சீனப் பாம்பு இலங்கையை விழுங்கிக் கொண்டிருக்கிறது!



நீதியும்
தர்மமும் மட்டும்
பேசி
நியாயத்தைப்
பெற முடியாது
என ஈழத் தமிழர்கள் உணர்ந்திருக்கிறார்கள். உரிமையைப் பெறும் வழி பற்றிப் பேசுகிறார்
‘நாடு கடந்த தமிழீழ அரசின்’ பிரதமர் விசுவநாதன்
ருத்திரகுமாரன்

முள்ளிவாய்க்கால் ரத்தச்சேற்றில் தமிழீழ கோரிக்கையும் மூழ்கிப் போய்விட்டது என்று உலகம் கருதிக் கொண்டிருந்த தருணத்தில் உதித்ததுதான் ‘நாடு கடந்த தமிழீழ’ அரசு. ஆயுதத் தரிப்புகளைத் தள்ளி வைத்துவிட்டு அரசியல் ரீதியாக சர்வதேச முன்னெடுப்புகளைத் தொடங்கி தமிழ் மக்களின் வாழ்க்கையில் நம்பிக்கையை துளிர்க்க வைத்திருக்கிறது இந்த முயற்சி. புலம்பெயர் தமிழர்களின் தாங்குதலோடும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் தீவிரத்தோடும் இயங்கும் இந்த அரசின் பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமாரன். புலிகள் அமைப்பின் அரசியல் பொறுப்பாளர்களில் ஒருவராக இயங்கியவர். ஐ.நா மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வாக்கெடுப்புக்கு வந்திருந்த பரபரப்பான சூழ்நிலையில் அவரிடம் பேசினோம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான அவசியம் என்ன? அதன் நிகழ்கால, எதிர்கால செயல் திட்டங்கள் என்ன? எங்கள் தேசியப் பிரச்னைக்குத் தீர்வாக சுதந்திரமும் இறையாண்மையும் கொண்ட தமிழீழ அரசை அடைவதற்குக் காத்திரமான பங்களிப்பை வழங்குவதே நாடு கடந்த தமிழீழ அரசின் நோக்கம். முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு, போராட்டத்தின் வடிவத்தை மாற்றியுள்ளது. நமது போராட்டத்துக்கான நியாயத்தையும், இலக்கையும் மேலும் வலுப்படுத்தியுள்ளது. முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் காரணமாகப் பிறந்த குழந்தைதான் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம். 

எமது குறுங்கால இலக்கு, ராஜபக்ஷே அரசினைத் தனிமைப்படுத்தல், முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு குறித்த அனைத்துலக விசாரணைப் பொறிமுறையினை ஏற்படுத்த உழைத்தல், ஈழத்தாயக மக்களின் வாழ்வை வலிமைப்படுத்தல், உலகத் தமிழ் மக்களிடையே நமது இலக்கு நோக்கி செயற்படுவதற்கான தோழமையினை வளர்த்தெடுத்தல், நமது போராட்டத்தின் நியாயத்தை அனைத்துலக சமூகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று ஆதரவு திரட்டல் போன்றவை.

நீண்டகால இலக்குகளாக ஈழத்தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கு அனைத்துலக அங்கீகாரம் கிடைக்கும் வழிவகை செய்தல், ஈழத் தமிழர் தேசத்துக்கு எதிராக சிங்களம் மேற்கொள்வது இனஅழிப்பு என்பதை நிறுவி அதற்கான பரிகார நீதியாக தமிழீழத் தனியரசுக்கான அங்கீகாரம் பெறுதல், இந்தியா, அமெரிக்கா போன்ற அரசுகளின் நலன்களையும் ஈழத்தமிழ் மக்களின் நலன்களையும் ஒரே கோட்டில் சந்திக்க வைத்து தமிழீழ விடுதலையை சாத்தியப்படுத்தல் போன்றவை அமைகின்றன.

நாடு கடந்த தமிழீழ அரசு, ஜனநாயக அரசுகளின் கட்டமைப்பைப் போலவே வலுவான கட்டமைப்பைக் கொண்டது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளே இதன் ஆதாரம். இவர்களைக் கொண்ட அரசவை, அரசுகளின் நாடாளுமன்றம் போலவே செயற்படுகிறது. பிரதமரையும் அரசவையே தெரிவுசெய்கிறது. தொடக்கத்தில் பெரும் நம்பிக்கையை விதைத்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பணிகள் இடையில் தொய்வடைந்ததன் காரணம் என்ன?

மக்களின் எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் திருப்திப்படுத்தும் அளவுக்கு எமது செயற்பாடுகள் வளர்ச்சி அடைவதற்குக் குறிப்பிட்ட அளவு காலம் தேவைப்படுகிறது என்பதுதான் யதார்த்தம். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் புதியதொரு எண்ணக்கரு. புதிதாய் தோற்றம் பெற்று நான்கு வருடங்கள் இன்னும் நிறையாத ஓர் அமைப்பு. ஒரு தனிநாடு உலகில் உருவாவதனை ஏற்க மறுக்கும் தற்போதைய உலக ஒழுங்கை எதிர்கொண்டு நாம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம். இது ஒரு வகையில் எதிர்நீச்சல் போடுவது போன்றது. இருந்தபோதும் நமக்கான காலம் கனியும் என்று உறுதியாக நம்புகிறோம். மக்களிடமிருந்து எமக்குக் கிடைத்து வரும் ஆதரவுடன்தான் எமது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தில் குழுப்பிளவுகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறதே? இதை மறுக்கிறேன். எமக்கிடையே விடயங்கள் சார்ந்து மாறுபட்ட கருத்துகள் எழுவதும், அவற்றை விவாதித்து ஜனநாயக அடிப்படையில் முடிவுகளை எடுப்பதும் மிக இயல்பான நடைமுறையாக உள்ளது. இந்த நடைமுறையே ஜனநாயக அரசியலின் அடிப்படை. இது எமக்கு மட்டுமின்றி எந்தவொரு ஜனநாயக அரசியல் அமைப்புக்கும் பொதுவான அம்சமாகும்.

நெடுங்கால வரலாறு கொண்ட ஈழப்போராட்டத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பெற்றுக்கொண்ட படிப்பினை என்ன? நலன்களே உலக அரசியலின் உந்துசக்தி என்பதும், பலம் மிக்கவனே பாரை ஆள்கிறான் என்பதும் மீண்டும் மீண்டும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தார்மீக நிலைப்பாடுகளான நீதி, தர்மம் போன்றவை மட்டும் எமது இலக்கில் வெற்றியடைவதற்குப் போதுமானவை அல்ல. உலக ஒழுங்கைத் தீர்மானிக்கும் பலமிக்க அரசுகளின் நலன்களையும் ஈழத் தமிழ் மக்களின் நலன் களையும் ஒரே கோட்டில் சந்திக்க வைக்கும் உத்தி களை கடைப்பிடிக்க வேண்டும்.

இலங்கையில் தமிழ்ப் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள், கட்டாய ராணுவ ஆள்சேர்ப்பு, வாழ்வாதார முடக்கம் என தொடர்ந்து வாழ்வியல் அநீதிகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றனவே?
அங்கு தமிழர் தேசத்தை இல்லாதொழிக்கும் கட்டமைப்புசார் இன அழிப்பை (Structural genocide) மிகவும் திட்டமிட்ட முறையில் சிங்களம் மேற்கொள்கிறது. இதனை தற்காலிகமாக தடுப்பதற்கு அனைத்துலகப் பாதுகாப்பு பொறிமுறை ஒன்றையும், நிரந்தரமாகத் தடுப்பதற்கு தமிழீழத் தனியரசு அமைக்கப்படுவதனையும் நாம் தீர்முறையாக முன்வைத்துள்ளோம்.
இதற்கு அனைத்துலக சமூகத்தின் மத்தியில் ஆதரவு தேடும் முயற்சியில் நாம் இறங்கியுள்ளோம்.

இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?

 இந்தியா, இலங்கை விவகாரத்தில் தவறான வெளியுறவுக் கொள்கைகைப் பின்பற்றி வருகிறது. இந்திய கொள்கை வகுப்பாளர்கள் மரபார்ந்த சிந்தனையில் மூழ்கிக் கிடக்கின்றனர். சீனப்பாம்பு இலங்கையை விழுங்கிக் கொண்டிருப்பதனை எவ்வாறு கையாள்வது என்பதை இவர்களால் சரிவர மதிப்பிட முடியவில்லை. இன்னும் சிறிது காலம் போனால் இலங்கைத்தீவினை சீனாவின் பிடியிலிருந்து எவராலும் மீட்க முடியாது. மக்களுக்கு பதில் கூற வேண்டிய ஆளுமைமிக்க அரசியல் தலைவர்கள் அரசைத் தலைமை தாங்காதபடியால், அதிகாரிகளே நிலைப்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் ஆற்றல் உள்ளவர்களாக இருக்கிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல, இந்தியாவும்தான். இதனைக் காலம் நிச்சயம் உணர்த்தும்.

இலங்கை விவகாரத்தில் ஐ.நாவின் செயல்பாடுகளும் விமர்சிக்கப்படுகிறதே?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை என்பது அரசுகளின் அமைப்பு. இதனால் இங்கும் நலன்களே மையம் கொள்ளும். அணி சார்வும் நலன்கள் சார்ந்தே நடக்கும். இருப்பினும் பச்சையான மனித உரிமை மீறல்களை எந்த அரசும் இந்தச் சபையில் நியாயப்படுத்தி விட முடியாது. இலங்கை மீது இச் சபை அக்கறை கொண்டுள்ளமையினை எமக்குச் சாதகமாக நாம் கையாள வேண்டும். அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்றினைக் கொண்டு வருவது வரை இச்சபையினை நாம் துரத்த வேண்டும். அவ்வாறான விசாரணை வரும்போது, உண்மைகளைப் பேச வேண்டிய கட்டாயம் நேரும். அதுவே தீர்வுக்கும் வழி சமைக்கும்.

ஈழ விவகாரத்தில் நீங்கள் முன் வைக்கும் தீர்வு என்ன?
இலங்கைத் தீவில் சிறிலங்கா, தமிழீழம் ஆகிய இரு அரசுகள் உள்ள ஒரு தீர்வு முறை. நாம் இரு நாடுகளாக இருந்து கொண்டு ஒத்துப் போகும் விடயங்களில் இணைந்து இயங்கலாம். மோதிக் கொள்ளத் தேவையில்லை. சிங்கள மக்கள் மத்தியிலும் அரசியல் தலைவர் களிடமும் இதற்கான மனமாற்றம் ஏற்படும் என்பதனை வரலாற்றனுபவம் ஏற்க மறுக்கிறது. இதனை இந்தியா அங்கீகரிக்கும்போதுதான் இத்தீர்வு சாத்தியமாகும்.

அமெரிக்கா போன்ற சூப்பர் பவர் நாடுகளையே அலட்சியப்படுத்தும் இலங்கை அரசுக்கு எதிராக நீங்கள் என்ன சாதிக்க முடியும்?

அடிக்கு மேல் அடித்தால் அம்மியும் நகரும். ராஜபக்ஷேவை விட பெரிய தலைகள் வீழ்ந்தமையினையும் வரலாறு நமக்குக் காட்டியிருக்கிறது. இங்கு நாம் தமிழர்கள் என்ற பலத்தினை நம்புவோம். மிகுந்த ஆற்றல் கொண்ட 8 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இருக்கிறோம். எம்மால் உலகில் ஒரு வலு மையமாக வரமுடியும்.

 இவ்வாறு வரும்போது ஈழத் தமிழர்கள் விடுதலை அடையவார்கள். எங்களைக் குறைத்து மதிப்பிட வேண்டாம். அரசியலின் அடிப்படையில் அழுத்தமான பாதையை நாங்கள் போட்டுக் கொண்டிருக்கிறோம். விளைவை, வரலாறு எழுதும். பச்சையான மனித உரிமை மீறல்களை எந்த அரசும் நியாயப்படுத்தி விட முடியாது. விசாரணை வரும்போது, உண்மைகளைப் பேச வேண்டிய கட்டாயம் நேரும். அதுவே தீர்வுக்கும் வழி
சமைக்கும்.

- வெ.நீலகண்டன்