வாடகை வீடு



வா

‘‘வீடு பிடிச்சிருக்குன்னு சொல்றீங்க ஓகே... மாசாமாசம் சரியா பத்தாம் தேதிக்குள்ளே வாடகை தந்துடணும்... தண்ணி, கரன்ட்டை எல்லாம் சிக்கனமா பயன்படுத்தணும். வீட்டுக்குள்ளே கண்ட இடத்துல ஆணி அடிக்கக் கூடாது!’’ ஓனர் சொன்னதற்கெல்லாம் தலையாட்டி வைத்தான் பரந்தாமன். எப்படியோ... இந்த வீடாவது கிடைத்தால் போதும் என்றிருந்தது அவனுக்கு. ஆபீசுக்கு பக்கத்தில் வீடு தேடி ஒரு மாதமாக எவ்வளவு அலைச்சல்... எவ்வளவு கஷ்டம்..? போதுமடா சாமி!

‘‘அப்புறம் ஒரு கேள்வி... நீங்க அசைவம்  சாப்பிடுவீங்களா..? டிரிங்ஸ் பழக்கம் உண்டா..?’’ என்றார் வீட்டு ஓனர்.‘‘இல்லை சார்... நாங்க சுத்த சைவம். தண்ணியடிக்கறவங்க பக்கம் கூட நான் போக மாட்டேன்!’’ - அவசரமாகப் புளுகினான் பரந்தாமன். சரியான அசைவப் பிரியன் அவன். வாரம் ஒரு முறையாவது நண்பர்களுடன் சேர்ந்து குடிக்கிற பழக்கமும் உண்டு. வீட்டிலேயேகூட கச்சேரி நடப்பதுண்டு. ஆனால், உண்மையை சொன்னால் வீடு கிடைக்காது. எவ்வளவு பார்த்திருக்கிறான்!

‘‘சாரி சார். எங்க காம்பவுண்டுல எல்லாரும் அடிக்கடி அசைவம் சாப்பிடறவங்க. அதே மாதிரி நாங்க எல்லாரும் அடிக்கடி மொட்டை மாடியில ஜாலியா பார்ட்டி நடத்தி டிரிங்ஸ் பண்ணி என்ஜாய் பண்ணுவோம். இதெல்லாம் உங்களுக்கு ஆகாதே... நீங்க வேற வீடு பார்த்துக்கோங்க...’’
மயக்கமே வந்தது பரந்தாமனுக்கு!

கே. ஆனந்தன்