியின்  பல படைப்புக்கள் ஆங்கிலத்திற்குச் சென்றிருக்கின்றன. சாகித்ய அகாதமியும், ‘கதா’ முதலிய அமைப்புகளும் இதற்கான முயற்சியில் முனைந்திருந்தபோதும், தமிழிலிருந்து பிற மொழிகளுக்குச் செல்லும் நூல்கள் குறைவுதான். அவற்றின் எண்ணிக்கையும் தரமும் கூடுதலாகும்போதுதான், தமிழின் பெருமையைப் பிற மொழி வாசகர்கள் அறிந்து கொள்ள முடியும்.

மொழிபெயர்ப்புத் துறையில் உங்களுக்கு ஈடுபாடு வந்தது எப்படி?

தஸ்தயெவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’ என்ற மிகப்பெரிய ஓர் உலகப் பேரிலக்கியத்தை என் முதல் மொழியாக்க முயற்சியாக நான் கொண்டது இனிய தற்செயல். பேராசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெறும்போதே, என் பணி நிறைவுக்காலத்தைப் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டு மென்று உறுதியாக இருந்தேன். அந்த நேரத்தில், மதுரை, பாரதி புக் ஹவுஸ் உரிமையாளர் துரைப்பாண்டி ‘குற்றமும் தண்டனையும்’ நாவலை மொழிபெயர்த்துத் தருமாறு கேட்டார். ஓய்வுக்கால வெறுமை உணர்வைப் புறம் தள்ளுவதற்கான ஆக்கபூர்வமான  ஒரு துணையாக மட்டுமே தொடக்கத்தில் இந்த முயற்சிக்கு ஒப்புதல் அளித்தேன்.

எழுத்தார்வத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும், எழுத்துடனும், இலக்கியத்துடனுமான உறவைத் தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்று விடாமல் தடுக்கவும் அந்த மொழியாக்கப் பணி எனக்கு வாயில்களைத் திறந்து வைத்தது. பிறகு ஒரு கட்டத்தில் அது, தானாகவே என்னை இழுத்துக் கொள்ளத் தொடங்கிவிட்டது. ‘குற்றமும் தண்டனையும்’ மொழியாக்கத்துக்கு வாசகர்கள், சக எழுத்தாளர்கள், மற்றும் திறனாய்வாளர்களிடமிருந்து கிடைத்த மகத்தான வரவேற்பு, ‘அசடன்’ நாவலை மொழியாக்கும் தூண்டுதலை அளித்தது. ‘அசடன்’ மொழியாக்கத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட விருது, நல்லி திசை எட்டும் விருது, எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயத்தின் ஜி.யு.போப் விருது என மூன்று விருதுகள் கிடைத்தன.

தற்போது செய்து கொண்டிருக்கும் மொழிபெயர்ப்பு பணி என்ன? ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் ‘கீழுலகின் குறிப்புகளை’யும் (ழிஷீtமீs யீக்ஷீஷீனீ tலீமீ ஹிஸீபீமீக்ஷீரீக்ஷீஷீuஸீபீ)   அவரது மிகச்சிறந்த சிறுகதைகள் சிலவற்றையும் மொழிபெயர்க்கத் தொடங்கியிருக்கிறேன். சொந்தப் படைப்பாக சிறிய நாவல் ஒன்றை எழுதி முடித்து, அதைச் செம்மைப்
படுத்தும் பணியில் இருக்கிறேன். இடையிடையே சிறுகதைகள், குறுநாவல் போன்ற சில படைப்புக்களை எழுதும் எண்ணமும் உண்டு.

தமிழிலிலிருந்து பிறமொழிக்குப் பெயர்க்கத்தக்க ஆகச்சிறந்த இலக்கியமாக நீங்கள் கருதுபவை எவை? முதலில் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்கக் காரணமாக இருந்த சங்க இலக்கியங்களை முழுமையாக பிறமொழிகளுக்குக் கொண்டு செல்ல வேண்டும். குறிப்பாக, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இரண்டையும் ஆங்கிலத்தில் பெயர்க்க வேண்டியது அவசியம். பல்கலைக்கழகங்கள், ஆய்வு நிறுவனங்கள் இந்தப் பணியை சிரத்தையோடு முன்னெடுக்க வேண்டும்.    

மொழி பெயர்ப்பதில் உள்ள சவால்கள் என்ன?

அயல் மாநிலம், அயல் நாடு என எதுவானாலும் அங்கிருந்து வரும் இலக்கியங்கள் மொழி, கலாசாரங்களில் நம்மிடம் இருந்து விலகி இருப்பவை. அதிலும் குறிப்பாக தஸ்தயெவ்ஸ்கி போல சில நூற்றாண்டுகளுக்கு முன் எழுதிய பெரும் படைப்பாளிகளின் படைப்புலகும் சூழலும் நம்மிடமிருந்து முற்றிலும் அந்நியப்பட்டவையாகவே இருக்கும். ஆனால் மனிதர்களின் உணர்வுப் போராட்டங்கள், அவற்றோடு பின்னிப் பிணைந்திருக்கும் உறவுச் சிக்கல்கள், மனிதச் சிறுமைகள், மகத்துவங்கள் ஆகியவை உலகின் எந்த இடத்திலும், எந்தக் காலகட்டத்திலும் சாஸ்வதமாகக் காணக்கூடியவையே. அவற்றை மூலப் படைப்பிலிருந்து பிறழாமல் தரிசனப்படுத்துவதிலேயே மொழிபெயர்ப்பாளனின் வெற்றி அடங்கியிருக்கிறது. செயற்கைத்தன்மையாக இருக்கும் மொழிபெயர்ப்பு நூல்கள் வாசகர்களால் மிக எளிதாக நிராகரிக்கப்பட்டு விடும்.

பெண்களின் பிரச்னைகளை நேர்மையாக மையப்படுத்திய இலக்கியங்கள் தமிழில் உருவாகின்றனவா?

இதில் என்ன சந்தேகம்? முன்னோடிகளில் தொடங்கி  இன்றைய நவீன எழுத்தாளர்களில் பலரும் பால் பேதமின்றிப் பெண்களின் பிரச்னைகளை நேர்மையாக மையப்படுத்தி எழுதியிருக்கிறார்கள். எழுதியும் வருகிறார்கள். ஆர்.சூடாமணி, ராஜம் கிருஷ்ணன், வாஸந்தி, அம்பை, திலகவதி, பாமா போன்ற புனைகதைப் படைப்பாளிகள் சித்தரித்த பெண்களின் பிரச்னைகளை இன்றைய கால மாற்றத்துக்கு ஏற்றபடி இளைய தலைமுறை எழுத்தாளர்கள் பலரும் தங்கள் படைப்புக்களில் பதிவு செய்துகொண்டுதான் வருகிறார்கள். இன்றைய மொழி நடைக்கும், சமூகச்சிக்கல்களுக்கும் ஏற்றபடி சில கோணங்கள், போக்குகள் வேறுபடுகின்றன. அவ்வளவுதான்.

- வெ.நீலகண்டன்
படங்கள்: சாதிக்