ஸ்டன்ட் நியூஸ்



ஸ்

காலில் எலும்பு முறிவோடு ஆஸ்பத்திரியில் படுத்திருந்த ஸ்டன்ட் நடிகரிடம், முகத்தில் கோபம் தெறிக்க நாளிதழைக் காட்டினாள் மகள்.''பாருங்கப்பா... சொந்த வேலையா வெளியூர் போனப்ப கார் ஆக்ஸிடென்ட்ல உங்க கால் முறிஞ்சிடுச்சின்னு பேப்பர்ல போட்டிருக்காங்க..!’’‘‘விடு கண்ணு... ஹீரோவுக்காக டூப்பா மாடியில இருந்து குதிச்சப்போ கால் ஒடிஞ்சிருச்சுன்னு உண்மையைப் போட்டா ஹீரோவோட இமேஜ் பாழாயிடும்ல? அதான் இப்படி பொய் நியூஸ் குடுத்திருக்காங்க. நீ மீடியாக்காரங்ககிட்ட உண்மையை மூச்சு விட்டுடாதே! அப்புறம் நம்ம கேரியரே ஸ்பாயிலாயிடும்!’’

பங்களாவில் ஹீரோ... ஸ்டன்ட் நடிகரின் உடல்நலம் பற்றித் தயாரிப்பாளரிடம் விசாரித்தார்.‘‘நீங்க அவருக்காக ரொம்பவே கவலைப்படுறீங்க சார்! ஆஸ்பத்திரி செலவையும் ஏத்துக்கிட்டீங்க. அப்புறம் ஏன் ஆக்ஸிடென்ட்ல கால் முறிஞ்சுட்டுதுன்னு மீடியாகிட்ட சொல்லச் சொன்னீங்க?’’ என்றார் தயாரிப்பாளர்.

‘‘ஆக்ஷன் காட்சிகள்ல ஹீரோவுக்காக டூப் போட்டு ஸ்டன்ட் நடிகர்கள்தான் நடிக்கிறாங்கனு இப்ப எல்லாருக்கும் தெரியுது. எனக்காக டூப் போட்டப்பதான் அவருக்கு கால் ஒடிஞ்சிடுச்சுன்னு தெரிஞ்சா, ‘இந்த ஸ்டன்ட் நடிகருக்கு பாதுகாப்பா குதிக்கத் தெரியலை... வீணா ஆஸ்பத்திரி செலவை இழுத்து வச்சுடுறார்’னு மத்த தயாரிப்பாளர்களும் நடிகர்களும் பயப்படுவாங்க. இதனால அவரோட கேரியர் ஸ்பாயிலாயிடும். அதான் பொய் நியூஸ் கொடுக்கச் சொன்னேன்!’’

சுபமி